பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்கள் என்பவை கிருஷ்ணருக்கான 5 ஸ்தலங்களாக கூறப்படுகிறது. இவை திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கோவிலூர் மற்றும் கபிஸ்தலம் ஆகும். இவைகள் அனைத்துமே ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு திவ்ய தேசங்களாக கருதப்படுகின்றன.
திருக்கண்ணங்குடி லோகநாத பெருமாள்


இந்த திருக்கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் என்கின்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கே மூலவர் லோகநாதர், சியாமள மேனிப் பெருமாள். உற்சவர் தாமோதர நாராயணன்.. தாயார் மூலவர் லோகநாயகி. உற்சவர் அரவிந்தவல்லி. இந்த திருக்கோயில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது.
“வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய வாளரவினணை
மேவி சங்கமார் அங்கைத்தடமலருந்திச் சாமமாமேனி
என்தலைவன் அங்கமாறு ஐந்து வேள்வி
நால்வேதம் அருங்கலைபயின்றுஎரி மூன்றும்
மங்கையால் வளர்க்கும் துளக்கமில் மனத்தோர்
திருக்கண்ணங் குடியுள் நின்றானே”
ஒரு பரந்த பரப்பில் ஐந்து அடுக்கு ராஜகோபுரத்துடன் இந்த கோவில் அமைந்துள்ளது. திருக்கோவில் தலவிருட்சம் மகிழம். தீர்த்தம் இராவண புஷ்கரணி தீர்த்தம்.
இந்த திருக்கோயிலுக்கு ஒரு தல வரலாறு உண்டு..
வசிஷ்ட முனிவர் வெண்ணெயால் கிருஷ்ணவிரகம் செய்து வழிபட்டு வந்தார். அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக அந்த விக்ரகம் உருகாமல் இருந்து வந்தது. ஒரு நாள் பகவான் கிருஷ்ணர் சிறுவனாக வசிஷ்டரின் வீட்டுக்குள் நுழைந்து அந்த வெண்ணை விக்கிரகத்தை சாப்பிட்டு விட்டு வெளியே ஓடினார். வெளியே ஓடிய சிறுவனை துரத்தி சென்றார் வசிஷ்டர்.. சிறுவன் ஓடிய வழியில், ஒரு மகிழ மரத்தடியில் சில மனிதர்கள் அமர்ந்து கிருஷ்ணரின் தியானம் செய்து கொண்டிருந்தனர். சிறுவனாய் வந்த கிருஷ்ணர் அவர்கள் பக்தியில் மகிழ்ந்து அவர்களுக்கு ஒரு வரம் தருவதாக சொல்ல, அவர்கள் கிருஷ்ணரை அந்த இடத்திலேயே தங்கி விடுமாறு வேண்டினர். கிருஷ்ணரும் அவ்வாறே அங்கு தங்கி விட்டார். துரத்தி வந்த வசிஷ்டரும், கிருஷ்ணன் நடத்திய லீலையை அறிந்து கொண்டார்.. இந்த நிகழ்வு நடந்ததாக கூறப்படும் இடம் தான் திருக்கண்ணங்குடி. இந்த இடத்தில் லோகநாத பெருமாள் கோவில் கோபுரத்துடன் எழுப்பப்பட்டது.
திருமங்கை ஆழ்வார் இந்த ஸ்தலத்தை 10 பாசுரங்களில் பாடியுள்ளார்..
கபிஸ்தலம் கஜேந்திர வரதர் கோவில்


தஞ்சை மாவட்டத்தில் கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த திருக்கோயில். இங்கே மூலவர் கஜேந்திர வரதன். கொடுத்தவர் தாமோதர நாராயணன். தாயார் மூலவர் ரமாமணி வல்லி, பொற்றாமரையாள். தாயார் உற்சவர் லோகநாயகி.
தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி, கபில தீர்த்தம்.
இந்த திருக்கோயிலுக்கும் தல வரலாறு உண்டு. கபி என்றால் குரங்கு என்று பொருள். ஸ்ரீ ஆஞ்சநேயர் கடுந்தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றார். எனவே கபிஸ்தலம் என அழைக்கப்பட்டது. இந்திரஜ்யும்னன் என்ற அரசன் சிறந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான். ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்து இருந்த போது, அவனைக் காண துர்வாச முனிவர் வந்தார். தன்னை மறந்து இருந்த நிலையில் துர்வாச முனிவரின் வருகையை உணரவே இல்லை அந்த அரசன். அதனால் கோபம் கொண்ட முனிவர்,”முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாக பிறப்பாய்”இன்று சாபம் கொடுத்து விட்டார். பின் தன்னை மன்னிக்கும்படி அந்த அரசன் அவரிடம் வேண்ட,”திருமால் மேல் பக்தி கொண்ட யானைகளுக்கு அரசனாக பிறந்து திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்” என்று கூறினார்.
ஒரு குளக்கரையில் இருந்த கூஹூ என்ற அரக்கன், குளத்தில் குளிக்க வருவோரை எல்லாம் காலை பிடித்து நீடி இழுப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு வந்த அகஸ்தியர் காலையும் அந்த அரக்கன் நீருக்குள் இழுத்து, அவர் அவனை முதலையாக வாழ சாபம் கொடுத்தார். தன்னுடைய செய்கைக்கு மனம் வருந்தி அகஸ்தியரிடம் மன்னிப்பு கோர, அவர் திருமால் மூலம் சாப விமோசனம் கிடைக்கும் என கூறினார்.
வழக்கம்போல் ஒருநாள் யானைகளின் அரசனான கஜேந்திரன் விஷ்ணுவை வழிபட தாமரை பூ எடுப்பதற்கு அந்த குளத்திற்கு சென்ற போது முதலியாக அங்கிருந்த அரக்கன், கஜேந்திரனின் ஒரு காலைக் கவ்விக் கொண்டான். காலை விடுவித்துக் கொள்ள முடியாத கஜேந்திரன் திருமாலை நோக்கி,”ஆதிமூலமே காப்பாற்று!”என்று அபயக் குரல் கொடுத்தது.. திருமாலும் காட்சி தந்து முதலையை, தனது சக்கராயிட்டால் கொன்று கஜேந்திரனை காப்பாற்றினார். முதலை, யானை இரண்டிற்குமே சாப விமோசனம் கிடைத்தது. இவ்வாறு யானைக்கு திருமால் அருளிய ஸ்தலமே கபிஸ்தலம் ஆகும்.
இங்கே திருமழிசை ஆழ்வார் இந்த ஸ்தலம் குறித்து ஒரே ஒரு பால் பாசுரம் பாடியுள்ளார்.
” கூற்றமும் சாரா கொடுவினையும் சாரா
தீ மாற்றமும் சாரா வகை அறிந்தேன்
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் கடல் கிடக்கும்
மாயன் உரைகிடக்கும் உள்ளத்து எனக்கு”
நான்முகன் திருவந்தாதி
இங்கு கபிஸ்தலம் என்ற காவிரி கரை திவ்ய தேச பெருமாளையே “ஆற்றங்கரை கடக்கும் கண்ணனை” என்று ஆழ்வார் கூறுகின்றார்.
மற்ற ஸ்தலங்கள் பற்றி அடுத்து வரும் பதிவுகளில் பார்க்கலாம்.
தொடரும்..