பகுதி 5
பரந்தாமனின் கல்யாண குணங்களைப் பற்றி நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சென்ற பதிவுகளில் அவருடைய கல்யாண குணங்களான சௌசீல்யம் மற்றும் மார்தவம் ஆகிய இரண்டு குணங்களை பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் அவருடைய மற்ற ஒரு குணமான ஆர்ஜவம் என்பதனைப் பற்றி பார்க்கலாம்.
மனம், வாக்கு, உடல் ஆகியவற்றின் செயல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து இருப்பதை ஆர்ஜவம் என்று விளக்குகிறார் வேதாந்த தேசிகர். இதற்கு எடுத்துக்காட்டாக ராமாயண நிகழ்ச்சி ஒன்றினை நாம் பார்க்கலாம்.

வனத்தில் சீதையோடும், லட்சுமணனோடும் பஞ்சவடி என்ற இடத்தில் ராமபிரான் தங்கியிருக்கிறார். அங்கே ராவணனின் தங்கை சூர்ப்பனகை வருகிறாள். ராமனைப் பார்த்த அந்த கணமே அவள் அவனுடைய அழகில் தன் மனதை பறி கொடுத்து விடுகிறாள். எனவே இராமனைப் பற்றி தெரிந்து கொள்ள அவர் அருகில் வந்து,” அழகிய வாலிபனே! நீ யார்? முனிவர்களைப் போல உடை அணிந்து தலையில் ஜடை முடி தறித்து காணப்படுகிறாய். உன் மனைவியோடும் நீ வந்திருக்கிறாய்.. இந்த வனத்தில் ராட்சதர்கள் வசிக்கின்றார்கள்.. இங்கே ஏன் எதற்காக வந்தாய்?” என்று பல கேள்விகளை கேட்கிறாள்
தற்செயலாக அங்கே வந்த ராட்சத பெண்ணிடம் ஏதோ ஒரு பதிலை இராமன் சொல்லிவிட்டு அவளை அனுப்பி இருக்கலாம். யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பார்கள். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. மாறாக தனது ஆர்ஜவ குத்தினால் தன்னுடைய சரிதை முழுவதையும் அவரிடம் சொல்கிறார். இதிலிருந்து ஒன்றினை நாம் அறியலாம். மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வாக்கில் ஒன்றைச் சொல்லத் தெரியாதவன் ராமன் என்பதை சரி இந்த நல்ல குணத்தினால் நமக்கு ஏதாவது பயன் உண்டா?’ என்று கேட்டால், உண்டு என்பதுதான் பதில்.
தன்னை நம்பி சரணடைந்தவர்களை காப்பாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு அதை மறந்து விட மாட்டான் ராமபிரான். சொன்னது சொன்னதுதான்.” என்னை சரணடைந்தவர்கள் எல்லோருக்கும் நான் அபயம் அளிப்பேன்.. இது என்னுடைய விரதம்” என்று அவன் அருளிய வார்த்தை மனம் கனிந்து அவன் சொன்னதுதான். சொன்ன சொல் தவறாது அபயம் அளிப்பான். அதற்கு உதாரணம் விபீஷண சரணாகதி.. இதில் சந்தேகம் தேவையில்லை.. இது ஆறுதலுக்காகவோ அல்லது ஏமாற்றும் நோக்கத்தில் சொன்ன வார்த்தைகள் அல்ல..
தொடரும்…
.