“ஒக மாட ஒக பாணமு ஒக பத்னீ வ்ரதுடே மனஸா”
என்ற ஹரிகாம்போஜி ராகத்தில் அமைந்துள்ள தியாகராஜ கிருதியில், தியாகையர் ராமன் ஒரு சொல் ஒரு அம்பு ஒரு மனைவி என்கிற விரதத்தினை கொண்டவன் என்று புகழ்கின்றார்..
பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற கைகேயின் ஆணையை ஏற்று ஒரே சொல் மூலமாக தனது சம்மதத்தை தெரிவித்து அந்த வனவாசத்தை மேற்கொள்கின்றார் ராமச்சந்திர பிரபு..
வாலியை வதம் செய்தபோது ஏழு மரத்திற்கு பின்பு, மறைந்திருந்து ஒரே அம்பின் மூலமாக அந்த ஏழு மரத்தையும் துளைத்து வாலியை வதம் செய்கிறார் அந்த ராகவன்..

சூர்ப்பனகை தன்னைத் தேடி வந்தபோது கூட, அவளது சூழ்ச்சியில் விழாமல் தன்னுடைய ஏக பத்தினி விரதம் என்கின்ற ஒரு கொள்கையைக் கடைப்பிடித்தார்..
ஆனால்,ஒரே இடத்தில் அவரது சொல்லைக் காப்பாற்ற இயலவில்லை.. அக்னிசாட்சியாக சீதையை மணம் புரிந்து என்றும் கைவிடமாட்டேன் என்று கைத்தலம் பற்றிய ராகவன், விதியின் வசத்தால் காலத்தில் சீதையை தொலைக்கும் படியான ஒரு நிகழ்வு ஏற்பட்டு விடுகிறது.. அதுவும் ராகவனின் தப்பல்ல.. இளையோனை காவலுக்கு வைத்துவிட்டு சென்ற போது, மாய மானாக மாரீசன் வந்து அங்கே சூழ்ச்சி செய்து ராவணனுக்கு உதவுகின்றான்.. எங்கே தன்னுடைய பதிக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் சீதாதேவி இளையோனுக்கு ஆணையிடுகின்றாள்.. அவளை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை சுற்றி ஒரு கோடு வரைந்து அதனை தாண்டாமல் இருக்குமாறு பணித்துச் செல்லுகின்றார் இளையோன் இலக்குவன்.. ஆனால் அங்கே விதி விளையாடியது.. முனிவரின் ரூபத்தில் வந்த ராவணன் தனது பேச்சுத் திறமையினால் சீதையை அந்தக் கோட்டைத் தாண்டு மாறு செய்து, அவளை கவர்ந்து சென்று விடுகிறான்.. இது சீதையின் தவறே அன்றி, ராமபிரானின் தவறு ஏதும் இல்லை.. ஆனால் ராவணன் வதைப்படலத்திற்கு, இந்த நிகழ்வே ஒரு அச்சாரம் ஆகின்றது..
தியாகய்யர் க்ருதியில் சொல்லப்பட்டபடி ஒரே பாணம் செலுத்தக் கூடிய திறமை கொண்ட அந்த ராகவன் குலசேகர ஆழ்வாரால் “ஏவரி செஞ்சிலை வலவா” என்று அழைக்கப்பட்டு உள்ளார்..
“மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!”என்ற தாலாட்டுப் பாட்டில்,
“தேவரையும் அசுரரையும்
திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க
அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும்
கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா!
ராகவனே! தாலேலோ!”
என்று பாடுகின்றார்..

திருநாங்கூரில் உள்ள பதினோரு திவ்ய தேசங்களில் திருவாலி திருநகரி திவ்ய தேசமும் ஒன்று.. அதில் திருநகரி திவ்ய தேசத்தில் அமைந்துள்ள கல்யாண ரங்கநாதர் திருக்கோயிலில் மூலவர் சன்னதிக்கு வலப்புறத்தில் “ஏவரி செஞ்சிலையோன் சன்னதி”என்று குறிப்பிட்டு இந்த சன்னதி உள்ளது.. இந்தத் தமிழ்ச் சொல்லால் ஈர்க்கப்பட்டு இதுகுறித்த நான் ஆராய்ந்து கண்டறிந்தது குலசேகர ஆழ்வார் தனது பாடலில் ராகவனுக்கு தாலாட்டு பாடும் போது இந்த சொற்களை பயன்படுத்தி உள்ளது தெரியவந்தது.. என்ன ஒரு அருமையான தமிழ்ச்சொல்.. குலசேகர ஆழ்வார் அழகான தமிழில் பாடியுள்ள இந்த தாலாட்டுப் பாட்டில் இந்த வரிகள் என்னை ஈர்த்தன..
சோழநாடு திவ்யதேசங்களில் இரண்டு இடங்களில் ஸ்ரீ ராமனுக்கு கோவில்கள் அமைந்துள்ளன.
அதில் ஒன்று திருவெள்ளியங்குடி.. மூலவர் க்ஷீராப்திநாதன்.. இவரே கோலவில்லி ராமர் (கோல வல்வில் ராமர்) எந்த அழைக்கப்படுகிறார். புஷ்கலா வர்த்தக விமானத்தில் இந்த சன்னதி அமைந்துள்ளது.. தாயார் மரகதவல்லி.. இங்கு சுக்கிர, பிரம்மா, இந்திர, பராசர தீர்த்தங்கள் உள்ளன..
அதற்கு அடுத்தாற்போல அமைந்துள்ள திவ்ய தேசம் திருபுள்ளபூதங்குடி.. இங்கு கோவில் கொண்டுள்ள மூலவர் வல்வில் ராமன்.. தாயார் ஹேமா ம்புஜவல்லி.. சோபனா விமானத்தில் சன்னதி அமைந்துள்ளது.. இங்கே ஜடாயு தீர்த்தம் மற்றும் கருத்ர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் உள்ளன..
இந்த இரண்டு திவ்ய தேசங்களிலும் ராமருடைய ஆயுதமான வில்லிற்கே முக்கியத்துவம் அளித்து பெருமாள் அழைக்கப்படுகின்றார்.. அந்த அளவுக்கு அது பெருமை மிக்கதாக உள்ளது..
ஆகவே குலசேகர ஆழ்வார் ஸ்ரீராமரை,” ஏவரி செஞ்சிலை வலவா”என்று அழைத்ததில் எவ்வளவு பொருள் பொருந்தி உள்ளது என்பதை நாம் உணர முடிகிறது..
சமீபத்தில் இந்த திவ்ய தேசங்களைச் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிட்டியது.. அந்த அருமையான தரிசனத்தின் விவரங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பதிவை நான் மேற்கொள்கிறேன்..