அன்பு நண்பர்களே! சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த தொடரை தொடர்ந்து எழுத இயலாமல் இருந்தது.. சென்ற பதிவில் நான் குறிப்பிட்டது போல டாகோர் துவாரகா தரிசனம் பற்றி இந்த பதிவில் விரிவாக கூறுகின்றேன்..
அந்தப் பரமனின் அருளால், முக்தி தரும் வல்லமை சில ஸ்தலங்களுக்கு உண்டு.. அவற்றை”மோட்ச ஸ்தலங்கள்”என்று குறிப்பிடுவார்கள்.. அவையாவன: அயோத்தி, வடமதுரா, ஹரித்வார், காசி, காஞ்சி, உஜ்ஜயினி மற்றும் துவாரகை ஆகிய ஏழு தலங்களாகும்.. இவற்றில் துவாரகை தனிச்சிறப்பு கொண்டது..
இந்த துவாரகையைத் தலைநகராகக்கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஆட்சியை செய்து வந்தார்.. இது கண்ணனாலேயே கொண்டாடப்பட்ட க்ஷேத்திரம் ஆகும்.. இங்கு வாழும் புழு, பூச்சிகள், பறவைகள், மிருகங்கள் பாம்பு போன்ற ஜந்துக்கள் கூட இங்கு வாழ்ந்தாள் ஆசையில் ஒரு நாள் முக்தி அடையுமாம்.. அப்படி இருக்க அங்கு வாழும் மனிதர்கள் மக்கள் என்ன ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும்.. அப்படிப்பட்ட மனிதர்களைப் பார்ப்பதினாலும், தொடுவதினாலும் கூட அனைத்து பாவங்களிலும் இருந்து விடுபட்டு சொர்க்கத்தை அடைய இயலும்.. இந்த ஊரின் மண் துகள்கள் காற்றினால் எடுத்துச் செல்லப்பட்டு பாவிகளுக்கு கூட முக்தியைத் தரவல்லது என்று கூறுகிறது ஸ்கந்த புராணம்..
இந்த டாகோர் துவாரகா அகமதாபாத்திலிருந்து பரோடா செல்லும் வழியில் நடியாத் என்னும் ஊருக்கு முன்னதாக அமைந்திருக்கின்றது.. இங்கே குடிகொண்டு நமக்கு அருள்புரியும் கண்ணனின் பெயர், திருநாமம் “ரணசோட் ராய்”என்பதாகும்.. அதாவது ‘யுத்தத்தைத் தொடர்ந்து ஓடிய தலைவன்’ என்று இதற்குப் பொருள்.. பகவான் கூட இப்படி பயந்து ஓடி இருக்க கூடுமோ என்று நமக்கு தோன்றுகின்றது அல்லவா? இதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதை உள்ளது.





பகவான் ஸ்ரீ கண்ணன் மதுராவை ஆட்சி செய்து வந்த காலத்தில், அந்த நகரின் மீது ஜராசந்தன் 18 முறை படையெடுத்து வந்திருக்கின்றான்.. ஒவ்வொரு முறையும் அவன் படை எடுத்துவந்த போது தனது படைகளில் பெருமளவை இழந்து இருக்கின்றான்.. இருப்பினும் தனது முயற்சியை கைவிடாது 17 மற்றும் 18 வது யுத்தத்திற்கு இடையில், காலயவனன் எனும் தீயவன், யாதவர்களும் தன்னைப் போன்றே பலம் வாய்ந்தவர்கள் என்று நாரதர் மூலமாக அறிந்து பலத்த சேனையுடன் படையெடுத்து வந்தான்.. முன்னரே ஜராசந்தனின் போரினால் பல வீரர்களை இழந்த காரணத்தினாலும், போர்களின் காரணமாக மதுரா மக்கள் அடைந்த துன்பங்களையும் கருத்தில்கொண்டு, பகவான் கண்ணன் பலராமனுடன் ஆலோசித்தார்.. கடலின் நடுவே துவாரகை நகரை நிர்மாணித்தார்.. பிறகு தமது வல்லமையால் மதுரா மக்களை துவாரகையில் சேர்த்தார்..
பின்னர் மதுரா வந்து ஆயுதம் ஏதுமின்றி தாமரை மாலையை மட்டும் அணிந்து அந்த நகரில் இருந்து புறப்பட்டார்.. நாரதரின் மூலமாக கண்ணனின் அடையாளத்தினை அறிந்து வைத்திருந்த காலயவனன் அவரை பின் தொடர்ந்தான்.. வெகுதூரம் சென்ற கண்ணன் இறுதியில் ஒரு மலைக் குகைக்குள் சென்று மறைந்தார்.. அவரை பின்தொடர்ந்த காலயவனன் அந்த குகைக்குள் நுழைந்து அங்கே படுத்திருந்த நபரை கண்ணன் என்று கருதி கோபத்துடன் எட்டி உதைத்தான்.. அந்த நபர் விழித்தெழுந்து பார்த்ததும் காலயவனன் எரிந்து சாம்பலானான்.. அவர் இஷ்வாகு வம்சத்தில் வந்த மாந்தாதாவின் மைந்தனான முசுகுந்த மகாராஜா.. போர் ஒன்றில் தேவர்களுக்கு உதவியதால் வெகுகாலம் உறக்கமில்லாமல் இருந்து தூங்குவதற்கு ஏற்ற ஆளரவமற்ற இடத்தை காட்டும்படி தேவர்களை கேட்க அவர்கள் இந்த குகையைக் காட்டி ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி அவரை யாரேனும் தொந்தரவு செய்தால் அவர்கள் எரிந்து சாம்பல் ஆவார்கள் என்ற வரத்தினையும் அவருக்கு அளித்தனர்.. முசுகுந்தன் பெற்ற வரத்தை காலயவனனை அழிக்க பயன்படுத்திக்கொண்டார் பகவான் கண்ணன்..
காலயவனனுடன் யுத்தம் செய்யாமல், ஓடியதால்”ரணசோட் ராய்”என்று கண்ணனுக்கு பெயர் அமைந்ததாம்..
சென்ற பதிவில்” “போடானா”என்கிற முதியவருக்கு கண்ணன் அருள் செய்த விவரத்தினை கூறியிருந்தேன்.. டாகோர் சாலையில், வேப்பமரத்தை போற்றி தொழுகின்றார்கள் பக்தர்கள்.. போடானாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக இந்த மரத்தின் கிளையில் சாய்ந்து நின்றாராம் பகவான் கண்ணன்.. அந்த மரக்கிளையில் இலைகள் மட்டும் இன்றளவிலும் இனிப்பாக இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது..
இதனிடையே மூலவரை காணாமல் துவாரகை மக்கள் பதறினர்.. அதனை அறிந்த பகவான் தன்னை தொடர்ந்து வந்துவிட்ட கோமதி நதியின் கரையில் தன்னை ஒளித்து வைக்குமாறு போடானாவிடம் கூறினார்.. மூலவரை காணவில்லை என்று தொடர்ந்து வரும் பக்தர்கள் எங்கே தன்னிடமிருந்து இறைவனை பிரித்து விடுவார்களோ என்று அஞ்சிய போடானா இறைவனிடம் வேண்ட, அவர் “தன்னை தேடி வருவோரிடம் தனது எடைக்கு எடை பொன் தருவதாகச் சொன்னால் அவர்கள் நகைகளுடன் திரும்பிச் செல்வார்கள், வருந்த வேண்டாம்” என்று கூறினார்.. அந்த ஏழை மனிதனிடம் அவ்வளவு பொன் ஏது? ஆனால் பகவானின் கருணை அறிந்த அவரது மனைவி, தராசின் ஒரு தட்டில் கடவுளின் விக்கிரகத்தையும் மற்றொரு தட்டில் தனது சிறு மூக்குத்தியையும் வைத்தாளாம்.. அங்கே நிகழ்ந்தது அற்புதம்.. ஆம்!! மூக்குத்தி வைத்த தட்டு கனமாகி கீழே இறங்க, கண்ணனின் விக்கிரகம் உள்ள தட்டு மேலே உயர்ந்து நின்றது.. வந்தவர்கள் குழம்பியபடியே புறப்பட்டுச் சென்றனர்.. பக்திக்கு அளவேது? இதைத் தவிர வேறு சாட்சி வேண்டுமா?
ருக்மணி பூஜித்த கண்ணனைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
தொடரும்..