
சிவபெருமான் அருவம், அரு வுருவம், உருவம் என்ற மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத் திருமேனி சத்தர் என்றும், அருவுருவ திருமேனி பரம்பொருள் என்றும், உருவத்திருமேனி பிரவிருத்தர் என்றும் அழைக்கப்படுகிறது. அருவுருவமாக லிங்கமும், மகேஸ்வர மூர்த்தங்கள் மற்றும் சிவ உருவ திருமேனிகள் ஆகியவை உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
தடத்த நிலையில் ஈசன் கொள்ளும், 64 வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. இந்த வடிவங்கள் ஒவ்வொன்றையும் பற்றி பின்னர் பார்க்கலாம். இந்த 64 வடிவங்களில் சிறப்பான 25 சிவமூர்த்ங்கள், மகேஸ்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிவபெருமானை மூலவராகக் கொண்டு, உலகம் முழுவதும் கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாக, இந்தியா, இலங்கை, நேபாளம் மற்றும் கம்போடியா என்று பல நாடுகளை குறிப்பிடலாம்.. இவற்றினை விடவும் பாரத கண்டம் என்று அழைக்கப்படுகின்ற இந்தியாவில் அனேக சிவாலயங்கள் உள்ளன. அவைகள் எண்ணிக்கை அடிப்படையில், பஞ்ச பூத ஸ்தலங்கள், பஞ்ச கேதார ஸ்தலங்கள், பஞ்ச தாண்டவ ஸ்தலங்கள், பஞ்ச க்ரோச ஸ்தலங்கள், ஆறு ஆதார ஸ்தலங்கள், சப்தவிடங்க ஸ்தலங்கள், சப்த கரை சிவ ஸ்தலங்கள், சப்த கைலாய ஸ்தலங்கள், அட்ட வீராட்டன ஸ்தலங்கள், நவலிங்கபுரம், நவகைலாயங்கள் என்றும் சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு, தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத்திரு தலங்கள், தேவார வைப்புத்தலங்கள், திருச்சிற்றம்பலம் கோவை திருத்தலங்கள், திருவிசைப்பா திருத்தலங்கள், என்றும், வன விசேஷத்தலங்கள் என்றும், முக்தி தர வல்ல சிவஸ்தலங்கள், ஜோதிர்லிங்கஸ்தலங்கள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.
இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது காவிரி தென்கரைத்தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், பாண்டிய நாட்டுத் தலங்கள், கொங்கு நாட்டு தலங்கள், நடுநாட்டு தலங்கள், தொண்டை நாட்டுத் தலங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இவைகள் ஒவ்வொன்றையும் பற்றி தனித்தனியே இனிவரும் பதிவுகளில் காணலாம்..
தொடரும்..