அத்தியாயம் 3
கருணாமூர்த்தியான சிவபெருமானின் 64 வடிவங்களினைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது இலிங்கோத்பவர்.
இலிங்கோத்பவர்

சிவபெருமானது உருவ திருமேனிகளில் இலிங்கோத்பவர் அல்லது இலிங்கோற்பவர் ஒன்றாகும். இந்த மூர்த்தம் பொதுவாக சிவாலயங்களில் கருவறையின் பின்புறச் சுவரில் மேற்கு நோக்கிய வண்ணம் காணப்படும். சிவன், ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியன் என்பதனை விளக்கும் வண்ணம் அமையப்பெற்றது..
இங்க சிவமூர்த்தத்தின் அடியில் வராக வடிவில் திருமாலும், அன்னப்பட்சி வடிவில் நான்முகனும் காணப்படுவர்.
“மாலும் நான்முகன் தானும் வார் கழற் சீல மும்முடி தேட நீண்டெரி போலும் மேனியன் பூம்பு கலியுகம் பால் தாடிய பண்பன் நல்லனே”என்று திருமுறை சொல்கிறது.
லிங்க புராணத்தின் படி ஒருமுறை திருமாலுக்கும் நான்முகனும் தம்மில் யார் பெரியவர் என்ற வாதம் உண்டாயிற்று. இதனை தீர்க்க சிவன் இடத்தில் சென்று முறையிட்டார்கள். அப்போது சிவன் லிங்கோத்பவர் உருக்கொண்டு இதன் அடியையோ முடியையோ இவர் முதலில் காண்பாரோ அவரே உயர்ந்தவர் ஆவார் என கூற, திருமால் பன்றி உருக்கொண்டு அடியினையும், நான்முகன் அன்னப்பறவை உருக்கொண்டு முடியினையும் காண துணிந்தார்கள். இருவரும் காண இயலாது தம் தோல்வியுற்று சிவனே உயர்ந்தவர் என உணர்ந்தனர். இந்த நாளே சிவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரி தினத்தன்று மூன்றாம் ஜாம பூஜை காலம் லிங்கோத்பவ காலம் என குறிப்பிடப்பட்டு இந்த வேலையில் லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.
இந்த திருவுருவ மேனி தத்துவத்தை உணர்த்துவதே திருவண்ணாமலை கோயில். அக்னியின் உருவமாக லிங்கோட்பவர் நின்ற இடம். பஞ்சபூதத் தலங்களில் இது அக்னி தலமாகும். இங்க வருடம்தோறும் நடைபெறும் அண்ணாமலை ஜோதி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தமிழகத்தில் முதன்முதலில் ராஜசிம்ம பல்லவனால் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் லிங்கோத்பவர் சிற்பம் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சிவாலயங்களில் கருவறையின் பின்புறம் அதுவரைக்கும் அமைக்கப்பட்டிருந்த அர்த்தநாரீஸ்வரர் படிமத்திற்கு பதிலாக லிங்கோத்பவர் அமைக்கப்படுவது தொடங்கியாயிற்று. இதன் தொடர்ச்சியாக பிற்கால சோழர்களாலும் இந்த முறை பேணப்படுகிறது.
தொடரும்