பஞ்ச நாராயண க்ஷேத்திரங்கள் கர்நாடகாவில் அமைந்துள்ளன. ஹொய்சொள நாட்டின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த திருக்கோயில்கள் ஹோய்சொள நாட்டின் மன்னன் பிட்டி தேவன் என்கிற விஷ்ணுவர்தனால் கட்டப்பட்டது. இந்த திருக்கோயிலில் ஒரு பின்புல வரலாறு உள்ளது.
கிபி 1117 ஆம் ஆண்டு பிட் டி தேவன் என்கிற ஹொய்சொள மன்னன் வேளாபுரி( தற்போது பேளூர்) என்கிற நகரத்தினை தலைநகராகக் கொண்டு வந்தான். இவனது மனைவி சாந்தலாவிற்கு வல்லாளன் என்கிற மகனும், மற்றும் வாசந்தி என்கிற மகளும் இருந்தனர். ஹொய்சொள நாடு அப்போது சமண மதத்தின் தீவிர கடைபிடித்தலில் இருந்தது. பிட்டி தேவனும் சமண மதத்தை கடைபிடித்து வந்தான். ஆனால் மற்ற மதத்தினரை அவன் மதித்து வந்தான்.. இந்த நிலையில் வன போஜனத்திற்கு சென்ற இடத்தில் அவனது மகள் வாஸந்தியை பிரம்மராக்ஷஸ் பிடித்துக் கொண்டது.. சமணத் துறவிகள் பலரும் என்றும் அந்த பிரம்ம ராக்ஷசியை விரட்டிவிட முடியவில்லை.. மன்னன் மிகவும் வருத்தத்தில் இருந்தான்..
இந்த நிலையில் சோழ நாட்டில் குலோத்துங்கன் என்ற மன்னன் தீவிர சைவ பக்தன் ஆண்டு வந்தான். அவன் பிற மதத்தினரை சைவத்திற்கு மாறுமாறு துன்புறுத்தி அவ்வாறு மாற விருப்பமில்லாதவர்களை கழுவில் ஏற்றிக் கொன்றான்.. அப்போது அங்கே பகவத் இராமானுஜர் வைணவ மதத்தினை பரப்பிக் கொண்டிருந்தார்.. அவரை சைவ நெறிக்கு மாற செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை கைது செய்து அழைத்து வர தனது காவலர்களுக்கு சோழ மன்னன் உத்தரவிட்டான்.. இதனை அறிந்த ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வான் ராமானுஜரை இந்த சோழனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி மிகவும் பிரயத்தனப்பட்டு ராமானுஜரை ஹொய்சொள நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.. கூரத்தாழ்வார் தானே காவி உடை அணிந்து மடத்தில் தங்கி இருக்க, சோழ மன்னனின் காவலர்கள் அவர்தான் ராமானுஜர் என்று எண்ணி அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.. மன்னன் அவரை சைவ நெறிக்கு மாற அச்சுறுத்த, அவர் மறுத்தார்.. அவரது இரண்டு கண்களும் குருடாக்கப்பட்டன.
இந்த நிலையில், ஹொய்சொள நாட்டிற்கு வந்த ராமானுஜர் தொண்டனூரில் உள்ள நம்பிநாராயணன் திருக்கோயிலில் தங்கினார்.. அவரது பெருமைகளை கேள்விப்பட்ட பிட்டி தேவன், அவரது மூலமாகவாவது தனது மகளினைப் பிடித்திருந்த பிரம்ம ராட்சசை விரட்ட முடியுமா என்று முயற்சி செய்ய ராமானுஜரை சந்தித்தான்.. அவர் அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அந்த பிரம்ம ராட்சசை விரட்டினார்.. அவரது செய்கைக்கு நன்றிக் கடனாக பிட்டி தேவன் வைணவ மதத்திற்கு மாறினான். பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டு தனது பெயரை விஷ்ணுவர்தன் என்று ராமானுஜரால் பெயர் சூட்டப்பட்டார். அதுவல்லாவது அவனது மகளும் இளவரசியுமான வாஸந்தியும் பஞ்ச சம்ஸ்காரம் செய்யப்பட்டு வகுளாதேவி என்கிற பெயர் சூட்டப்பட்டாள்.
வைணவ மதத்திற்கு மாறிய பிட்டி தேவன், ராமானுஜரின் கோரிக்கையை ஏற்று தனது நாட்டில் ஐந்து இடங்களில் நாராயண க்ஷேத்திரங்களை கட்டினான்.. அவைகளான:
1) தலைக்காடு-கீர்த்தி நாராயணன்
2) தொண்டனூர்-நம்பி நாராயணன்
3) மேல்கோட்டை-செல்வநாராயணன்
4) வேளாபுரி என்கிற பேளுர்-கேசவ நாராயணன்
5)கதக்-வீரநாராயணன்.
இவற்றில் தொண்டனூரில் உள்ள நம்பினாராயணன் திருக்கோயில் முன்னரே இருந்தது.. அது சிதிலமடைந்து இருந்ததனால் அதனை சீர்படுத்தி கும்பாபிஷேகம் செய்தான். அதேபோல மேல் கோட்டையில் இருக்கும் செல்வ நாராயணன் கோவிலையும் புதுப்பித்தான். மற்ற மூன்று இடங்களிலும் புதிதாக கோயில் கட்டினான். இந்த கோயில்கள் அனைத்தும் அவரது கட்டிடக்கலைக்கு ஒரு சிறப்பு ஏற்படுத்தியது.. இவைகள் மாவுக்கல் என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை கற்களால் கட்டப்பட்டவை.. இந்தக் கற்கள் செதுக்குவதற்கு சுலபமாக இருக்கும்.. மிகவும் நுட்பமான வடிவங்கள் இதன் மூலம் செதுக்க இயலும்.. ஆனால் கதிரவனின் ஒளி படபட அவை இறுகும் தன்மை கொண்டவை.. இந்த நுட்பத்தினை அறிந்து அந்த கால சிற்பிகள் இந்த கோயில்களில் புதிய தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
1) தலக்காடு

கர்நாடகா மாநிலத்தில் மைசூர் நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரில் இருந்து 133 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது தலக்காடு என்னும் நகரமாகும். இங்குதான் விஷ்ணுவர்தனனால்கி.பி. 1117ஆம் ஆண்டு கட்டப்பட்ட கீர்த்தி நாராயணர் கோவில் அமைந்துள்ளது. பின்னாளில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக இது மணல் முடி ந்து போய் உள்ளது.. கிபி 1911 ஆம் ஆண்டு மணலில் இருந்து தோண்டப்பட்டு வழிபாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இங்கே கீர்த்தி நாராயணா மற்றும் ரங்கநாத சுவாமி சிலைகளை மன்னர் விஷ்ணுவர்தன் நிறுவினார். கருட மண்டபத்தின் சன்னதியில் உள்ள விஷ்ணு சிலை ஒன்பது அடி உயரம் கொண்டது. இங்கே சுந்தரவல்லி தேவிக்கு ஒரு சன்னதி இருந்துள்ளது. அதன் பிறகு நவரங்க மண்டபம் கீர்த்தி நாராயணன் சிலையுடன் மாற்றப்பட்டது. அர்த்த மண்டபத்தில் யோக நரசிம்மர் மற்றும் விஷ்வக் சேனர் சிலைகள் உள்ளன. கோவிலின் பிரதான வளாகத்தில் ராமானுஜர், வேதாந்த தேசிகர் மற்றும் நம்மாழ்வார் சிலைகள் உள்ளன.. திருக்கோயில் தற்போது இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.. இருந்த போதிலும் தினசரி பூஜைகளும் திருவிழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றது.. கோயில் தரிசன நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை.
2)தொண்டனூர்

விஷ்ணுவர்தனனால் ராமானுஜரின் வேண்டுகோளுக்கிணங்க புதுப்பிக்கப்பட்ட திருக்கோயில் நம்பினாராயணன் திருக்கோயில் தொண்டனூர். இந்த தலமானது பெங்களூரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும் மைசூரில் இருந்து 45 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த திருக்கோயிலில் நம்பினாராயணன் சுமார் 18 அடி உயரத்தில் வலது காலத்தில் சங்கு இடது கரத்தில் சக்கரம் என மாற்றி ஏந்தியுள்ளார்.. மூலவர் நரசிம்மர் கோவிலில் ஆதிசேஷன் உருவெடுத்த ராமானுஜரின் திருவிக்ரகக் காட்சி தருகிறது. இந்த கோயிலுக்கு அருகில் அழகிய ஏரியையும் ராமானுஜர் அமைத்தார்.. இன்று வரை வற்றாத ஏரியாக இந்த ஏரி விளங்குகின்றது. இந்த திருக்கோயிலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த திருக்கோயில் தரிசன நேரம் காலை 9: 30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
3) மேல்கோட்டை

பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ராமானுஜர் இங்கு வந்து 12 ஆண்டுகள் தங்கி இருந்துள்ளார்.. அப்போது மண்ணில் புதையுண்டு இருந்த செல்லப்பிள்ளை (கன்னடத்தில் செலுவ நாராயணா) கோயில் அடையாளம் காணப்பட்டு ஹொய் சாள அரசன் விஷ்ணுவர்தனின் உதவியோடு நிர்மாணம் செய்து”திருநாராயணபுரம்”என அழைக்கும் படி செய்தார்.
ராமானுஜர் தாம் தங்கி இருந்த காலத்தில் நியமித்த தினசரி வாராந்திர மாதாந்திர வருடாந்திர வழிபாட்டு நியமங்களே இன்றளவிலும் இக்கோயிலில் பின்பற்றப் படுகின்றன..
இங்குள்ள கல்யாணி தீர்த்தத்தில் இருந்து நானூறு படிகள் ஏறினால், மலைக்கோட்டை யோக நரசிம்மரை தரிசிக்கலாம். இவரது சன்னதிக்கு செல்ல 9 படிக்கட்டுகள் உள்ளன. யோக நரசிம்மரின் கட்டளைப்படி நவகிரகங்கள் இங்கு படிகளாக இருப்பதாக ஐதீகம். மலையில் ராமானுஜரின் பாதம் உள்ளது. தீர்த்தக்கரையில் பிந்து மாதவன், நாராயணன், லட்சுமி நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயருக்கு சன்னதியில் உள்ளன.
புராணங்களில் மேல்கோட்டையை பத்மா கூடா, புஷ்கரா, பத்ம சேகரா, அனந்த மாயா, யாதவகிரி, நாராயணாத்ரீ, வேதாத்திரி, வித்யா மண்டல், தட்சிணபத்ரி என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகின்றது. யதுகிரி பருவதத்தில் அமைந்துள்ள இந்த தலம் ஒரு மலைவாசஸ்தலம்.
பெருமாள் தம் கருணையினால் அர்ச்சா ரூபமாக எழுந்தருளி அருள் பாலிக்கும் நான்கு திருத்தலங்கள் தென்னிந்தியாவில் நாற் கோணமாக அமைந்துள்ளன. அவையாவன:
தெற்கு திசை ஸ்ரீரங்கம்-ஸ்ரீரங்கநாதன்
கிழக்கு திசை காஞ்சிபுரம்-ஸ்ரீ வரதராஜன்
வடதிசை திருப்பதி-திருவேங்கடவன்
மேற்கு திசை மேல்கோட்டை-செலுவ நாராயணன்.
4) பேளூர்

இந்த திருத்தலம் ஹாசன் நகருக்கு 40 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. போசளர் கட்டிடக்கலைப்பாணியில் அமைந்த பல சிறப்பு வாய்ந்த கோவில்களில் இதுவும் ஒன்று.
இந்தக் கோயில் வளாகத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. இதன் மையப்பகுதியில் சென்ன கேசவர் கோயில் கிழக்கு நோக்கியபடி உள்ளது. இதன் இரு மருங்கிலும் வலது பக்கத்தில் காப்பே சான்னிக்கிரையர் கோயிலும் ஒரு சிறிய லட்சுமி கோயிலும், இடதுபுரத்தில் பின்புறத்தில் ஆண்டாள் கோயிலும் அமைந்துள்ளது. இங்கு காணப்படும் இரண்டு தூண்களில், ஒன்று விஜயநகர காலத்தையும், மற்றொன்று போசளப் பேரரசு காலத்தையும் சேர்ந்தது.. இங்குள்ள 40 அடி உயர கல்கம்பம் ஒரு பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த கம்பத்திற்கும் பீடத்தற்கும் இடையே இடைவெளி உள்ளது. ஒரு தாளை மடித்து இடைவெளியில் விட்டு வெளியே அடுத்த முனையில் எடுக்க முடியும்.. ஆனால் கல்கம்பம் பீடத்தோடு ஒட்டாமல் இருப்பது புரியாத விதமாக உள்ளது.
5) கடக்

பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வீரநாராயணர் கோயில் கடக் இன்னும் ஊரில் அமைந்துள்ள முக்கியமான கோயிலாகும். விஷ்ணுவின் வீர அவதார தோற்றம் காணப்படுகிறது.
இடுப்பில் உத்தரியத்துடன் போருக்கு தயாரான கோலத்தில் சக்கரம் சங்கு கதாயுதம் பத்மம் ஆகிய ஆயுதங்களை நான்கு கைகளிலும் கொண்டு விஷ்ணு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் லட்சுமி மற்றும் கருடனின் சிறிய சிலைகள் காணப்படுகின்றன.
கோவிலுக்குள் ரங்க மண்டபத்துக்கு நுழையும் வாயில் பகுதி விஜயநகர பாணியிலும் கருட ஸ்தம்பப் பகுதி,ஹொய்சள பாணியிலும், உள் மண்டபம் கருவறை மற்றும் பிரதான கோபுரம் போன்றவை சாளுக்கிய கட்டிடக்கலைவானிலும் கட்டப்பட்டுள்ளன.