சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி என்று ஒரு தலம் உள்ளது.. அங்கே வேளாளர் குலத்தில் ஆவணி மாதம் மக நட்சத்திரத்தில் மாறனார் என்பவர் பிறந்தார்.. இவர் உழவுத் தொழில் செய்து பெருஞ்செல்வந்தராய் திகழ்ந்தார்.. இருந்தபோதிலும் சிவனடியார் இடத்து அன்புள்ளம் உடையவராய் திகழ்ந்தார்.. தன் இல்லத்திற்கு வரும் சிவனடியார் அனைவரிடம் எதிரே சென்று கைகூப்பி வணங்கி, இனிய மொழிகளைக் கூறி, வரவேற்று, அவர்களுக்கு உணவு அளிப்பார்.. நாள்தோறும் செய்து வரும் மகேஸ்வர பூஜை என்னும் சிவ புண்ணியத்தினால் அவரது செல்வம் நாளுக்கு நாள் பெருகி குபேரனைப் போன்ற பெரும் செல்வந்தர் ஆகவே வாழ்ந்து வந்தார்..
அத்தகையோருக்கு இடரும் ஏற்பட்டது.. அடியார்க்கு திருவமுது அழித்தல் ஆகிய இந்தத் திருப்பணியை செல்வம் நிறைந்து இருந்த காலத்திலேயே செய்து வந்த போதிலும் அவருக்கு வறுமை ஆட்கொண்டது.. அந்த வறுமையுற்ற காலத்திலும் தனது உறுதியை கைவிடாது இவர் தனது பணியை செய்து வந்தார்.. இவரது உறுதி தன்மையை உலகுக்கு உணர்த்த இறைவன் திருவுள்ளம் கொண்டார்.. அதனால் இவரது செல்வத்தினை மேலும் குறைத்தார்.. அவரது மன உறுதியை சோதித்தார்.. இதனால் மாறினாரின் செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது.. தம்மிடம் இருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும்,கடன் வாங்கியும் அடியார்களுக்கு அமுது அளிக்கும் பணியினை விடாது செய்து வந்தார்..
இந்த நிலையில், ஒரு மழை நாளில், தாம் உணவின்றி பசியால் வாடிய போதும், இரவு வெகுநேரம் வரை சிவனடியார்களை எதிர்பார்த்திருந்து எவரும் வராமையால் கதவை பூட்டி விட்டு வீட்டிற்குள் சென்றார்.. அந்த நள்ளிரவு போதிலே, சிவபெருமான் அடியார் கோலங்கொண்டு மாமனாரின் இல்லத்திற்கு எழுந்தருளி கதவை தட்டி அழைத்தார்.. மாறனார் கதவைத்திறந்து, அடியாரை உள்ளே வரவேற்று இருப்பதற்கு இடம் கொடுத்தார்.. வந்திருந்த அடியார்க்கு உணவளிக்க வீட்டில் ஏதும் இல்லையே என வருத்தம் மிகுந்து இருந்தது.. இருந்தாலும், அன்றைய பகல் பொழுதில், நிலத்தில் விதைக்கப்பட்ட நெல் மணிகளை சேகரித்து வந்து, கீரைகளைப் பரித்து, அடுப்பெரிக்க விறகு இல்லாமல், வீட்டில் சிதிலமடைந்து இருந்த வீட்டின் கூரையில் இருந்த மரக்கட்டைகளை பயன்படுத்தி, உணவு சமைத்து, மாமனாரும் அவரது மனைவியும் வந்திருந்த சிவனடியாருக்கு உணவு படைத்தனர்..
அப்போது அடியாராக வந்திருந்த எம்பெருமான் ஜோதிப் பிழம்பாய் எழுந்து தோன்றினார்.. அதுகண்டு மாறனார் மனைவியும் திகைத்து நின்றனர்.. சிவபெருமான் உமாதேவியாருடன் எருதின் மேல் தோன்றி, “அன்பனே! அன்பர் பூசை அளித்த நீ, உன் மனைவியோடும் என் பெரும் உலகம் ஆகிய சிவலோகத்தை அடைந்து பேரின்பம் அனுபவித்து இருப்பாயாக”என்று அருள் செய்து மறைந்தருளினார்..

இவரே,” இளையான்குடிமாற நாயனார்” என்ற திருப்பெயருடன் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்ந்தார்..
” இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்”-என்கிறது திருத்தொண்டத்தொகை..
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில், நீங்காதான் தாள் வாழ்க!!