பொதுவாக சாதாரண மக்களுக்கு பரமபதம் செல்வது என்பது இயலாத ஒன்று.. ஏனென்றால், நாம் நித்தியசூரிகள் இல்லை. வியூகத்தை காண்பதற்கு நாம் தேவர்களும் இல்லை. விபவ அவதாரங்களான, ராமர் மற்றும் கிருஷ்ணா அவதார காலத்தில் நாம் அந்த தேசங்களில் பிறந்தோமா, அல்லது அவர்களை நாம் இனம் கண்டு கொண்டோமா? வழிபட்டோமா என்பதை உணர முடியாது. நமக்குள்ளே இறைவன், அந்தர்யாமியாக இருப்பதை உணரும் ஆற்றலும் நம்மிடம் இல்லை. ஆகவேதான் மரம், கல், பொன் மற்றும் வெள்ளி போன்ற உணவகங்களில் இறைவனை திருமேனிகளை படைத்து அவற்றை கோயில்களில் வைத்து வழிபாடு செய்கின்றோம். இதற்கு அர்சாவதார வழிபாடு என்று பெயர்.. விக்ரக ஆராதனை, உருவ வழிபாடு என்றும் இதனை சொல்வார்கள். பக்தர்கள் விரும்பிய உருவங்களில் இந்த அச்சாவதார வடிவங்களில் பகவான் கண்ணை வழிகாட்டியது ஒன்று. இந்த கலியுகத்தில் வாழ்பவர்களுக்கு, இறைவனை நினைப்பதற்கும், தரிசனம் செய்வதற்கும், பூஜைகள் செய்து கடைத்தேறுவதற்கும் அர்ச்சாவதாரம் போல எளிமையான வேறு வழிகள் எதுவும் இல்லை.
அர்ச்சாவதாரம் என்பது பகவானு டைய,அளக்க முடியாத, பெரும் கருணையின் மறுவடிவம். சர்வ சக்தி படைத்த அவன் சக்தியே இல்லாத ஒரு குழந்தையாக மாறி அர்ச்சகர்களால் குளிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் கூட எதிர்பார்த்து காத்திருப்பது அவனுடைய கருணையின் வடிவம் அல்லவா? தன்னை ஆராதிப்பவர்களின் விருப்பத்தின்படி நீராடலையும், நீர்ப்பருகுவதையும் செய்வதோடு, அவர்கள் விருப்பத்தின்படி கோவிலில் இருந்து வீதிகளுக்கு உற்சவமூர்த்தி ஆக எழுந்தருளி சேவை சாதிக்கின்றான்.
பூமியில் பகவான் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி அருள்பாலிக்கும் திருத்தலங்களுக்குச் சென்று அவனை தரிசித்து முக்தி பெறுவதே பரமபாகவதனின் கடமையாகும். அப்படித்தான் ஆழ்வார்கள் நமக்கெல்லாம் முன்னோடியாக பகவான் வீற்றிருக்கும் திருத்தலங்களுக்கு சென்று அவனை தரிசித்து பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர். அப்படி மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை மொத்தம் இந்தியாவில் 108. இவற்றில் இரண்டு திவ்ய தேசங்கள் இந்த நிலவில் பார்க்க முடியாதவை. அவற்றுள் ஒன்று பராமபதம்; மற்றொன்று பாற்கடல். எஞ்சியுள்ள 106 திவ்ய தேசங்களில் வடநாட்டு ஸ்தலங்கள் 12.








இந்த 108 திவ்ய தேசங்கள் எங்க இருக்கின்றன என்பதனை ஒரு பழம் பாடல் தெரிவிக்கின்றது.
ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதிமூன்றாம் மலைநாடு-சீர் நடு நாடு ஆறோடு ஈரெட்டு தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு கூறு திருநாடு ஒன்றாக் கொள்
அதாவது சோழநாட்டில் 40 திவ்ய தேசங்கள்
பாண்டி நாட்டில் 18 திவ்ய தேசங்கள்
மலைநாட்டில் 13 திவ்ய தேசங்கள்
நடுநாட்டில் இரண்டு திவ்ய தேசங்கள்
தொண்டை நாட்டில் 22 திவ்ய தேசங்கள்
வடநாட்டில் 12 திவ்ய தேசங்கள்
திருநாட்டில் ஒரு திவ்யதேசம்.
ஆக மொத்தம் 108 திவ்ய தேசங்கள். இந்த திவ்ய தேசங்களில் 16 திவ்ய தேசங்களை சேவித்தவர்களை, இந்த நிலவுலகத்தில் வாழ வேண்டிய காலம் முடிந்ததும் எம்பெருமானே மற்ற இரண்டு திவ்ய தேசங்களுக்கும் அழைத்துச் சென்று சேவை சாதிக்கிறார் என்பது வைணவத்தின் தலையாய நம்பிக்கை..
திருமாலின் ஐந்து வகையான பிரதிஷ்டைகளைப் பற்றி பாஞ்சராதர ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.. அவைகளைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
தொடரும்..