
மனிதர்களில் அதமன், மத்திமன், உத்தமன் என்று மூன்று வகைகள் உண்டு. அதமன் தான் வாழ பிறரைக் கெடுப்பவன். தான் வாழ்ந்து பிறரை வாழ வைப்பவன் மத்திமன். பிறருக்காக ஏச்சும் பேச்சும் கேட்டுக் கொண்டு அவர்களை வாழ வைப்பவன் உத்தமன். இந்த வகையில் பகவான் உத்தமன் ஆகின்றான்.
எப்படி என்று கேட்போமேயானால் அதற்கு பெரியவாச்சான் உரை தக்க பதிலினை அளிக்கின்றது. மூன்றடி மண் கேட்டு மூவுலகங்களையும் அளந்து சக்கரவர்த்தி மகாபலியை ஏமாற்றி விட்டான். தானம் கேட்டு வந்த போது சிறுவனாக இருந்ததும், தானம் கொடுத்ததும் உலகளந்த பெருமானாக மாறியும் விட்டான். இது அநியாயம் அக்கிரமம் என்று பலவாறாக மற்றவர்கள் பகவானை கேலி செய்வதை பொறுத்துக் கொண்டு, மகாபலிக்கு மோட்ச சாம்ராஜ்யத்தை வழங்கி இருக்கின்றான். அதனால் அவனை உத்தம என்று அழைக்கலாம் என்று பெரியவாச்சன்பிள்ளை கூறி இருக்கின்றார்.
நமது புண்ணிய பூமி ஆன பாரத தேசத்தில் பல்வகையான சமயங்கள் தோன்றி வளர்ந்து இன்றளவும் இருக்கின்றன. அவற்றுள் விஷ்ணு சமயம் என்று அறியப்படுகின்ற வைஷ்ணவம் என்பது மிகவும் தொன்மையான ஒன்றாகும். புருஷோத்தமனான சீமன் நாராயணனை முன்னறி தெய்வம் ஆகக் கொண்டு உய்விக்க வந்த மாபெரும் நதியே வைஷ்ணவ சமயமாகும்.
விஷ்ணு என்ற பதத்திற்கு நீக்கமற எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பவன் என்று பொருள். பரம்பொருளான நாராயணனுக்கு விஷ்ணு மற்றும் வாசுதேவன் என்ற இதர பெயர்களும் உண்டு. இந்த அனைத்து பெயர்களுமே பகவானின் நீக்கம் வரை எங்கும் நிறைந்திருக்கின்ற வியாபக தன்மையை புலப்படுத்துகிறது.
மனித வரலாற்றில் மிகப் பழங் காலம் முதலே வேதநெறி தழைத்தோங்கி இருக்கின்றது. அந்த வேதநெறியில் மலர்ந்த சமயங்களில் வைஷ்ணவம் தனிச்சிறப்பு பெற்றுள்ளது. ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு காட்டில் திரிந்த ஆயர்பாடி மக்கள் முதல் ஆதிமூலத்தை தன் அறிவு திறமையால் அகழ்ந்து எடுத்து வெளியிட்ட ரிஷிகள் வரை அனைவரையும் வைஷ்ணவம் சமநோக்கோடு அன்பு செலுத்தி அரவணைத்து செல்கின்றது.
தனது அவதாரங்களில் மச்சமாகவும் விலங்காகவும், அதிலும் குறிப்பாக எல்லோரும் வெறுக்கப்படும் வராக அவதாரத்தையும் எடுத்து தான் எங்கும் நிறைந்திருப்பவர் என்று உலகுக்கு உணர்த்துகின்றார்..
இந்த பரம்பொருளான பகவான் ஸ்ரீமன் நாராயணனுக்கு தரிசனம் அளிப்பதற்காக ஐந்து நிலைகளில் காட்சி தருகின்றார். அவை பரம், வியூகம், விபவம், அந்தர்யா மித்துவம், மற்றும் அர்ச்சை என்பன ஆகும்.
பரமபதத்தில் பகவான் ஸ்ரீதேவி, பூதேவி, மற்றும் நீளாதேவி சமேதராக எழுந்தருளி யிருக்கின்றார்.. இங்கு இருப்பவர்களுக்கு பசி, தாகம், தூக்கம், களைப்பு ஆகிய எதுவும் கிடையாது.. இங்கு நித்தியசூரியில் இருந்து கொண்டு பகவானுக்கு கைங்கரியம் செய்து பகவானின் கல்யாண குணங்களில் ஈடுபட்டு ஆனந்தமாக வாழ்கிறார்கள்.. இந்த நிலை “பரம்” என்று அழைக்கப்படுகின்றது.
அடுத்தது வியூகம்.. வியூகம் என்றால் விரிவுபடுத்துதல் என்ற பொருள். பரமபதத்தில் இருக்கின்ற பகவான் அங்கிருந்து புறப்பட்டு பாற்கடலில் பக்தர்களின் தரிசனத்திற்காக இறங்கி வருகின்றார். ஆதிசேஷனை படுக்கையாகக் கொண்டு, ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக யோக நித்திரை செய்கின்றார்.. இந்த நிலை வியூகம் எனப்படுகிறது.
கிழக்கு நோக்கி சிரிப்புடன் கூடிய வாசுதேவனாகவும்,
தெற்கு நோக்கிய சிங்கமுகம் கொண்ட சங்கர்ஷனனாகவும்,
வடக்கு நோக்கிய வராக முகம் கொண்ட பிரதியும்னனாகவும்,
மேற்கு நோக்கிய ருத்ர முகம் கொண்ட அனிருத்னாகவும்
பகவான் தம்மை வியூகப்படுத்தி, சகல திசைகளையும் காக்கிறார் என்பது ஐதீகம். பிரளய காலத்தில், வியூக வாசுதேவனுடன் மற்ற மூன்று உருவங்களும் ஐக்கியமாகிவிடும்.
அடுத்தது விபவம் எனப்படுவது. இதற்கு இறங்கி வருதல் என்று பொருள். பக்தர்களை காப்பதற்காகவும் தர்மத்தை நிலைநாட்டவும் பகவான் இன்று மண்ணுலகுக்கு இறங்கி வருவதே அவதாரங்கள். ஸ்ரீ ராமனாகவும், ஸ்ரீ கிருஷ்ணனாகவும் பகவான் பூவுலகில் தோன்றிய அவதாரங்களை விபவம் என்று அழைப்பார்கள்.
இந்த அவதாரங்கள் பூர்ணாவதாரம், அமிசாவதாரம், ஆவேச அவதாரம் என வகைப்படும். இவற்றில், ராம, கிருஷ்ண, வாமன மற்றும் பரசுராம அவதாரங்கள் பூர்ணா அவதாரங்கள் ஆகும். மச்சம் கூர்மம் போன்றவை அமிசாவதாரம். நரசிம்ம அவதாரம் ஆவேச அவதாரம் ஆகும்.
அடுத்தது அந்தரியாமத்துவம். இதில் ஒவ்வொரு ஜீவாத்மாவின் உள்ளே இருந்து கொண்டு பகவான் அதைத் தாங்கி, இயக்கி வழிநடத்திக் கொண்டிருக்கிறான். பக்தர்களின் ஞானிகளின் உள்ளிருந்து தன்னை அவ்வப்போது வெளிப்படுத்துகிறான். சில நேரங்களில் மனிதர்கள் மகத்தான காரியங்களை செய்கின்றார்கள். ஆபத்தான நிலையில் மற்றவர்களுக்கு உதவுகின்றார்கள். அந்த ஆபத்திலிருந்து விலகிய பிறகு காப்பாற்றப்பட்ட மனிதர்கள் உதவியவர்களை “கடவுள் போல வந்து காப்பாற்றினீர்கள்”என்று நன்றி தெரிவிப்பார்கள். அந்த இடத்தில் தான் பகவான் அந்தர்யாமித்துவோமாக இருக்கின்றான்..
அடுத்தது அர்ச்சை.. இறைவனை வழிபட அவருக்கு ஒரு உருவம் தேவை. வெற்றிடத்தினை வழிபட நாம் யாவரும் எல்லா நிலைகளும் கடந்த பரமாத்மாக்கள் அல்ல. நமக்குள்ள இறைவன் அந்தரியாமியாக இருப்பதை உணரும் ஆற்றலும் நமக்கு இல்லை. ஆகவே தான் மரம், கல், உலோகம் போன்ற பொருட்களில் இறைவனின் திருமேனியை செய்து அவற்றினை ஆலயத்தில் வைத்து வழிபாடு செய்கின்றோம். இதற்கு அர்சாத்தவதார வழிபாடு என்று பெயர். விக்கிரக ஆராதனை உருவ வழிபாடு என்றும் இதை சொல்வார்கள்..
இனி அர்ச்சாவதாரத்தின் பெருமைகளையும், அந்த அர்சாவதாரமாக எழுந்தருளிகளுக்குள்ள பகவான் அருள்பாலிக்கும் திருத்தலங்கள் பற்றிய சிறு விவரங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
தொடரும்..