மாவிலை தோரணம் கட்டி மாதவனை வரவேறுங்கள் கோல
மாவினில் அவன் பாதம் வைத்து கோவிந்தனை வரவேறுங்கள்
வாயிலில் மாவிலைத் தோரணம்.. வாசல் தெளித்து இழை கோலமிட்டு, கண்ணன் பிறந்த நாளைக் கொண்டாட எல்லோரும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தயாராக இருப்பீர்கள்.! அவனும் தவறாது ஒவ்வொரு இல்லத்திலும் வருவான்.. உன்னிகிருஷ்ணன்..!!நீங்கள் அவன் காலடியை பிரதி எடுத்தீர்கள்..அவன் அதன் மேலேயே அச்சு பிசகாமல் நடந்து வரும் அழகைக் காண முடியும், காத்திருங்கள்.
“ஆடாது அடங்காது வா கண்ணா..
உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து ஆடுதே !!” அவன் நடையழகு எல்லோரையும் கவரும்..அவனது தண்டையும், சதங்கையும் சொல்லும் ஆயிரம் சொல்லும்..
சிலர் கோகுலாஷ்டமி என்று கொண்டாடுவர். சிலர் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுவர்.. எப்போது வேண்டுமானாலும் அவனைக் கொண்டாடலாம்.. அவன் கொண்டாடப் பிறந்தவன் அன்றோ!!
பகவான் பரந்தாமனின் ஒவ்வொரு அவதாரமும் வெகு ஆச்சரியமான விசேஷ அவதாரங்கள்.. அதில் இராமாவதாரமும் கிருஷ்ணர் அவதாரமும் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தது..இந்த இரண்டு அவதாரங்களை வைத்து தானே இரண்டு இதிகாசங்கள் தோன்றின.!
ஒருத்தி மகனாகய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாகய் வளர்ந்தவன் அவனல்லவா!!
மதுராவில் இரவு நேரத்தில் தேவகிக்கு திருக் குமரனாய் ஜனித்து தாய் மாமன் கம்ஸனை வதம் செய்ய கோகுலத்தில் நந்த கோபன் யசோதை தாயாரிடம் செல்லப் பிள்ளையாக வளர்ந்தான் அல்லவா? அவன் பால லீலைகள் படிக்கவும் கேட்கவும் தேவாம்ருதமானது..
குழந்தை கண்ணனை ஒரு பாசமிகு தாய் போல் தன்னையே யசோதையாக்கி பெரியாழ்வார் திருவாய்மொழியில் நீராட்டம் என்ற தலைப்பில் பத்து பாசுரங்கள் பாடியுள்ளார்..
“ வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணென இவ்விரா உன்னைத் தேய்த்து கிடக்க நான் ஒட்டேன்
எண்ணெய் புளிப் பழம் கொண்டு இங்கெத்தனை நேரம் இருந்தேன்
நண்ணல் அரிய பிரானே! நாரணா! நீராட வாராய்!”
இதை விட ஒரு தாயின் பரிவு எங்கனம் வெளிப் படும்.. இந்த பத்து பாசுரங்களிலும் கண்ணனின் பால லீலைகளை அனுபவித்து பாடியிருக்கிறார்..அவனது குறும்புத்தனத்தால் அவன் நம்மை எல்லார் மனதையும் கொள்ளை கொண்டுள்ளான்.. அதனால் தானோ என்னவோ நம் வீட்டு குழந்தைகளுக்கு என்ன பெயர் வைத்திருந்தாலும் கூட ” கண்ணா” என்று செல்லமாக அழைக்கிறோம்.. அந்த அளவிற்கு நம் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளான்..
பெரியாழ்வார் அத்தோடு விட்டாரா!! கண்ணனுக்கு தலைவாரி கொண்டை போட்டு அதில் முத்து மாலை சுற்றி மயில் பீலி செருகி அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் அலங்காரம் செய்து யசோதை தாயார் மகழ்கின்றார்.. சற்று வளர்ந்த கண்ணனிடம் பெரியாழ்வார் கண்ணன் ஆநிரை மேய்க்க போவாய் அதனால் அதற்கு முன்பாக அழகும் வாசனையும் நிறைந்த மலர்களைச் சூட்டிக் கொள்ள அழைக்குமா போலே பூச்சூட்டல் என்ற தலைப்பில் பத்து பாசுரங்கள் பாடியுள்ளார்..
“ஆநிரை மேய்க்க நீபோதி அருமருந்து ஆவதறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரியதிருமேனி வாட்
பானையில் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்பு
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய்”
என்று அழைக்கினறார்..இப்படியே மல்லிகை, பாதிரி, தமனகம், செங்கழுநீர், புன்னை, குருக்கத்தி, இருவாச்சி, கருமுகை ஆகியவைகளை சூட்டிக் கொள்ளுமாறும் ஆழ்வார் வேண்டுகிறார்.!
கண்ணனுக்கு திருஷ்டி தோஷங்கள் வராதபடி திருவந்திக் காப்பிட அழைக்கும் வண்ணமாக பத்து பாசுரங்கள் பாடியுள்ளார்..
இதில் பெருமாளையே பிள்ளையாக பெற்றிருந்தாலும் ஒரு சாதாரண தாய் தன் மகனுக்கு எவ்வாறு பரிவுடன் திருஷ்டி சுத்தி போட அழைப்பாளோ அந்த பாவம் ஒரு பாசுரத்தில் மிளிர்கிறது.
” பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாம் உன் மேலன்றி போகாது எம்பிரான் இங்கே வாராய்”
இந்த இடத்தில் நாம் சற்று கவனித்தால், கோகுலத்தில் பிள்ளைகள் செய்யும் குறும்புகளுக் கெல்லாம் கண்ணன் தான் காரணம் என்று ஆய்ச்சியர் எல்லோரும் புகார் தெரிவித்துள்ளனர்..ஆகவே, கண்ணனின் குறும்புகளை ரசித்தாலும் யசோதை கோகுல ஆய்ச்சியர் தன் கண்ணன் மீது வீண் பழி சுமத்துகின்றனர் என்றே கருதுவதாக இந்த பாசுரம் அமைந்துள்ளது..

கர்நாடக இசை உலகில் ஊத்துக்காடு வெங்கடகவி மிகவும் பிரசித்தி பெற்றவர்.. அவரது தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த, அலை பாயுதே கண்ணா, பால் வடியும் முகம், ஆடாது அடங்காது வா கண்ணா, ஸ்வாகதம் கிருஷ்ணா போன்ற பாடல்கள் கண்மூடி ரசித்துக் கேட்டால் நம் கண் முன்னே கண்ணனின் நாட்டியம் தெரியும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமா?
ஊத்துக்காடு நர்த்தன கிருஷ்ணர்.. இந்த கோயில் கும்பகோணம் அருகே உள்ளது. அங்கே கண்ணன் விக்ரகம் நர்த்தனமாடும் நிலையில்.. காளிங்கன் மீது ஆடும் நிலையில் இடது கைகட்டை விரல் மட்டுமே காளிங்கனின் வால்பகுதியை ஒரு நுனியில் தொட்டு கொண்டு அந்த மொத்த விக்ரகமும் அந்தரத்தில் நிற்கும் அருமையான காட்சி.. வாய்ப்பு கிடைக்கும் போது தரிசனம் செய்யுங்கள்.

முண்டாசுக் கவிஞர் பாரதி கண்ணனை தோழனாக, தாயாக, தந்தை யாக, சேவகனாக, அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, விளையாட்டு பிள்ளையாக, காதலனாக, காதலியாக, குலதெய்வமாக, தனக்கு என்னவாயெல்லாம் அவன் இருக்கின்றான் என்பதை உருவகப்படுத்தி பாடல்கள் இயற்றியுள்ளார்..
அதிலும் கண்ணன் என் சேவகன் பாடல் மனதைவிட்டு நீங்காது..
எங்கிருந்தோ வந்தான் இடைச் சாதி நானென்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திடுவான்
சின்னக் குழந்தைக்கு சிங்காரப் பாட்டி சைப்பான்
கண்ணை இமை இரண்டும் காப்பது போல் நம் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
ஆம் நம் கண்ணன் ஒவ்வொரு இல்லத்திலும் அவரவர்களுக்கு வேண்டிய வண்ணம் கூடவே இருக்கின்றான்..அவனை நழுவ விட்டு விடாதீர்கள்..
இங்கே இன்னோரு பாடலும் நினைவிற்கு வருகிறது.. திருமதி.அருணா சாய்ராம் பாடும் மாடு மேய்க்கும் கண்ணா நீ போக வேண்டாம் சொன்னேன்.. என்ன அற்புதமான பாடல்.. கண்ணனைப் பற்றி பேசப் பேச பேசி முடியாது..

கண்ணன் பிறந்தான் என்று சொல்லச் சொல்ல இனிக்கும்..
கிருஷ்ணரின் மதனகோபால மந்திரத்தை நாம் வாழ்நாளில் குறைந்தது 1008 முறையாவது ஜெபித்தால் எல்லா காரியங்களும் வெற்றி பெறும்..
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கிருஷ்ணாய கோவிந்தாய கோபிஜன வல்லபாய ஸ்வாஹா//
இந்த நன்னாளில் எல்லோரும் தங்கள் மனதில் கண்ணனை தியானித்து அவன் வர வேண்டும் என்று வேண்டுங்கள்.. அவன் நிச்சயம் தங்கள் இல்லம் தேடி வருவான்..
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!!