அன்பு நண்பர்களே!!
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் எடுத்த அவதாரங்கள் பல உண்டு..
வைஷ்ணவ சம்பிரதாயங்களில் புதுமைகள் செய்தது இந்து மதத்தின் ஆணி வேராய் அமைந்த எம்பெருமான் பேரருளாளன் ஸ்ரீ ராமானுஜர்.. அவருக்கு பல மாணாக்கர்கள் உண்டு.. அவர்களில் முதன்மை மாணாக்கர் வடுக நம்பி என்பவர்..
இந்த வடுக நம்பி என்பவர் யார்?
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாளக்கிராமம் என்னும் ஊரில் சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆந்திர பூரணர் என்கிற திருநாமத்தோடு பிறந்தவர்.. தன் குருவாகிய ராமானுஜர் மீது கொண்ட அளவில்லா குருபக்திக்காக இவர் பெரிதும் புகழப்படுகிறார்..
இவரது குரு பக்திக்கு உள்ள பெருமையை உணர்த்தும் சில நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன..
ஒரு முறை வடுக நம்பி ராமானுஜருக்கு பாலை சூடு செய்து கொண்டிருந்தார்.. அப்போது ஸ்ரீரங்கத்து நம்பெருமாள் உற்சவர் வீதி உலா வந்து கொண்டிருந்தார்.. நம் பெருமாளை சேவிக்க, ராமானுஜர் ஆர்வம் கொண்டு, வடுக நம்பியை” வடுகா! விரைந்து வா.. நம் பெருமாள் உலா வந்து கொண்டிருக்கிறார்.. நீ வந்து சேவித்து கொள்” என்று அழைத்தார்.
அவர் வருவதற்கு தாமதமாகவே ஆயிற்று. அவரைக் கடிந்து கொள்கிறார்.. வடுக நம்பி அதற்கு பதிலாக”உம் பெருமாளை(நம்பெருமாள் ரங்கநாதன்) சேவிக்க வந்துவிட்டால், எம்பெருமா னுக்கான சேவையை யார் செய்வது?”என்று பதிலளித்தார்.
திருக்கோயில்களில் தீர்த்தம் பெற்றுக்கொண்ட பின்னர் தலையில் தடவிக் கொள்வது ஒரு வழக்கமாக உள்ளது.. அதைப்போலவே தினமும் ராமானுஜர் உட்கொண்ட மீதியை பிரசாதம் என உண்ணும் வழக்கம் உடைய நம்பி தான் உண்டபின் கை அலம்பாமல் தன் தலை மீதே பூசிக் கொள்வார்.. அப்படி ஒரு குரு பக்தி..
தமிழ்நாட்டில் உள்ள எல்லா வைணவத் தலங்களிலும் உள்ள கோயில்களில் ராமானுஜர் தான் வகுத்த ஆகம விதிகளின்படி எண்ணப்படி பூஜைகள் மாற்றி அமைத்து செய்துவந்தார்..
அவ்வாறு நடந்தபோது, திருவனந்தபுரம் கோவிலில் மட்டும் வேறுவிதமாக நடப்பதை அறிந்து அதனையும் மாற்றவேண்டும் என்ற எண்ணம் கொண்டு, தனது சீடர் வடுகநம்பி உடன் அங்கு சென்றார்..
இவரைப் பற்றி அறிந்திருந்த அங்கிருந்த நம்பூதிரிகள் இவரை ஒழித்துக் கட்டும் வேலைகளில் ஈடுபட்டனர்.. அவரைக் காப்பாற்றும் பொருட்டு, ராமானுஜர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த ஒரு நாள், அவன் உறங்கும் போதே விஷ்ணுபகவான் கருடாழ்வாரை அனுப்பி இவனை தூக்கி கொண்டு போய் தமிழ்நாட்டில் திருக்குறுங்குடி நம்பியின் இடத்தில் ஒப்படைக்க பணித்தார்..
அவ்வாறே இவரை தூங்கும்போது தூக்கிய கருடன், அங்கே ஓடுகின்ற நம்பியாற்று பாறையில் படுக்க வைத்து விட்டு சென்றார்.. காலையில் விழித்துக்கொண்ட ராமானுஜர் வந்த இடம் அறிந்து காலை பூஜைகள் செய்து, திருக்குறுங்குடி நம்பிகளை தரிசிக்க தயாரானார்.. வழக்கம்போலவே, நீராடி, ஆடை அணிந்து, திருமண் ஸ்ரீசூர்ணம் ஆகியவற்றை தரித்து கொள்ள”வடுகா..இங்கே வா” என்று அழைத்தார்..
அவர் எப்போதும் கான் திருநாமம் சூட்டி கொண்ட பின்னர் தானாகவே வடுக நம்பிக்கும் இட்டு விடும் வழக்கம் அவரிடம் இருந்தது.. அன்றும் வழக்கம் போல வடுக நம்பியை அழைத்தபோது அங்கே வடுக நம்பி வர, ஆறுக்கும் திருடாமம் இட்டு வைத்தார்.. ஸ்ரீ ராமானுஜரும் வடுக நம்பியும் திருக்குறுங்குடி நம்பியை தரிசிக்க ஆலயம் சென்றார்கள்.. வழக்கம்போல கொடிமரம் என்னும் த்வஜஸ்தம்பம் முன்பு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பார்த்தபோது, தன்னுடன் வந்திருந்த வடுகநம்பி காணவில்லை..
கோயிலில் மூலவரை தரிசிக்க சென்ற போது ராமானுஜர் வடுக நம்பிக்கு இட்டு விட்ட திருநாமம் எம்பெருமானின் நெற்றியிலும் ஈரம் காயாது காட்சியளித்தது.. ராமானுஜர் உடன் வடுக நம்பி வரவில்லை என்பது அப்போது அவருக்கு தெரியாது..
அப்போது தான் புரிந்தது ராமானுஜருக்கு தனக்கு பரிவட்டம் கட்டி சீடராக பணிபுரிந்தவர் அந்த குறுங்குடி நம்பியை என்று..
” நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய், பார்வையிலே சேவகனாய்”என்று ‘கண்ணன் என் சேவகன்’ என்ற பாடலில் மகாகவி பாரதி பாடி உள்ளார்.. அப்படிப்பட்ட நம்பெருமான் தனக்கு உகந்த ராமானுஜருக்கு ஒரு சீடனாக பணிவிடை செய்தார் என்பது ஒரு ஆச்சரியத்தக்க நிகழ்வாகும்..








தனக்கு பணிவிடை செய்தது நம்பெருமாள் என்று அறிந்த ராமானுஜர் கண்ணில் நீர் பெருக”ஐயனே! இது என்ன நிகழ்வு? தாங்களா எனக்கு சீடனாக வந்தவர்..! ஏன் இந்த விளையாட்டு”என்று பல விதமாக நம்பெருமாளிடம் கேட்க, நம்பெருமாள்”நான் பல்வேறு அவதாரங்கள் எடுத்து உள்ளேன்.. உனக்கு சீடன் ஆகும் பாக்கியம் வேண்டும் என்று இந்த புதிய அவதாரம் எடுத்தேன்”என்றாராம்..
சமீபத்தில் நான் இந்த ஆலயத்தினை தரிசனம் செய்தேன்.. திருக்குறுங்குடியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது.. திருப்பாற்கடல் என்று அழைக்கப்படும் நம்பி ஆறு, இரு கிளைகளாக பிரிந்து மீண்டும் இணைந்து இடையே ஒரு பாறையினை சுற்றிச் செல்கிறது.. இது திருவரங்கத்தை நினைவுபடுத்தும் ஒரு அம்சமாகும்.. அந்தப் பாறை மீது ராமானுஜருக்கு காட்சியளித்த குறுங்குடி நம்பியின் கோயில் உள்ளது.. இந்த ஆலயத்தினை டிவிஎஸ் நிறுவனத்தினர் புதுப்பித்து திறமையாக பராமரித்து வருகின்றனர்.. ஆலயத்தில் உள்ளே செல்வோமேயானால் இடதுபுறம் ஒரு பத்தடி ஆழத்தில் ராமானுஜனுக்கும் வடுக நம்பிக்கும் சிலா ரூபத்தில் தனி சன்னதி உள்ளது.. அவர்களை தரிசிக்க படிக்கட்டு வழியாக செல்லலாம்..
நான் தரிசித்த இந்த ஆலயத்தின் பெருமைகளை அன்பு வாசகர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்று இந்த பதிவினை மேற்கொள்கிறேன்..