இறைவனான சிவபெருமான் 64 வடிவங்களைக் கொண்டு சது சஷ்டி மூர்த்திகள் என்ற பெயருடன் விளங்குகின்றார். அஷ்டாஷ்ட விக்ரக லீலை என்கின்ற கேசி முனிவரின் நூலில் சிவபெருமானின் 64 வடிவங்களும் அடியார்களுக்கு சிவபெருமான் அருளிய அமையும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈக்காடு ரத்தினவேல் முதலியார் என்பவர் சிவ பராக்கிரமம் என்னும் தமிழ் நூலில் இந்த 64 வடிவங்கள் பற்றியும் கூறியுள்ளார்.
சதாசிவ வடிவத்தில் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களில் இருந்து முகத்திற்கு ஐந்தாக 25 வடிவங்கள் தோன்றின. இவை மகேஸ்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்த மகேஸ்வரமூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து 64 வடிவங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலிங்க மூர்த்தி

சைவ சமயத்தின் முழு மதக் கடவுளான சிவன் லிங்க வடிவமாக ஆலயங்களில் காட்சி தருகின்றார். இது வடிவம் உடைய, வடிவம் அற்ற என்கின்ற இரண்டு நிலைகளுக்கு இடைப்பட்ட அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்று நிலைகளில் சிவபெருமானை இந்துக்கள் வழிபடுகின்றார்கள். இவற்றுள் சிவலிங்கம் அருவுருவ நிலையாகும்.
லிங்கம் என்பதற்கு வளம் என்பதான குறியீடாக, இது கொள்ளப்பட்டு பழங்காலத்தில் வழிபட்டு வந்ததாக பொதுவாக கருதப்படுகிறது.
லிங்க வடிவம் ருத்ர பாகம், விஷ்ணு பாகம் மற்றும் பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்கவாடியின் மேல் பாகமாகும். நடுவில் உள்ளது விஷ்ணுபாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம்..
ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்ர பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும். இந்த ருத்ரபாகத்திற்கு மட்டுமே பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த ருத்ர பாகத்தின் மீது நீர்படும்படி தாரா பாத்திரம் அமைக்கப்படுகிறது. வெப்பம் குறைவான காலங்களில் நாகாபரணம் சூட்டப்படுகிறது.. விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.
பஞ்சலிங்கங்கள் என்பவை 1) சிவ சதாக்கியம் 2) அமூர்த்தி சதாக்கியம் 3) மூர்த்தி சதாக்கியம் 4) கர்த்திரு சதாக்கியம் 5) கன்ம சதாக்கியம் என்பவயாகும்.
இவற்றில் கன்ம சதாக்கியமாகிய பீட்டமும் லிங்க வடிவமும் இணைந்து வழிபட்டோரால் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. அவை அவையாவன:
1. சுயம்புலிங்கம்-தானாக தோன்றிய லிங்கம்
2. தேவி லிங்கம்-தேவி சக்தியால் வழிபடப்பட்ட லிங்கம்
3. காண லிங்கம்-ஆனை முகத்தவராலும் ஆறுமுகத்தவராலும் வழிபடப்பட்ட லிங்கம்
4. தைவிகலிங்கம்-மும்மூர்த்திகளான பிரம்மா திருமால் மற்றும் ருத்ரன் ஆகியோராலும் இந்திரனாலும் வழிபடப்பட்ட லிங்கம்.
5. ஆரிட லிங்கம்-அகஸ்தியர் போன்ற மனிதர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
6. ராட்சத லிங்கம்-ராட்சதர்களால் பூசை செய்யப்பட்ட லிங்கம்.
7. அசுர லிங்கம்-அசுரர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்
8. மானுட லிங்கம்-மனிதர்களால் பூஜை செய்யப்படும் லிங்கம்.
இவை தவிர பரார்த்தலிங்கம், சூக்ஷ்மலிங்கம், ஆன்மார்த்த லிங்கம், அப்ப லிங்கம், தேயுலிங்கம், ஆகாசலிங்கம், வாயு லிங்கம், அக்னி லிங்கம் என்று எண்ணற்ற கோயில்கள் உள்ளன..
சிவ வடிவங்கள் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக காணலாம்.
தொடரும்..