அன்பு நண்பர்களே! இந்த பரந்த உலகில் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியின் பெருமைகளைப் பற்றி கூறும் தொடராக இந்தப் பதிவினை வெளியிட்டு வருகிறேன்..
அன்னையின் அருமை பெருமைகளை பற்றி கூற இந்தப் பதிவு மட்டும் போதாது.. இருப்பினும் நான் அறிந்த வகைகளிலே நான் திரட்டிய சில விவரங்களின் அடிப்படையில் இந்த தொடரை பதிவு செய்து வருகிறேன்..
அன்னை பராசக்தியின் சக்தி பீடங்கள் 51. அதில் 18 மகா சக்தி பீடங்கள் ஆகும்… தேவியின் கழுத்துப் பகுதி விழுந்த பீடமாக ஸ்ரீசைலம் பிரமராம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது..


ஸ்ரீசைலம் மகாபாரதத்திலும் புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.. கந்தபுராணத்தில் ஸ்ரீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று தனியே உள்ளது.. இது இந்தக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்கு சான்றாக அமைகின்றது.. கிபி 7 முதல் 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக் கோயிலைப் பாடியுள்ளனர்.. ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜி ஒரு அம்பாள் பக்தர் ஆவார்.. அவர் அம்பிகையை வணங்கி அவரிடம் பெற்ற வாளைக் கொண்டுதான் எதிரிகளை அழித்து தனது தர்மத்தை நிலைநாட்டினார் என்பது வரலாறு.. அதன் நினைவாக பிரமராம்பிகை அம்மன் கோயிலின் வடக்கு புற கோபுரத்தை 1677 இல் கட்டினார்.. எனவே இன்றளவும் அது சிவாஜி கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது.. வீர சிவாஜி பிரமராம்பிகை அளித்த வாள் இன்றளவும் பாதுகாக்கப்படுகிறது..
இந்த கோயிலானது 20 அடி உயரமும் 2121 அடி நீளமுடைய கோட்டைச்சுவர் போற்ற சுற்றுச்சுவர் மதில்களை கொண்டுள்ளது.. இந்த மதில் சுவரின் வெளிப்புறத்தில் நான்கு புறங்களிலும் ஏராளமான புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.. இவை குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள், போர் காட்சிகள், பார்வதி திருமணம், அர்ஜுனன் தவம், மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம் போன்ற பல சிற்பங்கள் கொண்டதாக உள்ளது..
கோவிலின் நான்கு புறங்களிலும் நான்கு கோபுரங்கள் உள்ளன.. கிழக்குப் புறம் உள்ள கோபுரம் கிருஷ்ணதேவராயர் கட்டப்பட்டதனால் அதற்கு கிருஷ்ணதேவராயர் கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.. மேற்குப் புற கோபுரமானது கோவில் நிர்வாகத்தால் 1966இல் கட்டப்பட்டு பிரம்மானந்த ராயா கோபுரம் என அழைக்கப்படுகிறது.. இவற்றின் மையத்தில் மல்லிகார்ஜுனர் கருவறை உள்ளது… இதன் மீது உள்ள விமானமானது காகதீய மன்னரான கணபதியின் சகோதரியான மயிலம்மா தேவியால் கட்டப்பட்டதாக அவரது கல்வெட்டின் வாயிலாக அறியப்படுகிறது.. மல்லிகார்ஜுனர் சன்னதிக்கு மேற்கில் சந்திரமாம்பா சன்னிதியும், கிழக்கே ராஜராஜேஸ்வரி சந்நிதிகளும் உள்ளன..
இங்கே மூலவர் மல்லிகார்ஜுனர், ஸ்ரீ சைல நாதர், ஸ்ரீ பர்பத நாதர் ஆவார்.. அம்பாளின் பெயர் பிரமராம்பாள், பர்ப்பநாயகி.. இங்கு தல விருட்சம் மருத மரமாகும்.. தீர்த்தம் பாலா நதி..

இந்த திருக்கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய சமயக்குரவர்களால் தேவாரம் மூலம் பாடப்பெற்றது..
தொடரும்…