
தேவி என்ற சொல் இறைத்தன்மையை பெண்ணின் வடிவமாக போற்றும் ஒரு சொல்லாகும். தேவி வழிபாடு என்பது இந்து சமய வழிபாட்டின் ஒரு அங்கமாக உள்ளது. இந்து சமயத்தின் பிரிவான சாக்தத்தில் பெண்ணான சக்தியை முதன்மை தெய்வமாக வழிபடுவார்கள்..
முப்பெரும் தேவியர்கள் என்று அழைக்கப்படுகின்ற சரஸ்வதி, லட்சுமி,மற்றும் பார்வதி ஆகியோர்களை முறையாக தமிழில், கலைமகள், அலைமகள், மலைமகள் என்று அழைப்பார்கள்.. லக்ஷ்மி தேவி தூய தமிழில் திருமகள் என்று அழைக்கப்படுகின்றாள். திரு என்ற சொல்லுக்கு செல்வம் என்ற ஒரு பொருள் உண்டு. ஆகவே செல்வத்தினை வாரி வழங்கக்கூடிய கருணைத்தன்மையைக் கொண்டவள் திருமகள் என்ற பொருளில் லட்சுமி தேவியை திருமகள் என்று அழைக்கின்றோம். இந்த தேவி ஸ்ரீமன் நாராயணனின் துணைவியாக சித்தரிக்கப்படுகின்றார். மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் அவருடன் கூடவே அவருக்கு உறுதுணையாக சீதை, ருக்மணி, பத்மாவதி போன்ற அவதாரங்களையும் திருமகள் எடுத்து இருக்கின்றார்..
மகாலட்சுமியை வடமொழியில் ஸ்ரீ என்று சொல்வார்கள். இதுதான் தமிழில் திரு என்று அழைக்கப்படுகின்றது.
அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த தருணத்தில் அதிலிருந்து எண்ணற்ற பொருட்கள் மற்றும் இறைகளும் வெளிவந்தன.. அவற்றில் ஒன்றாக லக்ஷ்மி தேவியும் தோன்றினார். லட்சுமி என்ற சொல்லுக்கு லட்சணம் பொருந்தியவள் என்று பொருள். இது தவிர, பத்மா, பத்மப்பிரியா, பத்மா சுந்தரி, கமலா, விஷ்ணு பிரியா, ஐஸ்வர்யா, வைஷ்ணவி, நாராயணி, பார்கவி, ஜலஜா, மாதவி, சுஜாதா, ஸ்ரேயா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றார்.
லட்சுமியின் வடிவங்களாக அஷ்டலட்சுமி என்னும் எட்டு வடிவங்களும் ஷோடச லட்சுமி என்று 16 வடிவங்களும் சமய நூல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
லட்சுமியின் வடிவமானது ஆதி லக்ஷ்மி, தான்யலக்ஷ்மி, தைரிய லட்சுமி, கஜலக்ஷ்மி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி என்று எட்டு வடிவங்களாக காணப்படுகின்றது.
மகாலட்சுமிக்கு என்று குறிப்பாக சில இடங்களில் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவைகள்
*பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவில் சென்னை
*பத்மாவதி தாயார் கோயில் திருச்சானூர்
*மருதாத்தூர் ஸ்ரீ மகாலட்சுமி கோயில் (திருவனந்தபுரம்)
*அஷ்டலட்சுமி கோயில் ஹைதராபாத்
*மகாலட்சுமி கோயில் கோலாப்பூர்
*மகாலட்சுமி கோயில் மும்பை
*மகாலட்சுமி கோயில் பெங்களூர்
*மகாலட்சுமி கோவில் ஈச்சனாரி கோயம்புத்தூர்
*மகாலட்சுமி கோவில் ஜான்சி
*அதிர்ஷ்ட லக்ஷ்மி திருக்கோயில் எட்டிக்குட்டைமேடு சேலம்..
திருமகளின் திருவருள் குறித்து அடுத்த பதிவில் காணலாம்.
தொடரும்…