இந்த உலகத்தில் அறிவுள்ள மனிதன், தனது புலன்கள் மூலமாக அறியப்படும் பொருள்களைப் பற்றிய ஞானம் அடைகிறான். இதன் மூலமாக வாசனை அளிக்கக்கூடிய சந்தனம் மற்றும் மலர்கள் ஆகியவற்றின் மூலமாக நன்மை அளிக்க வல்ல பொருட்களை ஏற்றுக் கொண்டும், விஷம் நிறைந்த பொருள்களை விளக்கவும் செய்கிறான். மேலும், மரம் முதலான பொருள்களை விரும்ப வெறுக்கவும் செய்யாமல் நடுநிலையாக இருக்கிறான். இப்படிப்பட்ட புருஷார்த்தங்களில் அர்த்தம் அதாவது செல்வம், காமம் அதாவது விருப்பம் ஆகிய இரண்டும் கண்களால் கண்டு உணர இயலும். இதனைப் பிரத்யக்ஷம் என்று சொல்லலாம். சிலவை யூகம் மூலமாகவே அறியப்படுகின்றன. இந்த இரண்டையும் கைவிட வேண்டும். எவற்றினை என்றால் மேலே சொல்லப்பட்ட அர்த்தம் மற்றும் காமம் ஆகிய இரண்டு நிலைகளை.
ஏனென்றால் அவை நமக்கு தீமையை ஏற்படுத்த வல்லவை. மயக்கத்தினை உண்டாக்க வல்லவை. நிலையற்றவை. துன்பங்களை தரக்கூடியவை. எளிதில் அடைய முடியாதவை. இதனை விடுத்து இதற்கு மாற்றாக இரண்டு நிலைகள் உள்ளன. அவை தர்மம் மற்றும் மோக்ஷம் என்பன. இவை இரண்டையும் நாம் சாஸ்திரங்கள் மூலமாகவே அறிய முடியும். இவை அர்த்தம் மற்றும் காமம் ஆகிய இரண்டிற்கும் நேரானவை;மாறானவை. இவை முழுவதுமாக மங்களகரமாக உள்ளுவையாகும். ஆகவே சாஸ்திரங்கள் மூலம் கூறப்படும் உபதேசங்களையும் கைக்கொள்ள வேண்டும். இதனை மகாபாரதம் பீஷ்ம பருவத்தில்”ஸத்யம் ஸத்யம் புன: ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே வேதா சாஸ்த்ராத் பரம் நாஸ்தி த தைவம் கேசவாத் பரம்“என்று சொல்லப்பட்டுள்ளது. இதனை சத்யம், சத்யம்,சத்யம் என்று கைகளை உயர்த்தி கூறப்படுகிறது. வேதங்களைக் காட்டிலும் உயர்ந்த பிரமாணம் கிடையாது. கேசவனை காட்டிலும் உயர்ந்த தெய்வம் கிடையாது.. இதுவே அதன் பொருள்
நாம் அறிய வேண்டிய 14 பிரிவுகளில் மிகவும் உயர்ந்தவை வேதங்களே ஆகும். இவற்றில் கூறப்பட்டுள்ள ஆழ்ந்த பொருளை, இதிகாசம் மற்றும் புராணம் மூலமாகவே அறிய இயலும்.
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் அடங்கிய மகாபாரத அத்தியாயம் கீழே கூறப்பட்டுள்ள பல காரணங்களால் மிகவும் உயர்ந்தது ஆகும்..
1. இதுவே மகாபாரதத்தின் சாரம்.
2. இதனை பல ரிஷிகளும் பல காலமாக போற்றி உள்ளார்கள்.
3. வேதங்களை தொகுத்தவரான வேதவியாசரே இதனையும் தொகுத்துள்ளார்
4. பீஷ்மரால் மிகவும் உயர்ந்தது என கொண்டாடப்பட்டது
5. முன்னோர்கள் அனைவராலும் சாஸ்திரங்களுக்குள் மிகவும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டது.
6. ஸ்ரீமத் பகவத் கீதை உள்ளிட்ட பல சாஸ்திரங்கள் போன்ற ஆழ்ந்த தத்துவங்களை உள்ளடக்கியது.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருசேத்திரத்தில் நடைபெற்ற போரில் அர்ஜுனனின் பல அம்புகளால் தேகம் முழுவதும் துளைக்கப்பட்டு, களைப்புற்று பிதாமகர் பீஷ்மர் யுத்தகளத்தில் சாய்கின்றார்.. அவரது தேகத்தில் துளைத்து நின்ற அம்புகளை அவர் படுக்கையாக கொண்டு சாய்கிறார். அர்ஜுனிடம் விடுத்த வேண்டுகோளின்படி அந்த அம்புகளே படுக்கைகளாக ஆக்கப்பட்டது. அந்த நிலையில் அங்கே கண்ணன் தோன்றி மிகப்பெரும் விதத்துடன் அவரது வீரத்தினை பார்க்கின்றார். கண்ணனை கண்டவுடன் அவரது உண்மை தோற்றமான மகாவிஷ்ணுவின் விஸ்வரூப தரிசனம் பீஷ்மருக்கு கிடைக்கிறது. காணற்கரிய அந்த தரிசனத்தை கண்ட பீஷ்மர் பக்தி பரவசம் பெற்று அந்த இடத்திலேயே மகாவிஷ்ணுவுக்கு ஆயிரம் நாமங்களினால் ஸ்தோத்திரம் செய்கின்றார். அந்த பகவான் நாமா ஒவ்வொன்றும் அவனது பெருமைகளை கூறும்.. அந்த விஷ்ணு சகஸ்ர நாமத்தில் கூறப்பட்டுள்ள பரந்தாமனின் திருப்பெயர்களை பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
தொடரும்..