
இப்போதைய காஞ்சிபுரம் முற்குல பல்லவர் காலத்தில் ஐந்து தனித்தனி கிராமங்களாக இருந்தது. காஞ்சி வனம் அல்லது அத்திக்காடு என்பது தான் அப்போதைய காஞ்சிபுரத்தின் பெயர். அத்திக்காட்டின் ஊடே ஐந்து கிராமங்கள் இருந்ததாக காஞ்சி வரதர் கோவில் ஒழுகு தெரிவிக்கிறது.
1) அத்தியூர் (தற்போதைய சின்ன காஞ்சிபுரம்)
2) ஒத்தாடை (ஒற்றை ஆடை என்பது ஒரே ஆடையினைத் தரித்த ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஒட்டியுள்ள பகுதி)
3) மாலிருஞ் சோலை (தற்போதைய பழைய சீவரம்)
4) முக்கூடல் (தற்போதைய திருமுக்கூடல். இங்கே முக்கூடல் கடிகை என்கிற பல்கலைக்கழகம் இருந்தது)
5) தரும நகரம் (தற்போதைய பெரிய காஞ்சிபுரம்)
இவை தவிர தும்புரு வனம் என்கிற காடு தரும நகரத்தையும் அத்தியூரையும் இணைத்தது. இப்போது தும்பவனம் என்று அழைக்கிறார்கள். காஞ்சி ரங்கசாமி குளத்தின் அருகே உள்ளது.
தரும நகரத்தில் எழுமால் கோவில் என்று வரிசை கோவில்கள் இருந்தன. இவை ஏழு திருமால் கோயில்கள். அவை
1) கள்வரெம்பெருமான்(தற்போது காமாட்சி அம்மன் கோவிலில் உள்ளார்)
2) நாகத்தெம் பெருமான்(உலகளந்தார் கோவில் உள்ள ஊரகத்தார்)
3) பள்ளிகொண்டான்(வேலூர் பள்ளிகொண்டாவில் உள்ள பெருமான்)
4) உருகுவார் உள்ளத்து பெருமாள் (நீரகத்தார்)
5) கரியமாணிக்கர்(வந்தவாசி அருகே அத்தி என்கிற ஊரில் உள்ளார்)
6) நிலா திங்கள் துண்டத்தான்(ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளவர்)
7) திருவிருத்தம் பெருமாள் (கார்வானப் பெருமாள் உலகளந்தார்)
இந்த கோயில்களுக்கு இடையே ஆதி சரஸ்வதி கோயில் கொண்டு இருந்தது. களப்பிரர்கள் ஆட்சி செய்த போது இதனை தாராதேவி கோவிலாக மாற்றினார்கள். பெருமாள் கோயில்களை தர்ம நகரத்தில் இருந்து வெளியேற்றினார்கள். கரியமாணிக்க பெருமாள் வரதராஜர் கோயிலிலும், இதர உறு பெருமாள்களும் அருகிலுள்ள ஊர்களில் உள்ள கோவில்களில் அடைக்கலம் புகுந்தனர்.
( காலச்சக்கரம் நரசிம்மா எழுதிய அத்திமலைத் தேவன் புதினத்திலிருந்து)