சென்ற பதிவில் இறுதியில் திருமாலின் ஐந்து வகையான பிரதிஷ்டைகளைப் பற்றி பாஞ்சராத்ர ஆகமத்தில் சொல்லப்பட்டதை அடுத்த பதிவில் தெரிவிப்பதாக தெரிவித்திருந்தேன். அதன் விவரம் வருமாறு:
ஸ்தாபனா என்பது பெருமாளை நின்ற திருக்கோலத்தில் அமைப்பது; வழிபடுவது.
அஸ்தாபனா என்பது அமர்ந்த திருக்கோலத்தில் அமைப்பது; வழிபடுவது.
ஸமஸ்தாபனா என்பது பள்ளிகொண்ட திருக்கோலத்தில் அமைப்பது; வழிபடுவது.
பரஸ்தாபனா என்பது வாகனங்களில் பல பல ரூபங்களில் அமைப்பது; வழிபடுவது.
பிரதிஷ்ட்டானா என்பது சன்மார்ச்சையுடன் அமைப்பது.
நமது பாரத தேசத்தில் 108 திவ்ய ஸ்தலங்களில் திருமால் மூன்று நிலைகளில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றார். அவைகள் நின்ற திருக்கோலம், அமர்ந்த திருக்கோலம், சயன திருக்கோலம் என்பவை.
பகவானை நின்ற திருக்கோலத்தில் வழிபடக்கூடிய ஸ்தாபனா என்ற நிலையில், 108 திவ்ய ஸ்தலங்களில், 67 நின்ற திருக்கோலத்தில் எம்பெருமான் எழுந்தருளி தரிசனம் தருகின்றார்..

இவற்றில்
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்-39
மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம்-12
தெற்கு நோக்கி நின்ற திருக்கோலம்-14
வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம்-2
இதற்கு அடுத்ததாக அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கும் தலங்கள் 17.

அவற்றுள்,
கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்-13
மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்-3
வடக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம்-1
தெற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலம் ஏதுமில்லை.
அடுத்ததாக சயனத் திருக்கோலத்தில் அமைந்த ஸ்தலங்கள் 24.

இவற்றுள்,
கிழக்கு நோக்கிய சயன திருக்கோலம்-18
மேற்கு நோக்கிய சயனத் திருக்கோலம்-3
தெற்கு நோக்கிய சயன திருக்கோலம்-3
வடக்கு நோக்கிய சயன திருக்கோலம் ஏதுமில்லை.
எம்பெருமானின் சயனத்திருக்கோலங்கள் பத்து வகைப்படும். அவையாவன:
1) ஜல சயனம் 2) ஸ்தல சயனம் 3) புஜங்க சயனம் அதாவது சேஷசயனம் 4) உத்தியோக சயனம் 5) வீர சயனம் 6) போக சயனம் 7) தர்பசயனம் 8) பத்ர சயனம் (பத்ர என்றால் ஆலமரத்து இலை) 9) மாணிக்க சயனம் 10) உத்தான சயனம்.
ஒரே சன்னதியில் நின்ற, அமர்ந்த, கிடந்த இன்னும் மூன்று திருக்கோளத்திலும் பகவான் சேவை சாதித்திருக்கிறார். அவ்வாறு அமைந்த ஸ்தலங்கள் உதாரணத்திற்கு திருநீர்மலை, திருக்கோஷ்டியூர், உத்திரமேரூர், மதுரை கூடலழகர் ஆகியோர் தலங்களை கூறலாம்.
பெருமாள் திருக்கோலத்தில் பெருமாள் ஒரு கரத்தை மேல் நோக்கி ஆசி கூறுவதைப் போல வைத்துக் கொண்டிருப்பார். இது அபய ஹஸ்தம். நான் உன்னை ரட்சிக்கிறேன் என்று பொருள். மற்றொரு கரத்தை தன் பாதங்களைக் காட்டுவதைப் போல கீழ்நோக்கி வைத்திருப்பார். நீ என் பாதங்களில் சரணாகதி அடை என்று வழிகாட்டுகிறார். கும்பகோணத்தின் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பெருமாள் தனது வலது கரத்தினை பாதத்தினை நோக்கி காட்டுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும். அந்த திருக்கரத்தில்,“மாமேகம் சரணம் வ்ரஜ”என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கும்.
நான் ஒருவனே என்னை சரண் அடைவாய் என்பது அதன் பொருள். இது சரணாகதி தத்துவம்.

இவ்வாறு பல நிலைகளில் காட்சி தந்து நமக்கு அருளக்கூடிய அந்த எம்பெருமான் நம்மை நற்கதிக்கு அழைத்துச் செல்ல ஆசைப்படுகின்றார். நாம்தான் அதனை புரிந்து கொள்வதில்லை. இந்த உலக பந்தத்தினை விட்டொழித்து அவன் பாதமே சரணம் என்று, என்று நாம் நினைக்கின்றோமோ, என்று நாம் உணர்கின்றோமோ அந்த நாள்தான் நமது வாழ்வில் சிறந்த நாளாக இருக்கக்கூடும்.
எம்பெருமானின் திருநாமங்கள் பற்றி அடுத்து வரும் பதிவுகளில்”மனத்துக்கு இனியான்“என்ற தலைப்பில் விரைவில் தங்களை சந்திக்கின்றேன்.
நன்றி. வணக்கம்.