அன்பார்ந்த நண்பர்களே!
இந்த தொடரை தொடர்ச்சியாக பதிவு செய்யாமல் சற்று இடைவெளிவிட்டு பதிவிட்டு வருகிறேன்.. சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அவ்வாறு ஏற்பட்டுவிட்டது.. வாசகர்களிடம் அதற்காக மன்னிப்பு வேண்டுகிறேன்..
உயர்வாக உள்ள நலன்கள் என்று ஸ்ரீ யப்பதியான அந்த ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்கள் பற்றி இந்த தொடரில் பதிவிட்டு வருகிறேன்.. அவற்றில் இதுவரை, சௌசீல்யம், வாத்சல்யம், மார்தவம், ஆர்ஜவம், சௌஹார்த்தம், ஸாம்யம், காருண்யம், மற்றும் மாதுர்யம் ஆகியன பற்றி இதுவரை பார்த்தோம்.. அடுத்து நாம் பார்க்க இருப்பது அவரின் கல்யாண குணமான காம்பீர்யம் என்பது பற்றி..
காம்பீர்யம் என்றால் என்ன? பொதுவாக கம்பீரம், மிடுக்கு, வீரத்தின் தோற்றம் என்றெல்லாம் சொல்வதுண்டு.. ஆனால் அதுவல்ல காம்பீர்யம்..
தன்னைச் சரணடையும் அடியார்களுக்கு, இவர் என்ன செய்யப்போகிறார் என்று மற்றவர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாதபடி தன்னடக்கம் காட்டி, எதிர்பாராத வகையில் அருள் புரியும் மகோன்னத குணம் காம்பீர்யம் எனப்படுகிறது..
தான் கொடுக்கும் பொருளின் பெருமையையும், அதனை வாங்கிக் கொள்பவனின் சிறுமையையும் பாராதவன் என்று இந்த வார்த்தைக்கு விளக்கம் தரலாம்.. தன்னை நம்பி வந்தவர்களுக்கு எத்தனை கொடுத்தாலும் இன்னும் சிறிது கொடுக்கலாமே என்று தோன்றும் குணமே இது என்றும் இதனை விளக்குவதுண்டு..
இதற்காக ஒரு சில நிகழ்வுகளை நமது இதிகாசங்களில் இருந்து பார்க்கலாம்..
திரௌபதி செய்த சரணாகதிக் காக, பாண்டவர்களுக்கு உதவிசெய்து அவர்களது ராஜ்யத்தை மீட்டுக் கொடுத்தான் கண்ணன்.. இவ்வளவு செய்த பிறகும் இவர்களுக்கு செய்த நன்மை போதாதே இன்னும் ஏதாவது செய்யலாமே என்ற குறை பகவானின் உள்ளத்தை வருத்துகிறதாம்..
இதுபோலவே ராமாயணத்திலும் ஒரு கட்டம் வருகிறது.. தன்னையே விரும்பிய அனுமனுக்கு சீதையைக் கண்டு வந்த நல்ல செய்தி சொன்ன தூதுவருக்கு, என்ன பரிசு தரலாம் என்று நீண்ட நேரம் யோசித்தாராம் ராமபிரான்.. அனுமன் செய்த உதவிக்கு தான் எத்தனை பரிசு தந்தாலும் அவை எவ்வளவு விலை மதிப்பு உடையதாக இருந்தாலும் அது ஈடாகாது என்று ராமருக்கு தோன்றியதாம்..
பலமுறை யோசித்த பின் ராமபிரான் கடைசியில் மிகச்சிறந்த தான தன்னுடைய திருமேனியை தழுவச் செய்தாராம்.. அதாவது நண்பனை, நமது குழந்தையை கட்டித்தழுவ கொள்வதைப் போல அனுமனை ஆலிங்கனம் செய்து கொண்டார்..
சீதைக்கு மட்டுமே கிடைத்த அந்த அன்பு தழுவல், அனுமனுக்கும் கிடைத்தது.. ஆஹா இதுவல்லவா செயற்கரிய பேறு!!? இதுவல்லவா அன்பு? இதனை நம்மாழ்வாரும்” உன் அடியாருக்கு என் செய்வேன் என்றே இறுத்தி நீ”என்று பாடுகிறார்.. இதுதான் பெருமாளின் கல்யாண குணங்களில் ஒன்றான காம்பீர்யம் எனப்படுவது..

தொடரும்..