தென்னாட்டிலே தமிழகத்திலே சீரும் சிறப்புமிக்க பல வளங்களை கொண்ட பெண்ணாடகம் என்ற ஊரிலே வணிக குலத்தில் தோன்றியவர் கலிக்கம்பர். இவர் அன்றாடம் சிவனடியார்களை பாத பூஜை செய்து அறுசுவை உணவளித்து அவர்களுக்கு வேண்டிய பொன்னும் பொருளும் கொடுத்து அளவற்ற சேவை செய்து மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.
. இயற்கையிலேயே இவர் கவி பாடும் திறன் உடையவர்.. அதனால் மூவேந்தர்கள் இடத்தில் பாடல் பாடி பொன்னும் பொருளும் ஈட்டி வந்தார். இவர் சிவத்தொண்டு செய்து வந்த காலையில் ஒரு நாள் வழக்கம்போல ஒரு சிவனடியார் வந்தார். கலிக்கம்பர் பீடத்தில் அமர்த்தி பாதபூஜை செய்ய தொடங்கினார். அவரது மனைவி யார் வீட்டினை சுத்தமாக விளக்கி அறுசுவை உணவுகளை சமைத்து ஒரு செம்பில் தூய நீருடன் கணவருக்கு அருகே வந்தார்.

அப்போது அந்த சிவனடியாரை பார்த்ததும் அவருக்கு சற்று அருவருப்பு ஏற்பட்டது. காரணம் அந்த சிவனடியாராக வந்துள்ளார் மனிதர் முன்னர் கலிக்கம்பரிடம் பணியாளராக வேலை பார்த்தவர்.. ஆகவே அவர் மீது சற்று வெறுப்பு ஏற்பட்டு நீர் வார்க்கத் தயங்கி நின்றார். மனைவியின் தயக்க நிலை கண்ட கலிக்கம்பர் மிகவும் கோபம் கொண்டார். தனது மனைவியின் தயக்கத்திற்கான காரணத்தினை புரிந்துகொண்டார். சிவனடியாராக வந்திருக்கும் அடியார்க்கு பணிவிடை செய்ய தயக்கம் காட்டும் தன் மனைவி மீது மிகுந்த கோபம் உண்டாயிற்று. விரைந்து சென்று வாள்
எடுத்துவந்து நீர் வார்க்க தவறிய மனைவியின் கையை வெட்டி விட்டார். கலிக்கம்பரின் இந்த செயலைக் கண்ட அந்த சிவனடியார் அதிர்ச்சியுற்றார். கலிக்கம்பரின் மனைவியோ கரத்திலிருந்து ரத்தம் ஆறாய்ப் பெருக சிவனை நினைத்த வண்ணமே மயங்கி விழுந்தார்.
அப்போது அந்த அறையில் ஒரு பேரொளி தோன்றி பிரகாசமாக நின்றது. சிவபெருமான் பார்வதி தேவியுடன் ரிஷபத்தின் மேல் அமர்ந்து கலிக்கம்பர் காட்சியளித்து அவரது திருத்தொண்டின் மகிமையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி இந்த திருவிளையாடல் புரிந்ததாக கூறினார். கலிக்கம்பரின் மனைவியும் மயக்கம் நீங்கி அவரது கரம் முன்போல பெற்று எழுந்தார்.. பின்னர் அன்பர்களுக்கு அருள் புரிந்த எம்பெருமான் மறைந்தார்.
கலிக்கம்பர் மனைவியோடு உலகில் நெடுநாள் வாழ்ந்து இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து இறுதியில் ஈசனின் திருவடி மலர்களை சேர்ந்து பேரின்பம் பூண்டார்.
இவரது சிவத் தொண்டின் காரணமாக இவர் கலிக்கம்ப நாயனார் என்று அழைக்கப்பட்டு 63 நாயன்மார்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
இவரது குருபூஜை தை மாதம் ரேவதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.
“கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பர்க்கு அடியேன்” என்கிறது திருத்தொண்டத்தொகை.”