பகுதி 2
முருகப்பெருமானின் பன்னிரு கரங்களில் இரு கரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தை செலுத்துகிறது. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்திருக்கிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலை சுழற்றுகின்றன. ஏழாவது கை முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள மாலையோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.

முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவதாக திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோயிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
அடுத்து நாம் பார்க்க இருப்பது திருச்செந்தூர். இந்த படை வீடு அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும். இந்த தலத்தில் முருகன் சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. இங்குள்ள முருகனின் திருப்பெயர் சுப்பிரமணிய சுவாமி ஆகும்.
அடுத்து நாம் பார்க்க இருப்பது பழனி. இது முருகனின் மூன்றாம் படை வீடு. நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால் முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த தலத்தில் தங்கி விட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள முருகனின் திருப்பெயர் தண்டாயுதபாணி.
அடுத்து நாம் பார்க்க இருப்பது முருகனின் நான்காவது படை வீடான சுவாமிமலை ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான சிவபெருமானுக்கு”ஓம்”என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்ததால் இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் என பெயர் உண்டாயிற்று.
ஐந்தாவதாக நாம் பார்க்க இருக்கும் படைவீடு திருத்தணி ஆகும். இந்த இடத்தில் மலையில் வள்ளியை முருகன் திருமணம் செய்துகொண்ட தலமாகும். திருத்தணி குன்றின்மீது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தணி முருகன் கோயில் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் இது. முத்துசாமி தீட்சிதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்று அழைப்பார்கள்.
இறுதியாக நாம் பார்க்க இருக்கும் ஆறாவது படைவீடு பழமுதிர்ச்சோலை ஆகும். முருகப்பெருமான் சிறுவனாக வந்து அவ்வையாரை சோதித்தது இங்குதான் என நம்பப்படுகின்ற இடம் இதுவாகும். அருணகிரிநாதர் இந்த தலத்தின் மீதும் திருப்புகழ் பாடியுள்ளார்.
தொடரும்..