இந்தத் தொடரில் ஹரி என்ற திருநாமத்திற்கு உண்டான பெருமைகளையும் ஒவ்வொரு திருநாமத்தில் உள்ள மகிமைகளையும் பற்றி கூறி வருகிறேன்.
ஹரி என்ற திருநாமத்தைத் தவிர பரந்தாமனுக்கு பல பெயர்கள் உள்ளன. அவற்றில் குறிப்பாக கோவிந்தன் என்ற திருநாமத்தில் துவங்கி ஸ்ரீதரன் என்ற திருநாமம் உடைய உள்ள திருநாமங்களுக்கான பொருள்களை கூறி வந்துள்ளேன்.
இப்போது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ள திருநாமங்கள் ஒவ்வொன்றிற்கும் உள்ள பொருளை தர விழைகிறேன். விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு பராசரபட்டர் “பகவத் குண தர்ப்பணம்”என்கிற உரையினை எழுதியுள்ளார். அவற்றிலிருந்து இந்தத் திருநாமங்களுக்கான பொருளை தெரிவிக்கிறேன்.

1) விச்வம்
இதன் பொருள் முழுமையாக உள்ளவன். முதலில் எம்பெருமான் அனைத்து விதத்திலும் பூரணமாக உள்ள தன்மையை குறிப்பிடுகிறது. இந்தத் திருநாமம்”விச்”என்ற மூலத்திலிருந்து, அனைத்து அவையவங்களிலும் பிரவேசிக்கிறார் என்ற பொருளில் வந்தது. மகாபாரதம் மோக்ஷ தர்மத்தில்-“வேசநாத் விச்வமித்யாஹு: லோகாநாம் காசிஸத்தம லோகாம்ச்ச விச்வம் ஏவ இதி ப்ரவதந் நராதிப”-
இதன் பொருள்”காசி அரசனே! அனைத்து உலகங்களிலும் பிரவேசிப்பதால் எம்பெருமானை விச்வம் என்கின்றனர். இதனால் அந்த உலகங்களையும் விச்வம் என்கின்றனர்.”என்பதாகும். எம்பெருமான் தன்னுடைய ஸ்வரூபம், ரூபம், குணம் மற்றும் விபவம் ஆகிய அனைத்தையும் இயல்பாக கொண்டுள்ளான். இவற்றை முழுமையாகவும் பூரணமாகவும் கொண்டுள்ளான். இவற்றைப் போன்று வேறு யாருக்கும் இவை இப்படியாக இல்லை. இவனை விட உயர்ந்தவர்களும் இந்த விஷயங்களில் இல்லை. இவை அனைத்தும் மங்களகரமாக உள்ளன. விச்வம் என்பது முழுமையைக் குறிக்கும். எல்லையற்ற குணங்கள் கொண்ட பகவானை இப்படி முதலில் கூறியது பொருத்தமே ஆகும்.
விச்வம் என்ற பதம் பொதுவாக காரியத்தை குறிக்கிறது. ஆனால் இங்கு காரணத்தை குறிப்பதாக உள்ளது என்று சிலர் கூறுகின்றனர். எம்பெருமானே அனைத்து திருநாமங்களுக்கும் மூலமாக, சொல்லிலக்கணம் ரீதியாகவும் உபயோக ரீதியாகவும் விளங்குகிறான். அப்படி உள்ளபோது இந்த திருநாமங்களின் இரண்டாம்பட்சமாக எம்பெருமானை கொள்ள இயலாது.
ஆகவே முதலில் சொன்னது போல விசுவம் என்ற பெயருக்கு முழுமையாக உள்ளவன் என்பதே பொருத்தமாக இருக்கும்.
தொடரும்