கண்ணான கண்ணனைக் கண்ணாரக் கண்டேன்

அன்பு நண்பர்களே! உங்கள் அனைவரிடமும் நீண்ட இடைவெளி அளித்ததற்கு முதற்கண் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. சில தவிர்க்கமுடியாத காரணங்களினாலும் பயணங்கள் மேற்கொண்டதனாலும் தொடர்ந்து பதிவுகள் செய்ய இயலவில்லை.. மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கோருகின்றேன்..

நான் மேற்கொண்ட பயணங்களின் அடிப்படையில் பயணக் கட்டுரைகள் எழுதலாம் என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.. நான் ஒரு சிறந்த பயணக் கட்டுரையாளன் அல்ல..”இதயம் பேசுகிறது”மணியன் அவர்கள் போலவோ, அல்லது ஆன்மிக கட்டுரையாளர் திருமதி மஞ்சுளா ரமேஷ் அவர்கள் போலவோ என்னால் ஒரு சிறந்த பயணக் கட்டுரை அளிக்க இயலுமா என்பது கேள்விக்குறியே!! இருப்பினும், என்னால் இயன்றவரை எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்..

பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போது, தொலைக்காட்சியில்,”அழைக்கிறான் மாதவன்.. ஆநிரை மேய்த்தவன்”என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.. ஆக நமது முதல் பயணம் கண்ணனின் தரிசனம் நோக்கி என்ற எண்ணம் என்னுள் எழுந்தது.. அதே நேரத்தில் சொல்லி வைத்தது போல எனது மொபைலில்” வாட்ஸ் அப்பில்”, மேற்கு தாம்பரத்தில் ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ளும்”திருமதி வைதேகி பார்த்தசாரதி”தம்பதியினரின் பயண நிரல் எனக்கு கிடைக்கப்பெற்றது.. அவருடன் தொடர்பு கொண்டு எனது பயணத்தினை பதிவு செய்து கொண்டேன்.. எனது முதல் பயணமாக கண்ணன் ஆட்சிபுரிந்த”துவாரகை” திருத்தலமாகும்..

சென்ற பிப்ரவரி 18ஆம் தேதி காலை சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட தயாராக இருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டேன்..

எங்களது குழுவில் பதிமூன்று அன்பர்கள் பங்குகொண்டனர்.. இவர்கள் தவிர பயண அமைப்பாளர்கள் திருமதி வைதேகியும் அவரது கணவர் திரு பார்த்தசாரதியும் அவர்களுடன் எங்களுக்கு சுவையான உணவு அளிக்க திரு வினோத், திரு சத்தியமூர்த்தி ஆகிய நண்பர்கள் பயணித்தனர்..

ஏறக்குறைய முப்பது மணி நேரத்திற்கு மேல் பயணித்து மறுநாள் மாலை 6 மணிக்கு அகமதாபாத் சென்றோம்.. நாங்கள் தங்க வேண்டிய இடம் ரயில் நிலையத்திற்கு சமீபத்திலேயே இருந்தது.. அங்கு சென்று தங்கினோம். அது ஒரு சத்திரமாகும்..“ரேவா தேவி சத்திரம்”என்று அதற்குப் பெயர்.. தங்கும் அறைகள் இருந்தன.. அங்கு ஒரு அனுமன் சன்னதியும் கோயிலாக கட்டப்பட்டிருந்தது..

மூன்று நபர்கள் அல்லது நான்கு நபர்கள் ஒரு அறையில் என்ற கணக்கில் எங்களைத் தங்க வைத்தனர்.. என்னுடன் திருவனந்தபுரத்தில் வந்திருந்து வந்திருந்த நண்பர் திரு சம்பத் அவர்களும் அவருடன் அவரது அண்ணா திரு ராஜு என்பவரும் தங்கினார்கள்.. வந்தவுடன் எங்களுக்கு சூடாக காபி அளிக்கப்பட்டது..அன்று மாலை குளித்து முடித்துவிட்டு ஒரு அறையில் ஒன்று சேர்ந்து, “ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் “முதலான சில ஸ்லோகங்களை பாராயணம் செய்தோம்.

இரவு, அரிசி உப்புமா மற்றும் கொத்ஸுடன் டின்னர் அளிக்கப்பட்டது.. சுவையான உணவு உண்ட பின்னர் இரண்டு நாள் பயணம் செய்த களைப்பு மேலோங்க நாங்கள் எங்களது அருகில் உறக்கத்தில் ஆழ்ந்தோம்..

மறுநாள் பொழுது புலரும் நேரம் முன்பாக திரு சம்பத் அவர்கள் எழுந்து என்னையும் எழுப்பி விட்டு குளித்து முடித்துவிட்டு காலையிலேயே ஜெப தபங்களை முடித்தார்.. பின்னர் காபி அருந்திவிட்டு, மீண்டும் அனைவரும் ஒன்றாக கூடி,”திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை”அனுசந்தானம் செய்தோம்.. காலை உணவாக எங்களுக்கு பொங்கலும் வடையும் அளிக்கப்பட்டது.. அதனை உண்ட பின்னர் எங்களது பொருட்களை எடுத்துக்கொண்டு தயாராக இருந்த ஒரு பஸ்ஸில் ஏறினோம்..

அழகு மிகுந்த அகமதாபாத் நகரை சுற்றிவந்து முதன்முதலாக நாங்கள் தரிசித்த திருக்கோயில், “இஸ்கான் டெம்பிள்”. இந்த இஸ்கான் கோயில் பற்றிய வரலாறு உண்டு..

பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா என்பவர் இஸ்கான் எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவியவர் ஆவார்.. இந்த நிறுவனத்திற்கு உலகெங்கிலும் 120க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் கல்வி நிலையங்கள் ஆலயங்கள் மற்றும் வைதீகப் பண்ணைகள் ஆகியன உள்ளன.. 1896 ஆம் ஆண்டு இந்தியாவின் கொல்கத்தா நகரில் பிறந்தார் இவரது ஆசான் பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி என்பவராவார்.. பக்தி சித்தாந்த சரஸ்வதி கோஸ்வாமி பிரபல மத ஞானியும், அறுபத்தி நான்கு கௌடியா மடம் என்றறியப்படும் வைதிக நிறுவனங்களை நிறுவியவர் ஆவார்.. வேத ஞானத்தை பிரச்சாரம் செய்வதற்காக தமது வாழ்வை அர்ப்பணம் செய்ய பிரபுபாதாவை ஒத்துக் கொள்ள செய்தார் குருதேவர்.. இவ்வாறு பிரபுபாதா 1933இல் அலகாபாத் நகரில் அவரது தீட்சை பெற்ற சீடரானார்.. பிரபுபாதா அமெரிக்காவின் டெக்ஸாஸில் டல்லாஸ் நகரில் குருகுலப் பள்ளியை நிறுவி, ஆதார இடைநிலைக் கல்வியில் வைதிக முறையை மேற்கத்திய நாடுகளில் அறிமுகம் செய்தார்.. உலகமெங்கும் இயங்கிவரும் இந்தப் பள்ளிகளின் கேந்திரம் இந்தியாவில் பிருந்தாவனம் என்னும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.. பிரபுபாதாவின் இலக்கியத் தொண்டு மிகவும் குறிப்பிடத்தக்கவை.. இந்திய இதிகாசங்கள் பலவற்றை இவர் மொழிபெயர்த்துள்ளார்.. இவரது நூல்கள் உலக பாடசாலைகள் பலவற்றில் மேற்படிப்புக்கான பாட புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன.. பிரபுபாதா 6 கண்டங்களிலும் 14 முறைகளுக்கு மேல் பயணம் செய்து கிருஷ்ண பக்தி பற்றி உரையாற்றியுள்ளார்..

இத்தகைய பெருமை வாய்ந்த ஆலயத்தில் எங்களது பயணம் முதலில் துவங்கியது.. நாங்கள் சென்றிருந்த சமயம் சில அன்பர்கள் அமர்ந்து ஒரு ஆன்மீக உபன்யாசகரின் சொற்பொழிவினை ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர்.. சன்னதியில் திரை போடப்பட்டிருந்தது..

சிறிது நேரத்தில் திரை விலக்கப்பட்டு கண்கொள்ளாக்காட்சியாக ராதையும் கிருஷ்ணனும், ராமனும் சீதையும், கோகுல பாலனும் எங்களுக்கு காட்சி அளித்தார்கள்..

அந்த சுகானுபவத்தை விவரிக்க வார்த்தைகள் ஏதுமில்லை.. நேரில் சென்றால் அனுபவிக்கலாம்.. அத்தகைய அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு, அவர் வழங்கிய பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு கோவிலை வலம் வந்து எங்களது அடுத்த இலக்கான சுவாமி நாராயணர் கோவிலை நோக்கி பயணித்தோம்..

தொடரும்..

Advertisement

Published by perungattur

I am a senior citizen by age but not on my thoughts and feelings..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: