பகுதி 3
சென்ற இரண்டு பகுதிகளில் பரந்தாமன் ஆகிய ஸ்ரீமன் நாராயணனின் கல்யாண குணங்கள் யாவை என்று பார்த்தோம்.. இப்போது அவைகளை ஒவ்வொன்றாக சற்று விரிவாகப் பார்ப்போம்.
சௌசீல்யம்:
சீலம் என்றால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமின்றி நெருங்கி பழகுவது. எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் பெரியோரிடத்திலும், சிறியோரிடத்திலும் பழகும் தன்மை சௌசீல்யம் எனப்படுகிறது.
ஜீவாத்மாக்கள் பரமாத்மாவின் நெருங்கிக் கலக்காமல் போவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. எம் பெருமானின் பெருமைகளை அறிந்த ஜீவன், அவனை அணுகுவதற்கு தனக்குத் தகுதி இல்லையே என்று நினைத்து பயந்து ஒதுங்கி விடுவது ஒன்று. சர்வேஸ்வரன் ஆகிய நாம் இந்த மானுட பக்தர்களுடன் கலந்து பழகுவது சரியா? கூடாது என்று இறைவனை ஒதுங்கி விடுவது இரண்டாவது. இந்த இரண்டுமே இல்லாமல் இருப்பதே சௌசீல்யம்.
ஒரு விருந்தின்போது தமக்கு சரி சமமாக உள்ளவர்கள் உடன் தான் உண்ண வேண்டும் என்கின்ற எண்ணம் நமக்கு வந்துவிடுகிறது.. நம்மைப் போன்ற சாதாரண மக்களின் அகம்பாவம், செருக்கு. ஆனால், பகவான் அப்படிப்பட்ட இழிவான குணங்களைக் கொண்டவன் அல்ல.. அவன் ஒரு குணக்குன்று.
எம்பெருமான் ராமனாக அவதரித்தபோது தன் பெருமையை பாராட்டி கொண்டிருக்காமல், வேடர்களோடும், குரங்குகளோ டும், நெருங்கி பழகினார்.. குகனுடன் ராமர் பழகிய பழக்கத்தை அவனுக்கு அவர் அருள் செய்ததை நினைத்து, உருகினார் திருமங்கையாழ்வார்.. தனக்கும் அந்த மாதிரியாக அவன் அருள் செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார். சௌசீல்ய குணத்தை அங்கு உணர்ந்தவர்கள், கடவுளை தனது தோழனாகவும், பணியாள் ஆகவும் கூட எண்ணலாம்.. ஏனென்றால் அவன் பக்தர்களுக்கு பரிவு செய்யும் பரந்தாமன்.. சௌசீல்ய குணத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டுமென்றால் பாரதியாரின் கண்ணன் பாடல்களைக் கேட்டாலே போதும்.. நண்பனாய், சேவகனாய், நல்லா ஆசிரியனாய் இப்படி பலப்பல ரூபங்களில் அவன் நமக்கு அருள் செய்கிறான்.. மகாபாரதத்தில் துவாரகையின் அரசனாக இருந்த போதிலும், பாண்டவர்களுக்காக தூது சென்றான்.. அர்ஜுனனுக்கு தேரோட்டியாக நின்றான். கிருஷ்ணாவதாரத்தில் இவர்களோடு உறவு பாராட்டி கொண்டிருக்கிறார்.
இத்தகைய பெருமைகளைக் கொண்டவர் நமக்கு சுவாமி யாகவும் இருக்கிறார். மிகவும் நெருங்கியவனாகவும் இருக்கிறார்.. அப்படிப்பட்ட பெருமைகளை கொண்ட அந்த பரந்தாமனே கண்டு நாம் அஞ்ச தேவையில்லை. நன்றே செய்து, அதை இன்றே செய்து அவனிடத்தில் மாறா பக்தி கொண்டால் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
தொடரும்..