சோழநாட்டில் மணி ஆற்றின் கரையில் சேய்ஞலூர் என்றொரு கிராமம் இருந்தது. அந்த கிராமத்தில் அந்தணரான எச்சத்தன் மற்றும் பவித்திரை ஆகிய தம்பதிகளுக்கு ஒரு மகன் பிறந்தார். அவனுக்கு விசாரசருமா என்று பெயரிட்டனர். அவனது ஏழாம் வயதில் அவனுக்கு உபநயனம் செய்யப்பட்டது. சிவபெருமானே முழுமுதற் கடவுள் என அவர் வழிபட்டார்.
இவ்வாறு இருந்த வேளையில் ஒரு நாள் ஒரு திடலில் சிறுவர்களுடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒரு இடையர் பசுக்களை கொம்பால் அடித்தார். அதனால் கோபம் கொண்ட விசாரசருமர் அதனை தடுத்தார். பின்னர் தானே பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.
பசுக்களை நன்கு மேய்க்கும் வல்லமையும் பெற்றார். அதனால் பசுக்கள் அதிக பாலினை தந்தது. அந்தப் பாலை மணலினால் ஆன சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தார். அதனால் பால் குறைந்தது. பசுக்களின் சொந்தக்காரர்கள் விசாரசருமரின் இந்த செயல் வீணானது என்று நினைத்தனர். விசாரசருமரின் தந்தையிடம் சென்று மணலில் பாலினை ஊற்றி வின் ஆக்குகிறார் என்று புகார் தந்தனர். தந்தையார் எச்சத்தன் அனைவரிடம் மன்னிப்பு கோரி தன்னுடைய மகனை கண்டிக்க சென்றார்.
விசாரசருமர் மணலில் லிங்கம் செய்து அதற்கு பூக்களை சூடி பாலால் அபிஷேகம் செய்து கொண்டிருந்ததை கண்டார். எச்சத்தன் விசாரசருமரை அழைத்தும் பலன் இல்லாமல் போக கோபத்தில் அபிஷேக பால் குடத்தினை எட்டி உதைத்தார். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த வைத்திருந்த பொருளை எட்டி உதைத்து சிவ அபராதம் செய்ததை விசாரசருமரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எனவே தந்தையின் கால்களை நோக்கி தனது கையில் கிடைத்ததை எடுத்து வீசினார். சிவனருளால் அது மழுவாக மாறி எச்சத்தன் கால்களை வெட்டியது.
அதனைக் கண்டுகொள்ளாமல் விசாரசருமர் சிவ பூஜை செய்யத் தொடங்கினார். அவரின் செயலால் சிவபெருமான் உமையோடு தோன்றினார். விசாரசருமர் அவர்களை வணங்கினார். விசாரசருமரை தன்னுடைய கணங்களின் தலைவர் ஆக்கினார். அவருக்கு சண்டேசன் எனும் பதவியான சிவபெருமானின் ஆடைக்கும் பூஜை பொருட்களுக்கும் உரியவராக நியமித்தார். “தாம் உண்ட அமுதம் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக” என்று அவர் தான் கொன்றை மலர் மாலையை விசாரசருமருக்கு சூட்டினார். எச்சத்தனும் உயிர்பெற்று சிவபெருமானை அடைந்தார்.

சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர் சன்னதி கர்ப்பக்கிரகத்தின் இடப்புறமாக கோமுகி அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே அமைக்கப்படுகிறது. பொதுவாக கோமுகிக்கும் கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கும் இடையே அமைக்கப்படுகிறது. இந்த சண்டிகேஸ்வரர் சன்னதியை சுற்றி வருதல் கூடாது என்பதற்காக சில சிவாலயங்களில் சன்னதியை யாரும் சுற்றாத வண்ணம் சிறு தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.
விசாரசருமருக்கு சண்டேச பதவியை தருகின்ற சிவபெருமான் சிற்பம் கங்கைகொண்ட சோழபுரம் சிவாலயத்தில் உள்ளது. இதில் சண்டீசர் கீழே அமர்ந்திருப்பது போலவும் அவருக்கு சிவபெருமான் தன்னுடைய கொன்றை மாலையை சூடாகவும் அமைந்துள்ளது.
இவர் சண்டேஸ்வர நாயனார் என்ற பெயர் பெற்று அறுபத்து மூவரில் ஒருவராக திகழ்கிறார். இவரது குருபூஜை தை மாதம் உத்திர நட்சத்திரம்.