கௌசல்யாதேவி பெற்ற மகன் கயிலைநாதனை மணல் உருவத்தில் லிங்க வடிவமாக வழிபட்ட தலம் தமிழ்நாட்டில் தென்கோடியில் உள்ள ராமேஸ்வரம்.. இந்த ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரைக்கு சிறந்த இடமாக அனைவராலும் கருதப்படுகின்றது.. இந்தத் திருத்தலத்தில் பிறந்து வடமொழி தென்மொழி இரண்டிலும் புலமை பெற்று ஆறுமுகனை வழிபட்டு வந்த ஒரு தமிழ் துறவி குமரகுருதாச சுவாமிகள்..
பழம்தமிழ் குடியான அகமுடையார் இனத்தில் சாத்தப்ப பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1848-50ல் பிறந்தவர்தான் இந்த தமிழ் துறவி.. இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும்..
1866 ஆம் ஆண்டு உள்ளூர் கிறிஸ்தவ பள்ளியில் பயின்றார்.. முனியாண்டி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தசஷ்டிகவசம் மிகவும் ஈர்த்த நூலாக இருந்தது.. இதுவே இவர் பின்னாளில் சண்முக கவசம் இயற்ற தூண்டுதலாக இருந்தது.. சேது மாதவ ஐயர் என்பவரிடம் வடமொழியும் கற்றார்..
தமது 12 13 வயதிலேயே கவி பாடும் திறமை பெற்றிருந்தார்.. என்னுடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாக்கிய “கங்கையைச் சடையில் பதித்து”எனத் தொடங்குவது.. அருணகிரிநாதரை ஞானகுருவாக கொண்ட இவர் பின்னாளில்’ உபய அருணகிரிநாதர்’என்ற பெயரும் பெற்றார்..
இவருக்கு 25 வயதானபோது மதுரை சின்னப்பிள்ளை மகளாகிய காளிமுத்து மாலை 1873 ஆம் ஆண்டு வைகாசி மாதம் ராமநாதபுரத்தில் திருமணம் செய்து கொண்டார்.. இவர்களுக்கு முருகைய பிள்ளை, சிவஞானம்பாள் மற்றும் குமரகுருதாச பிள்ளை என 3 மகவுகள் பிறந்தார்கள்..
1894 ஆம் ஆண்டு ராமநாதபுரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள “பிரப்பன் வலசை” என்ற ஊரில் நிஷ்டையில் இறங்கினார்.. 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில் இவருக்கு முருகப்பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றார்கள்.. இவரது கனவுகளில் முருகன் வழி நடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.. இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார்.. அங்கிருந்து பல ஸ்தலங்களுக்கு சமய பயணங்கள் மேற்கொண்டார் அவருடன் திரு.வி.க பழகியுள்ளார்..
1923ஆம் ஆண்டு ஒரு நாள் சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது குதிரை வண்டி சக்கரம் இடது கணுக்கால் மீது ஏறியதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இந்த விபத்து நடந்தபோது இவருக்கு வயது 73.. ஆங்கிலேய மருத்துவர்களால் குணமடைவது கடினம் என கூறி கைவிடப்படார்.. அன்பு தொடர்ந்த சண்முக கவசம் பாடி வந்தமையால் மயில் வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததால், அந்த நாள் ‘மயூர சேவன விழா’ ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.. சென்னை மருத்துவமனையில்” மன்ரோ வார்டில்’ ஸ்வாமிகளின் திருவுருவப் படம் மாற்றப்பட்டு நோயாளிகளால் வழிபடப்படுகிறார்..
இவர்தான் பிற்காலத்தில் பெருமையுடன் பேசப்பட்ட”பாம்பன் சுவாமிகள்”ஆவார்.

1926ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 அன்று உயில் எழுதி மகா தேஜோ மண்டல சபை அமைப்பு நடைமுறையை ஏற்படுத்தினார்..
மே 30, 1929 அன்று காலை 7 மணி 15 நிமிடங்களுக்கு சுவாமிகள் ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் சமாதியடைந்தார்.. பின்னாளில் சாமிகள் சீடர்கள் திருவான்மியூரில் சமாதி அமைக்கப்பட்டது..
சிவ சண்முக கவசம் உட்பட்ட பல நூல்களை இயற்றியுள்ளார்..
இவர் சித்திரக்கவி எழுதுவதில் வல்லவர்.. சித்திர கவி என்பது தமிழில் காணப்படும் இலக்கிய பாங்குகளில் ஒன்று.. தொல்காப்பியம் குறிப்பிடும் வண்ணங்கள் சித்திர கவியின் தோற்றுவாய்.. திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட “திருஎழுகூற்றிருக்கை”ஓவிய பாங்குடன் அமைந்த சித்திரக்கவி.. இவரைப் பின்பற்றி அருணகிரிநாதரும் அமைத்துள்ளார்.. இவர்களின் வரிசையில் தான் பாம்பன் சுவாமிகளும் சித்திரக்கவிகள் படைத்துள்ளார்..