பகுதி 6
சென்ற பதிவில் பரந்தாமனின் கல்யாண குணங்களில் ஒன்றான ஆர் ஜவம் என்ற குணத்தினை பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் அவனது மற்றொரு குணமான சௌஹார்த்தம் என்ற குணத்தினை பற்றிப் பார்ப்போம்.
இதன் பொருளானது, தன்னை அண்டி வந்தவர்களுக்கு விசேஷமாக சில நன்மைகளை செய்வது என்பதாகும். திருவாய்மொழி ஆறாம் பத்தில் உள்ள” வைகல் பூங்கழிவாய்”என்ற பாசுரத்திற்கு நஞ்சீயர் வியாக்கியானம் செய்யும் போது கீழ்க்கண்டவாறு சொல்கிறார்:
“கண்ணன் என்ன செய்கிறான்? பாண்டவர்களின் வேலைகளுக்காக தன்னை பலவிதங்களிலும் மாற்றிக் கொள்கிறான். தாயின் கழுத்தை கட்டிக்கொண்டு அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கூடவே செல்லும் குழந்தையைப்போல, பரம்பொருளான கண்ணபிரான் பாண்டவர்களின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவர்கள் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்கின்றான். அவர்கள் காட்டில் இருந்தாலும், நாட்டில் இருந்தாலும், போர்க்களத்தில் இருந்தாலும் கண்ணன் கூடவே செல்கிறான். அதோடு திருப்தி அடையாமல் அவர்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் காணப்படுகிறான்” என்று அங்கலாய்க்கிறார் நஞ்ஜீயர்.

பாண்டவர்கள் வனவாசம் செய்து தவிக்கும்போதும், அவர்கள் காட்டில் கிடந்து அல்லல் படும் போதும் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறான். சுயம்வரத்தில் திரவுபதியை வென்று அர்ஜுனன் திரும்பும்போது கண்ணன் அவர்களுக்கு தெரியாமல் அவர்களை பின் தொடர்கிறான்.
பாண்டவர்கள் கிராமத்தில் ஒரு பெரிய வீட்டின் பின்பக்கத்தில் ஒரு கொட்டகையில் தங்கியிருந்தபோது, தனது அத்தை குந்தியும், அவளது புத்திரர்களும் படும் துன்பங்களைப் பார்த்து கதறி அழுகிறான். அதுமுதல் அவர்களுடனேயே துணையாக இருக்க ஆரம்பிக்கிறான்.
குருச்சேத்திரப் போரில் பகதத்தன் அர்ஜுனனை நோக்கி வீசிய அஸ்திரத்தினை அர்ஜுனனை காத்து தன் மார்பில் தாங்கி கொள்கிறான். இவ்வாறு தன்னை அளித்து தன்னை அண்டியவர்களைக் காக்கும் தயாபரன் அவன்..
தொடரும்..