பகுதி 7
வாசக அன்பர்களே! இதுவரை பெருமாளின் கல்யாண குணங்கள் 19 இல் சௌசீல்யம், வாத்ஸல்யம், மார்தவம், ஆர்ஜவம் மற்றும் ஸௌஹார்த்தம் ஆகியவை பற்றி அனுபவித்தோம்.. சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த தொடர் சில காலங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.. இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதனால் இதனை தொடரலாம் என்ற பெருமானின் ஆக்ஞை எனது மனதில் ஏற்பட்டது.. இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்த தொடர் தொடரும்..
பெருமாளின் கல்யாண குணங்களில் அடுத்து நாம் பார்க்க இருப்பது ஸாம்யம்.. அதாவது, ஜாதி, குணம் ஆகியவற்றில் உயர்வு தாழ்வு கருதாமல், யாராக இருந்தாலும் தன்னை சரணாகதி என்று தஞ்சம் அடைந்தால் ஏற்றுக்கொள்ளும் குணம் இதுவாகும்..
வனவாசத்திற்குப் புறப்பட்ட ராமபிரான் கங்கை நதிக்கரையில் வேடுவனான குகனை சந்திக்கின்றார்.. அவரது உபசரிப்பில் மகிழ்ச்சி அடைகின்றார்.. வேடுவ குலத்தான் என்றபோதிலும் அவனைத் தன்னுடைய சகோதரனாக ஏற்றுக் கொள்கின்றார் ராமபிரான்..

தன்மீது அன்பு செலுத்துபவர்களிடையே உயர்வு தாழ்வு பார்க்க மாட்டான் இறைவன்.. வேடுவ பெண்ணான சபரி, தசரத ராஜகுமாரனான ராமனைப் பூஜித்தாள்.. பூஜித்தவள் காட்டில் வசிக்கின்ற வேடர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆகும்.. பூஜிக்கப்பட்ட ராமனோ மகரிஷிகளும் கண்டு மகிழும் மட்டில்லா அழகை உடைய தசரத சக்கரவர்த்தியின் புதல்வன் ஆகும்.. ராமபிரானை பல முனிவர்கள் பூஜித்து உள்ளனர்.. எம்பெருமானே முனிவர்கள் மட்டுமே பூஜைகள் தக்கவர்கள் அவர்கள் இல்லங்களில் மட்டுமே அவர் உண்பார் என்கின்ற தோற்றத்தினை எண்ணத்தினை பொய்யாக்கி விட்டார் ராமபிரான் சபரியின் வீட்டில் உணவு அருந்தி..
பூஜை செய்யும் முறைகள் ஆச்சார அனுஷ்டானங்களை சிறிதும் அறியாத வேடுவ பெண்ணான சபரி, அவள் ருசி பார்த்து எச்சில் செய்து கொடுத்த பழங்களை சந்தோஷத்தோடு உண்கின்றான்.. இதுவல்லவோ உண்மையான அன்பு.. இத்தகைய குணங்களுக்கு இருப்பிடமானவன்தான் இறைவன்..

கம்ச வதத்திற்கு பின்னர், அண்ணன் மதுராவுக்கு வருகிறான்.. அவனுக்கு உயர்ந்த பட்டாடைகளும் பூசிக்கொள்ள நறுமணம் மிகுந்த சந்தனங்களையும் பெறுகிறான்.. ஆனால் மேலே அணிந்துகொள்ள மாலைகள் தேவைப்பட்டன.. அதனைப் பெற வேண்டி கண்ணனும் பலராமனும் மாலைகள் தொடுத்து விற்கும் ஒரு மாலாகாரன் வீட்டுக்குச் செல்கின்றனர்.. இவர்களைப் பார்த்து அவன் பக்தி பரவசத்தில் மூழ்கி விட்டான்..தினமும் மாலைகளை விற்று அதனால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தும் வறுமையில் கடந்த உழைப்பவன் அவன்.. கிருஷ்ணனைக் கண்டு அவரை செய்கின்றார்.. மறந்து தன்னிடம் வெட்டுவதற்காக வைத்திருந்த அனைத்து மலர்களையும் கொண்டு கண்ணனை அர்ச்சனை செய்து விடுகிறார்..
மிகக் கோபமாக கம்சனை வதம் செய்த கண்ணன் அந்த மாலாகாரனின் இல்லத்திற்கு வரும்போது மிகவும் சாந்தமாக காட்சியளிக்கின்றார்.. பராக்கிரமம் மிகுந்த கண்ணன் நாம் இருக்கும் உலகம் இன்றி, நாமிருக்கும் நாடு என்று நம் வீடு தேடி வந்து விட்டாரே நான் என்ன செய்த புண்ணியமோ தெரியவில்லை என்று வியந்து போகின்றான் மாலாகாரன்..
தன்னுடன் குருகுலத்தில் பயின்ற ஏழை அந்தணனான சுதாமாவை பிறகு ஒரு காலத்தில் சந்திக்கும்போது அவர் கொண்டுவந்த கைப்பிடி அவலை மிக்க மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அவருக்கு பணிவிடை செய்தார்.. ஏழ்மையில் இருந்த தனது நண்பர் சுதாமாவை செல்வந்தர் ஆக்கினார்..

எனவே பக்தி இருந்தால் போதும் எல்லோரும் அவனை அர்ச்சிக்கலாம் பூஜிக்கலாம்.. இதில் உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என்ற பேதமே இல்லை.. அனைவருக்கும் சமமாக நிற்பவன் என்பதையே ஸாம்யம் என்ற குணம் தெரிவிக்கிறது..