உரிமை என்ற சொல் நம்முடைய வாழ்க்கையில் ஒரு அங்கம் எனவே உள்ளது.. சொந்தபந்தங்களுக் கிடையே உறவு கொண்டாடும் உரிமை.. நில வழக்குகளில் உரிமை கொண்டாடும் நிலைமை.. இவ்வாறு உரிமை என்பது நம் வாழ்வில் அவ்வப்போது அலசப்படும் ஒரு வார்த்தையாக உள்ளது..
சரி..! இதிகாசங்களில் உரிமை என்ற இந்த தலைப்பிற்கும் மேலே சொன்ன பொருளுக்கும் என்ன தொடர்பு என்று கேட்கத் தோன்றும்..
ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களிலும் ஆட்சி உரிமை பற்றி பலவாறு விவாதிக்கப்பட்டுள்ளது.. முதலாவதாக ராமாயணத்தை எடுத்துக்கொண்டால்,”ஆழிசூழ் உலகை எல்லாம் பரதனே ஆள நீ போய் கானகம் ஏகு”என்று தசரதன் கூறியதாக கைகேயி ரகுநந்தன் இடம் கூறுகின்றாள்.. ஒன்றல்ல, இரண்டல்ல 14 ஆண்டுகள் வனவாசம்.. அதேபோன்று மகாபாரதம் எடுத்துக்கொண்டால் சூதாட்டத்தில் தோல்வியுற்ற பஞ்சபாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசமும் ஒரு ஆண்டு அஞ்ஞாத வாசமும் மேற்கொள்ள வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.. அது என்ன கணக்கு? 12 ஆண்டுகள் அல்லது 14 ஆண்டுகள்? என்ற கேள்வி எழலாம்..
இந்திய சாட்சியங்கள் சட்டம் 1872 பிரிவு 107 மற்றும் 108 இன் படி ஒரு தனிநபர் தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தகவல் இல்லாமல் இருந்தால் அவர் மரணித்தவர் ஆக கருதப்பட்டு அவரது உரிமை கோரும் உரிமை மறுக்கலாம்.. எனவே ஏழு ஆண்டுகள் என்பதே உரிமையை மறுக்கக் கூடிய ஒரு வாய்ப்பைத் தருகிறது.. அப்படி இருக்க 12 ஆண்டுகள் மற்றும் 14 ஆண்டுகள் என்பது அதனை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது..
இந்திய சாட்சியங்கள் சட்டம் 1872 இல் இயற்றப்பட்டது.. ஆனால் அதற்கு முன்பாக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த உரிமையை மறுக்கும் சட்டம் இருந்துள்ளது என்பது இதிகாசங்களின் மூலமாக புலனாகிறது..
மகாபாரதத்தில் மற்றொரு இடத்தில் இந்த உரிமை பற்றிய பேச்சு வருகின்றது.. சூதாட்டக் களத்தில் தருமன் திரவுபதியை தோற்ற பின்னர் துச்சாதனன் திரௌபதியை இழுத்து வந்து சபையின் நடுவே நிறுத்துகிறான்.. அப்போது திரௌபதி சபரி பார்த்து கேட்கின்றாள்” என்னை தோற்றபின் தன்னை தோற்றாரா? இல்லை தன்னைத் தோற்ற பின் என்னைத் தோற்றாரா?”என்று..
தருமன் தான் தோற்ற பின் திரௌபதியை வைத்து சூதாட அவருக்கு உரிமை இல்லை.. இது நியாயமில்லை என்று வாதிடுகிறார் திரௌபதி.. ஆனால் அது மூடர்கள் நிறைந்த கூடமாக இருந்ததனால், அவளது வாதங்கள் எடுபடவில்லை.. எந்த இடத்திலும் உரிமையை பற்றித்தான் பேசப்படுகிறது..