அன்பு நண்பர்களே!
பஞ்ச துவாரகை என்று அழைக்கப்படும் புண்ணிய சேத்திரங்களுக்கு யாத்திரை சென்று எனது அனுபவங்களை மற்றும் படித்து அறிந்த விவரங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்..
சென்ற பதிவின் முடிவில் ஸ்ரீநாத் துவாரகை மற்றும் கான்கரோலி துவாரகை ஆகிய பற்றி பதிவு செய்வதாக குறிப்பிட்டு இருந்தேன். ஸ்ரீநாத் துவாரகைக்கு செல்வதற்கு முன்பாக, அரபிக் கடலோரம் அழகாய் காட்சி தரும் சோமநாதர் ஆலயத்தை கண்டு களித்தேன்.. இதன் அழகை வருணிக்க இயலாது.. இத்தகைய அழகான ஒரு திருக்கோயிலை கஜினி முகமது படையெடுத்து அழித்தான்.. இருந்தபோதிலும் இதனை மீண்டும் அழகுற படைத்து நமக்கு விருந்தாக்கப்பட்டுள்ளது.. நான் சென்றிருந்த நேரம் அந்தி சாயும் நேரம்.. அப்போது இறைவனுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது .. அந்தக் கண்கொள்ளாக் காட்சியை நம் மனதில் நிறுத்திக் கொண்டு அந்த ஆரத்திக்கு பின்னணியாக மேளங்களும் தாளங்களும் வெகு விமர்சையாக காதுகளுக்கு இனிமையாக நம் கைகளுக்கு தாளம் போட ஏதுவாக அமைந்தது.. அந்த மேளங்களின் ரீங்காரம் இப்போதும் எனது காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது..
ஸ்ரீநாத் துவாரகைக்கு செல்வதற்கு முன்பாக ப்ரபாஸ தீர்த்தத்திற்கு சென்றேன்.. புராணங்களில் சில இடங்களில் நமது மனது மிகவும் கனத்து போகிறது.. ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர் தனது அவதார நோக்கத்தை முடித்துக் கொண்டு சரயூ நதியில் இறங்கினார்.. அந்த நதியை இப்போது கண்ட போதும் அந்த காட்சி நம் மனதில் வந்து நின்று நம் மனத்தை கனக்க வைக்கிறது.. அதே போன்று சீதாதேவி பூமி பிளந்து தனது பயணத்தை தொடரும்போது நமது மனம் கனத்துப்போகிறது.. அடுத்த யாத்திரையான முக்திநாத் யாத்திரையின் போது சீதாமதி என்கிற அந்த இடத்தையும் நான் கண்டபோது எனக்கு அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டது..

காந்தாரியின் சாபத்தினால் யாதவ குலமே அழிந்தது என்று மகாபாரதம் கூறுகின்றது.. இந்த பிரபாச தீர்த்தத்தில் அதன் கரையில் யாதவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மாண்டனர்.. அந்த தீர்த்தக் கரையையும் தற்போது அதற்கு அருகில் இருக்கும் ஒரு ஆலமரத்தின் கீழே விஷ்ராந்தையாகக்கண்ணன் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அவனது சிவந்த பாதத்தை கண்ட ஒரு வேடன் அதனை ஒரு பறவை என்று எண்ணி அம்பு எய்த அதனையே காரணமாக கொண்டு ஸ்ரீ கிருஷ்ணர் வைகுண்டம் சென்றார் என்று சொல்லப்படுகிறது.. இதற்கும் பின்னணியில் முந்தைய அவதாரமான ராம அவதாரத்தில் வாலியை மறைந்திருந்து கொன்றது தொடர்ந்து இந்த அவதாரத்தில் வாலியே வேடனாக வந்து கிருஷ்ணாவதாரத்தை முடித்து வைக்க காரணம் ஆகின்றார் என்று சொல்லப்படுகிறது.. இந்த கிருஷ்ணனின் அவதாரம் முடிவு பற்றிய சுதைச் சிற்பம் இங்கே காணப்படுகிறது.. அதை கண்ட போதும் நமது மனம் கனக்கிறது.. இறைவனை ஆனாலும் மனிதனாக அவதரித்து நம்மிடையே வாழ்ந்து நம்மை விட்டு பிரியும் போது மனம் கனப்பதில் வியப்பில்லை..
பிரபாஸ தீர்த்தத்தில் ஹிரண்யா, சரஸ்வதி மற்றும் கபிலா என்ற நதிகள் கடலுடன் கலக்கின்றன. இதனால் இதனைப் “ப்ராசித் திருவேணி”என்று அழைக்கிறார்கள். இதற்குச் செல்லும் வழியில் பிரம்ம குண்டம் எனும் குளமும், பிரம்ம கமண்டலு என்கிற கிணறும் உள்ளன. இதற்கு முன்பாக ஆதி பிரபாஸம் ஜல பிரபாஸம் என்ற இரண்டு குண்டங்கள் உள்ளன.. இந்தப் பகுதி சோம்நாத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது..










கிருஷ்ணர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்ட இடம் பாலகா தீர்த்தம் என்று வெகு பிரசித்தமாக அழைக்கப்படுகிறது.. வெராவல் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் பாலு என்ற கிராமத்தில் உள்ளது.. கிருஷ்ணரின் அவதாரம் முடியும் பகுதியில் அருகில் பாலகுண்டம் என்னும் குளமும், அருகில் பத்ம குண்டம் மற்றும் அரச மரமும் அமைந்துள்ளது.. இதனை” மோட்ச பீபல்”என்று அழைக்கின்றார்கள்.. இங்கே வைகுண்டம் செல்ல காத்திருக்கும் நிலையில் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சி தருகின்றார்..
அடுத்து நான் சென்ற இடம் ஸ்ரீநாத் துவாரகா.. நாத துவார என்று அழைக்கப்படுகிறது.. அதாவது நாதம் இருக்கும் இடத்தின் வாயில் அல்லது நாதனிடம் நம்மை அழைத்துச் செல்லும் வாயில் என்று கூறப்படுகிறது.. இந்த புண்ணிய பூமி ராஜஸ்தானில் ஒரே போருக்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. இங்கே இறைவனின் திருநாமம் ஸ்ரீநாத் ஜி..
துவக்கத்தில் பிருந்தாவனத்தில் எழுந்தருளியிருந்த இந்த இறைவனை வைஷ்ணவ ஆச்சாரியாரில் முக்கியமானவரான ஸ்ரீ மத் நாதமுனிகள் பிருந்தாவனத்தில் யோக நிலையில் இருந்த போது பூஜித்து வந்ததாக சொல்லப்படுகிறது.. இதனை அடுத்து அன்னியர்களின் படையெடுப்பின்போது, கோ சுவாமி தாவோஜி என்பவர் ராணா ராஜசிங்கின் உதவியுடன் பெருமானின் விக்ரகத்தை மாட்டு வண்டியில் எடுத்துக்கொண்டு இந்த ஊருக்கு வந்தாராம்.. அப்போது சக்கரம் மண்ணில் புதைந்து வண்டி நகர மறுத்தது.. இந்த இடமே இறைவனுக்கு விருப்பம் போதும் என்று உணர்ந்த தாவோஜி அங்கேயே அந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தாராம்..
இடது கையால் கோவர்தன் கிரியை சுமந்த படியும் வலது கை இடுப்பில் ஒய்யாரமாக வைத்தபடியும் அழகு தரிசனம் தருகிறார் இறைவன் ஸ்ரீநாத் ஜி என்கிற பெயரில்.. கருப்பு சலவை கல்லினால் வடிக்கப்பட்ட இந்த விக்ரகத்தில் இரண்டு பசுக்கள், இரண்டு மயில்கள், பாம்பு மற்றும் கிளி ஆகியன உள்ளன.. இங்கே எம்பெருமானை குழந்தையாகவே பாவித்து வணங்குகின்றார்கள்.. இறைவனே ஆனாலும், அவன் குழந்தையாக வடிவம் எடுத்ததனால் அவனால் நீண்ட நேரம் நிற்க இயலாது என்று கருதி ஒவ்வொரு முறையும் 30 நிமிடங்கள் மட்டுமே தரிசனம் தருகின்றார் கண்ணபிரான்..
இங்கே கண்ணனுக்கு விதவிதமாக பிரசாதங்கள்.. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி மற்றும் அன்ன கூட உற்சவம் இங்கே விசேஷம்.. கண்ணனை அன்பினால் கட்டிப்போட்ட பக்த மீராவிற்கும் கண்ணன் இங்கே தான் அடைக்கலம் அளித்திருக்கின்றான்..
அடுத்து ஸ்ரீநாத் துவாரகாவிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காங்க்ரோலி துவாரகாவிற்கு சென்றேன்.. அங்கு சென்றபோது இரவு நேரம்.. பூஜை முடிந்து நடை சாத்த வேண்டிய நேரம் நெருங்கியது.. மிகவும் முயற்சியுடன் வேகமாக சென்று அந்த அழகான தரிசித்தேன்.. எங்கும் சிறிய மூர்த்தமாக கொள்ளை அழகுடன் காட்சி தருகின்றார் கண்ணன்.. நான் சென்று இருந்த நேரம் இரவு நேரம் ஆரத்தி.. இங்கும் ஆரத்தி நேரத்தில் மங்கள வாத்தியங்கள் மிக நேர்த்தியாக வாசிக்கப்பட்டு நமது காதுக்கு இனிமை சேர்த்தது..
யுக புருஷனான ஸ்ரீமன் நாராயணன் கண்ணனாக அவதரித்து துவாரகையை ஆண்ட அந்த விசேஷமான தலங்களை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது.. பஞ்ச துவாரகை களையும் தரிசனம் செய்து மனதில் மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்னைக்கு புறப்பட்டேன்..
துவாரகை தரிசனம் முற்றிற்று.. அடுத்து நான் தரிசனம் செய்தது பரமபத நாதன் தரிசனம் அளிக்கும் ஸ்தலமான முக்திநாத்.. இந்தப் பயணம் பற்றிய கட்டுரை விரைவில் துவங்குகிறேன்..
நன்றி..