ஆதி சக்தி பீடங்களின் வரிசையில், இதுவரை ஒடிசாவில் உள்ள விமலா தேவி கோவில் மற்றும் தாரா தாரிணி தேவி கோவில் ஆகியவற்றைப் பார்த்தோம். தற்போது அசாமில் உள்ள காமாக்யா கோவில் பற்றி பார்க்கலாம்.
காமாக்யா கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். பரத கண்டத்தில் அசாம் மாநிலத்தில் கௌஹாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றின் மீது அமைந்துள்ளது. இங்குள்ள 10 தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும். இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்யா கோவிலினுள் அமைந்துள்ளன. மற்ற ஏழும் தனித்தனி கோயில்களாக அமைக்கப்பட்டுள்ளன.

அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் நீலாச்சல் என்ற மலை இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யா தேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர் பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது தாட்சாயணி என்கின்ற சதி தேவியின் யோனி விழுந்த சக்தி பீடமாக போற்றப்படுகிறது.
காமாக்கியா தேவிக்கு திரிபுரபைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனி மண்டல வாசினி, மகா காளி, மகாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்த தலத்தை காமரூபம், ஹரி க்ஷேத்திரம், ப்ரகஜோதிஷபுரம், காமகிரி, காம யோனி மண்டலம், மகாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பருவதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோவிலில் விக்ரகம் ஏதும் இல்லை. இங்கே ஒரு யோனி வடிவத்தில் உருவான ஒரு தட்டையான பாறை மட்டுமே வணங்கப்படுகிறது.
இங்கு பாண்டவர்கள் தேவியை வழிபட்டதாக மகாபாரதத்தின் விராட பருவம் மற்றும் விஸ்வ பர்வம் கூறுகிறது. மேற்படி பருவங்களில் காமாக்யாவை அர்ஜுனனும், யுதிஷ்டிரரும் வழிபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் தந்திர சூடாமணி போன்ற பல தந்திர நூல்களும் இக்கோயிலில் சக்தி பீடங்களில் மிக உயர்ந்த பீடமாக சொல்கின்றன. மேலும் காளிகா புராணம் கூறும் மிக முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.
இக்கோயில் பற்றிய தகவல்கள் வேத வியாசரின் தேவி பாகவத புராணத்திலும் உள்ளது.
பத்தாம் நூற்றாண்டில் அஸ்ஸாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்ட உண்மையான காமாக்கியா கோவில் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. தற்போது உள்ள கோயிலை கூச் பிகாரின் அரசர் நர நாராயணா
என்பவர் கிபி 1565ல் மீண்டும் கட்டினார். 1665 இல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலின் வெளித்தோற்றத்தை பார்த்தாள் மட்டுமே கோவையில் போல தோன்றும். உள்ளே சென்றால் இருண்ட பாதாள குகை போன்று இருக்கும். இங்கு சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யா வின் யோனி பீடத்தை தரிசிக்கலாம். அங்கிருந்து வரும் நீர் ஊற்று நீரை பக்தர்கள் தீர்த்தமாக போற்றுகின்றனர்.
இக்கோவிலில் தசமஹா வித்யா தேவிகள் காளி, தாரா, லலிதா திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி மற்றும் கமலா ஆகியோருக்குத் தனிச் சன்னதிகள் உண்டு.
இங்கு நடக்கும் திருவிழாக்கள்:
1) அம்புபச்சி மேளா:- அம்புபாச்சி என்ற சொல் அம்பு மற்றும் பச்சி ஆகிய இரண்டு சொற்களால் ஆனது. காமாக்கியா கோயிலின் புனிதப் பண்டிகைகளில் ஒன்றாகும்.
2) துர்கா பூஜா
3) மானஷா பூஜா.
தொடரும்.