
ஸ்ரீ வைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீ ஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீ மகாலட்சுமியை மங்கலத்துக்கெல்லாம் மங்களமானவள் இன்று புகழ்ந்து பாடுகின்றார். மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம் மற்றும் முக்தி தருபவள்.. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹிரண்மையி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும் என்பது ஒரு நம்பிக்கை. லட்சுமி அனைவருக்கும் நன்மை தருபவள் இன்று அதர்வான வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
லட்சுமி தேவி வைகுண்டத்தில் ரமாதேவி என்றும், சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி என்றும், பாதாள லோகத்தில் நாகலட்சுமி என்றும், விளங்குகின்றாள். அவள் ராஜாக்களிடம் ராஜலட்சுமியாகவும், விலங்குகள் இடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீத்தி லக்ஷ்மி ஆகவும், வேதாந்திகளிடத்தில் தயா லட்சுமி யாகவும் இருக்கின்றாள். லட்சுமியின் பெருமையை ஸ்ரீ சூக்தம், ஸ்ரீ ஸ்துதி, கனகதாரா ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.
மகாலட்சுமிக்கு தன் மார்பில் இடமளித்து அவள் விருப்பம் போல் நடக்கிறார் பகவான் விஷ்ணு. அது போலவே மாலவன் மார்பில் இடம் பெற்று, அவரது மனம் போல் நடக்கின்றாள் மகாலட்சுமி. ஆகவே இவர் இருவரையும் தனித்தனியே வணங்குவதை விட லட்சுமி நாராயணனாக ஒருசேர வழிபடுவதே ஒப்பற்ற பலன் தரும் என்பது ஒரு ஐதீகம்.
நாராயண பட்டத்திரி குருவாயூரில் எழுந்திருக்கும் குருவாயூரப்பனைப் பார்த்து,”ஹே குருவாயூரப்பா! பிராட்டி கண்களை உருட்டி உருட்டி உன்னை மட்டுமா பார்க்கிறாள்? உன்னுடைய கல்யாண குணங்களைக் கேட்பார்கள் மற்றும் ரசிப்பவர்களின் இல்லங்களில் அவள் நிரந்தரமாக குடி கொள்கிறாள்”இன்று மகாலட்சுமியின் மகிமை பற்றி கூறுகிறார்.
ஒரு முனிவர் காட்டில் கடுமையாக தவம் புரிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மகாலட்சுமி”ஹே! முனிவரே! உன்னோடு நான் சில காலம் வாசம் செய்கிறேன். அப்போது உனக்கு ராஜ மரியாதை கிடைக்கும்”என்று சொல்கிறாள். அதற்கு அவரோ,”நானோ ஒரு சன்னியாசி.. எனக்கு எதற்கு ராஜ மரியாதை? தேவை இல்லையே என்றார்”. அதற்கு மறுமொழியாக மகாலட்சுமி,”நீ வேண்டாம் என்று சொன்னாலும் நான் உன்னோடு வாசம் செய்யத்தான் போகிறேன்” என்று கூறி செல்கிறாள்.
தாயார் சென்ற பிறகு முனிவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு மூட்டையை பார்த்தார். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டார். பிறகு,”சரி! நம்மோடு லட்சுமி வாசம் செய்கிறேன் என்று சொன்னாலே அதனை பரீட்சித்து பார்ப்போம்”என்று எண்ணிக்கொண்டு அந்த ஊர் அரசரிடம் சென்றார். சென்றவர் நேராக அந்த அரசரின் கிரீடத்தை எட்டி உதைத்தார்.’ராஜாவின் கிரீடத்தை எட்டி உதைத்து இருக்கிறோம், நமக்கு ராஜ மரியாதை இப்பொழுது கிடைக்கிறதா’பார்ப்போம் என்று நினைத்த முனிவருக்கு, நிஜமாகவே ராஜமரியாதை கிடைத்தது. காரணம், அந்த கிரீடத்திலிருந்து ஒரு பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது. ராஜா உள்ளம் மகிழ்ந்து,”ஹே முனிவரே! நீங்கள் முக்காலமும் உணர்ந்தவர். என் உயிரை காப்பாற்றி விட்டீர்கள்”என்ன முனிவரை கொண்டாடி அவருக்கு ராஜ மரியாதையை அளித்தார். இவ்வாறு அவ்வப்போது முனிவர் செய்து வந்த செய்கைகளுக்கு எல்லாம் அவருக்கு ராஜ மரியாதை கிடைத்தது.
ஒரு நாள் மகாலட்சுமி முனிவரின் கனவில் தோன்றி”முனிவரே! இன்றுடன் உங்களை விட்டு பிரியப் போகிறேன்”என்று கூறி மறைந்தார். அடுத்த நாள் முனிவர், ராஜாவுக்கு கொடுத்த ஒரு பழம், நாகம் தீண்டிய பழமாக மாற, அன்றோடு அவரது ராஜ மரியாதை என்பது மறைந்து அவர் மீண்டும் காட்டுக்கே திரும்பி விட்டார்.. ஆக லட்சுமி கடாட்சம் என்பது ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் அவ்வளவு முக்கியமான ஒன்று. அது இருந்து விட்டால் எல்லாம் கிடைத்துவிடும்.
நல்லதை நினைத்து, நல்லதை செய்து, நல்வழி நடப்போரிடம் தான் மகாலட்சுமி தானே விரும்பி வந்து சேர்வாள். எண்ணத்தை மேலானதாக்கி அவள் அருளால் எல்லாம் நலங்களையும் நாம் பெறலாம்.
திருமகளின் திருவருள் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாம்..
தொடரும்…