நான் சமீபத்தில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள சில கோயில்களை தரிசனம் செய்தேன்.. அவ்வாறு தரிசிக்கும்போது நன்னிலம் தாலுகா கூத்தனூர் அருகே உள்ள சிதலப்பதி என்கின்ற ஒரு அருமையான தலத்தினை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.. இங்குதான் ஆதிவிநாயகர் குடிகொண்டுள்ளார்..
அரிசில் ஆற்றங்கரையில் அமைந்த இந்த சிதலபதி என்கின்ற தலத்திற்கு திலதர்ப்பணபுரி என்றொரு பெயரும் உள்ளது. இங்கே முன்னோர் கூறிய கடமைகளைச் செய்யும் தலம் ஆதலால் திலதர்ப்பணபுரி என்றாகி இருக்கிறது.. நடுவில் திரிந்து தளபதி என்று மருவியுள்ளது. இங்கு ஓடும் அரசலாறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது.. மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் அமைந்துள்ள கோயில்கள் பரிகாரத்துக்கு வழிபாட்டுக்கும் மிகச் சிறந்தவை என்று கூறப்படுகிறது..
சுவர்ணவல்லி தாயார் சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ள இந்த இடத்தின் அருகே ஆதிவிநாயகர் தனிக் கோயில் கொண்டு உள்ளார்.. இதில் என்ன விசேஷம் என்றால் இங்கே விநாயகர் பொதுவாக உள்ள யானைமுகம் அல்லாமல் மனித முகத்துடன் காட்சியளிக்கின்றார்.. வேறெங்கும் இந்த திவ்ய ஸ்வரூபத்தை காண இயலாது.. மாதம்தோறும் சங்கடஹரசதுர்த்தி என்று ஸ்ரீ அகஸ்தியர் ஸ்தூல சூக்ஷ்ம வடிவங்களில் நேரடியாக வழிவிடும் மூர்த்தி ஆவார் இவர்..
இந்த கோயிலில் அருகே வேத பாடசாலை உள்ளது.. அங்கே பயிலும் மாணவர்கள் தான் இங்கே அர்ச்சகர்களாக பணி புரிகின்றார்கள்.. நான் சென்றிருந்த சமயம் அந்த அர்ச்சகரிடம் மூர்த்தியை புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டேன்.. இந்த அறிய திருவுருவத்தை வாசகர்களும் பார்த்து மகிழ வேண்டும் என்கின்ற ஒரு நல்ல எண்ணத்தில் நான் அவரது அனுமதியை வேண்டினேன்.. ஆனால் அவர்கள் மறுத்து விட்டார்கள்.. இருப்பினும் அந்த மூர்த்தியின் புகைப்படத்தினை கூகுளில் தேடி எடுத்து இங்கே பதிவு செய்துள்ளேன்.. அருமையான ஒரு காட்சியாக ஆதிவிநாயகமூர்த்தி நமக்கு தரிசனம் அளிக்கின்றார்.. வாசகர்களே! அந்தப் பகுதிக்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படுமேயானால் தவறாமல் இந்த அற்புதமான வடிவத்தினை அருள் பாலிக்கும் ஆதி விநாயகனே தரிசனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
