
சைவ சமயத்தின் முழு முதல் கடவுளாகவும் பிறப்பும் இறப்பும் இல்லாத பரம்பொருளாக இருப்பதனால் சிவன் என்கின்ற மும்மூர்த்திகளில் ஒருவரான இறைவனை பரமசிவன் என அழைக்கின்றார்கள். இவர் தனது ஒரு பகுதியில் இருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினார் என்றும் பின்னர் இருவருமாக இணைந்து ஆனந்த தாண்டவம் ஆடி இந்த அண்ட சராசரங்களை உருவாக்கினார்கள் என்றும் கூறப்படுகிறது. தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல்,அழித்தல், மறைத்தல், அருளல் என்று சொல்லப்படுகின்ற ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான “ஓம்” என்கின்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. பின்னர், அன்னை பராசக்தி, படைப்பதற்காக பிரம்மதேவரையும், படைத்தவற்றைக் காப்பதற்காக விஷ்ணுவையும் உருவாக்கினார் என்று கருதப்படுகிறது. ஊழிக்காலம் என்று சொல்லப்படுகின்ற பிரளய காலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பதால் சதாசிவன் என்று அழைக்கப்படுகின்றார்.
சிவனின் இடப்புறத்தில் இருந்து விஷ்ணுவும் வலப்புறத்தில் இருந்து பிரம்மாவும் உருவானார்கள் என்று வேதவியாசர் கூறுகின்றார். பிரம்மன் தன்னால் படைக்கப்பட்ட உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டி நிற்க பிரம்மனின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்ரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகிறது..
சிவம் என்றால் தமிழில் சிவந்தது என்று பொருள். வடமொழியில் சிவம் என்று சொல்லுக்கு முழுமையானது, மங்களகரமானது என்று பல பொருள்கள் உண்டு. சங்க நூல்களில் சிவபெருமானுக்கு, முழு முதல்வன், ஈர்ஞ்ஜடை அந்தணன், காரியுண்டி கடவுள், ஆலமார் கடவுள் என்று அனேக பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. எந்த நேரமும் யோக நிலையில் ஆழ்ந்திருப்பதனால் யோகி என்றும், அஷ்டமா சித்திகளில் வல்லவர் என்பதனால் சித்தன் என்றும், சுடுகாட்டில் மனம் பேதலித்து பேய்களுடன் ஆடுபவராக சித்தரிக்கப்படுவதனால் பித்தம் என்றும் அவரது குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகின்றார்.
சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய பாஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட தியானத்தில் உள்ள பசுபதி முதலியே சிவ வழிபாட்டின் மூலம் என்று சொல்லப்படுகின்றது. மூன்று தலைகளை உடைய தியானத்தில் இருப்பவரை சுற்றி மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்படுகிறது.
இந்து மதத்தில் ருத்ரன் சிவன் ஆகிய இருவருமே ஒரே கடவுளாக கருதப்படுகிறார்கள். இந்து மதத்தின் பழமையான ரிக் வேதத்தில் ருத்ரன் கடவுளாக கூறப்படுகிறார். இவர் வில்,அம்பினை ஆயுதமாக உடைய வில்லாளனாகச் சித்தரிக்கப்படுகிறார். ஒவ்வொரு புராணங்களிலும் ஒவ்வொரு விதமாக சிவனின் தோற்றத்தை பற்றி விவரிக்கப்படுகிறது. இவற்றின் மூலாதாரம் நமக்கு புலப்படவில்லை. முந்தைய பத்தியில் வாயுபுராணத்தில், சிவனிடம் இருந்து பிரம்மாவும் விஷ்ணுவும் தோன்றியதாக கூறியிருந்தேன். ஆனால் பழமையான ரிக் வேதத்தில் பிரம்மாவிலிருந்து சிவன் தோன்றியதாக கூறப்படுகிறது. புயல்களின் கடவுளான மருத்துக்களின் தந்தையாகவும், அறியப்படுகிறார். அக்னி தேவன், வாயு தேவன், இந்திரன் மற்றும் பிரஜாபதி போன்ற வேத கடவுள்களே பிற்காலத்தில் சிவனாக வளர்ந்ததாக சொல்லப்படுகிறது.
சைவ சித்தாந்தத்தில், சிவனை சிவம் என்றும், சிவ பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள். சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்து தொழில்களையும் செய்து ஆன்மாக்களின் ஆணவம் கன்மம் மாயைஎன்கின்ற மூன்று மலங்களை போக்கி வீடு பேறு அருள்வதாக கூறப்படுகிறது. தன் வயத்தனாதல், தூய உடம்பினனாதல், முற்றும் உணர்தல், இயற்கையை உணர்வினனாதல், இயல்பாகவே பாசங்களை நீக்குதல், பேரருள் உடைமை, முடிவில்லா ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பமுடனை, ஆகிய எட்டு வகை குணங்களையும் சிவன் கொண்டு உள்ளார். என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவில்லா இன்பம் உடையவர்; பிறருக்கு ஆட்படாதவர் என்றெல்லாம் சித்தாந்தம் சிவனை வரையறுக்கின்றது.
நடராஜ உருவத்தில் அவர் ஐந்து தொழில் ஆற்றுவது குறித்து குறியீட்டு ரீதியில் பின்வருமாறு விளக்கப்படுவது உண்டு.
1. ஒரு வலக்கையில் உள்ள உடுக்கை, படைக்கும் ஆற்றலை குறிக்கும்.
2. ஒரு இடக்கையில் உள்ள நெருப்பு அழிக்கும் ஆற்றலை குறிக்கும்.
3. இன்னொரு வலக்கையின் உட்புறத்தை காட்டுவது அருளும் ஆற்றலை குறிக்கும்.
4. இன்னொரு இடக்கை, துதிக்கை போல் உட்புறத்தினை மறைத்தவாறு இருப்பது மறைக்கும் ஆற்றலை குறிக்கும்.
5. தூக்கிய பாதமும், ஆணவத்தை மிதித்தாடும் இன்னொரு பாடமும் மன மாயை உட்பட்ட தீய சக்திகளில் இருந்து காக்கும் ஆற்றலை குறிக்கும்.
இனி சிவ வடிவங்கள் குறித்து அடுத்த பதிவுகளில் தொடர்ந்து காணலாம்..
தொடரும்…