வரலாற்றில் அலைமகளாம் திருமகள் பொற்காசுகளை சொறிந்த தருணங்கள் உண்டு என்று நாம் அறிவோம்..
ஆதிசங்கரர்” பவதி பிக்ஷாம் தேஹி”என்று பிக்ஷை எடுத்து வந்த காலத்தில், ஒரு நாள் ஒரு ஏழை விதவை வீட்டு வாசலின் முன் நிற்க அவளால் அவருக்கு ஏதும் வழங்க இயலாத நிலை இருந்தது.. இதனையறிந்த ஆதிசங்கரர், அந்த இடத்திலேயே “அங்கம் ஹரேஹே…”என்று தொடங்கும் கனகதாரா ஸ்தோத்திரத்தினை அருளினார்.. அதைக்கேட்ட மகாலட்சுமி அங்கேயே காட்சி தந்து அந்த ஏழை விதவையின் துயர் போக்க தங்க நெல்லிக்கனி களை அள்ளித் தந்தாள்.. இந்த வரலாறு நாம் அறிவோம்.. இதேபோன்று மற்றொன்று உள்ளது..
தமிழகத்தில் வைணவத்தை தழைக்கச் செய்தவர்களுள் ஸ்ரீ வேதாந்த தேசிகர் மிக மிக முக்கியமான ஒருவர்.. கிபி 1268 ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் சிரவண நட்சத்திரத்தில் ஒரு புதன் கிழமை அன்று ஆனந்த சூரியார், தோத்தாத்ரி அம்மை தம்பதிகளுக்கு மகனாக காஞ்சிபுரத்தில் உள்ள தூப்புல் என்னுமிடத்தில் அவதரித்தார்.. இவர் திருமலையில் காட்சிதரும் ஸ்ரீனிவாசனின் கோயில் மணியின் அம்சமாகப் பிறந்தவர்.. இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன்.. பின்னாளில் இவர் சுவாமி தேசிகன், தூப்புல் நிகமாந்த தேசிகன், தூப்புல் பிள்ளை, உபய வேதாந்த ஆச்சாரியார், சர்வ தந்த சுதந்திரர் மற்றும் வேதாந்த தேசிகர் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார்..
வேதாந்த தேசிகர் வைராக்கியத்துக்கு பெயர் பெற்றவர்.. உஞ்ச விருத்தி செய்தே வாழ்ந்துவந்தார்.. அன்றன்றைக்கு தேவையான அரிசியை மட்டும் யாசித்து வந்து சமைத்து உண்பார்.. இவர் மீது பெரு மதிப்பு கொண்ட சிலர், இவருக்கு தெரியாமல் அரிசியில் பொற்காசுகளை கலந்து இவருக்கு பிக்ஷையிடுவார்கள்.. அரிசியைக் களையும்போது, அதில் பொற்காசுகள் இருப்பதை கண்டவர், அதனை கையால் தொடக்கூட அஞ்சி, ஒரு குட்டியை எடுத்து தள்ளி விட்டாராம்.. அப்படி ஒரு வைராக்கியம் அவருக்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..
ஒரு சமயம் அவரது ஊருக்கு திருமணம் செய்துகொள்ள பொருள் வேண்டி ஒரு பிரம்மச்சாரி வந்தான்… அவன் ஊரில் பலரிடம் உதவி கேட்டான்.. வேதாந்த தேசிகர் மீது பொறாமையும் வேகமும் கொண்ட ஒரு சிலர் அவரை கேலி செய்ய வேண்டி, அந்த இளைஞனை அழைத்து,” உன் திருமணத்திற்கு பொருளைத் தரும் அளவு வசதி கொண்டவை இங்கு யாருமில்லை.. அதனால் நீ நிகமாந்த தேசிகர் சென்று கேள்.. ஊரிலேயே அவர்தான் பெரிய செல்வந்தர்.. நீ சென்று கேட்டால் அவர் மறுக்காமல் உதவி செய்வார்.”என்று கூறி தேசிகரிடம் அவனை அழைப்பு அனுப்பி வைத்தனர்..
அந்த இளைஞன் தேசிகரை வந்து அடைந்தான்.. அவரை நமஸ்கரித்து விட்டு,” சுவாமி தங்கள் கொடைத்தன்மை பற்றி கேள்விப்பட்டேன்.. எனக்கு தாங்கள் தான் உதவ வேண்டும்”என்று கேட்டுக்கொண்டார்..
தம்மை கேலி செய்யவே தம் எதிரிகள், அந்த அப்பாவி இளைஞனிடம் பொய் கூறி தன்னிடம் அனுப்பி வைத்துள்ளது அறிந்துகொண்டார்.. அப்படியே நினைத்து மிகவும் வருத்தப்பட்டார்.. அதுவே தனக்கு போதும் என்று கருதியவர், உடனே அன்னை மகாலட்சுமியை வேண்டி “ஸ்ரீ ஸ்துதி”என்கிற சுலோகத்தை இயற்றி அது எந்த பிரம்மச்சாரிக்கு போதித்தார்.. பின்னர் தானும் பாடியபடி தூப்புல் கோயிலுக்கு அழைத்துச் சென்று, மரகதவல்லித் தாயார் சன்னதியை இந்த சோகத்தை கூறியபடி வலம் வரச் செய்தார்.. ஏன் எதற்கு என்று எந்த கேள்வியும் எழுப்பாமல் அந்த பிரம்மச்சாரியும் செய்தான்..
தாயார் பார்த்தாள்.. கேட்காதவர் கேட்கிறார்.. அதுவு தனக்கென கேட்காமல் பிறர்கென கேட்கின்றார்.. அதற்குத் தகுதியான நபருக்காக தான் கேட்கிறார்.. இது போதாதா?
“நீ கேட்க வேண்டும்.. நான் அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும்.. அதற்காக தானே காத்திருந்தேன்..”என்று தாயார் மகாலட்சுமி பொன்மாரி பொழிந்தாள்..

“யோகாரம்ப த்வரித மனஸோ” என்று துவங்கும் 16-ஆவது ஸ்லோகத்தை கூறியபோது திருமகள் அந்த இளைஞன் முன்பு பொற்காசுகளை கொட்டினாள்..”சிந்தாமல் சிதறாமல் பெற்றுக்கொள்”என்றார் சுவாமி தேசிகர்.. அந்த பிரம்மச்சாரி உடனே தன் துண்டை விரித்து அந்த பொற்காசுகளை பிடித்துக்கொண்டான்.. பின்னர் ஆசாரியரை வணங்கி நன்றி கூறிவிட்டு சென்றான்..
பொருளைத் தேடி ஓடும் இன்றைய உலகில் ஸ்ரீ நிகமாந்த தேசிகர் போல ஒரு அப்பழுக்கற்ற துறவி வாழ்க்கையை நாம் வாழ முடியாவிட்டாலும் அவரிடம் காணப்பட்ட பெருமிதம் என்கிற குணத்தை வளர்த்துக் கொள்ள முடியாதா நம்மால்..?
சிந்திப்போம்..