கழற்சிங்கன் ஒரு நாள் திருவாரூரை அடைந்து திருக்கோயிலை வணங்கச் சென்றார்.. அப்போது திருக்கோயிலை வலம் வந்து திருப்பூ மண்டபத்தை அடைந்த அவரது மனைவி அங்கே கீழே விழுந்து கிடந்த மலரொன்றை எடுத்து முகர்ந்தாள்..

அவள் கையில் புது மலரை கண்ட அங்குவந்த செருத்துணையார் என்னும் சிவனடியார் இவள் இறைவனுக்குச் சாத்தும் மலரை முகர்ந்தாள் என்று வெகுண்டு அம்மலரை எடுத்து முகர்ந்த மூக்கினை கத்தியால் அரிந்தார்.. அவள் கீழே விழுந்து அரற்றினாள் அழுதாள்.. உள்ளே பூங்கோயில் இறைவரை பணிந்து வெளியே வந்த கடல் சிங்கர் அவளின் புலம்பலை அறிந்து வந்து மிகவும் வெகுண்டு’அச்சமின்றி இந்த கொடுஞ்செயலை செய்தவர் யார்?’என்று வினவினார்.. அருகே நின்ற செருத்துணையார்’இவள் இறைவர்க்கு சார்த்துதற்குரிய மலரை எடுத்து முகர்ந்தமையாலே, நானே இதைச் செய்தேன்’ என்றார்.. அப்போது கழற்சிங்கர், அவரை நோக்கி,’பூவை எடுத்த கையை யன்றோ முதலில் வெட்டுதல் வேண்டும்?”என்று சொல்லித் தம் உடைவாளை உருவி தனது மனைவியின் கையை துண்டித்தார்..

இத்தகைய அரிய தொண்டினைச் செய்த கழற்சிங்கர் சைவநெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நிழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்றார்..
கழற்சிங்கர் பல்லவர் குலத்திலே தோன்றிய மன்னராவார்.. சிவனடி அன்றி வேற என்று அறிவினிற் குறியாதவர்.. வடபுல வேந்தரை வென்று, அறநெறியில் நின்று நாடாண்ட வேந்தர்.. இவர் துண்டித்தது தனது பட்டத்து அரசியின் கையினையே ஆகும்.. இவர் கழற்சிங்க நாயனார் என்ற பெயருடன் 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தார்..
பல்லவ மன்னரான மூன்றாம் நந்திவர்மனே, கழற்சிங்கர் என்பது இராசமாணிக்கனாரின் பெரிய புராண ஆராய்ச்சி நூலில் சொல்லப்பட்டுள்ளது.. ராஷ்டிர கூட அரச மரபில் வந்த சிறந்த சமண பக்தரான அமோகவர்ஷ நிருபதுங்கன் மகள் சங்கா தான் தண்டிக்கப்பட்ட பட்டத்தரசி என்பதும் ராசமாணிக்கனார் ஆராய்ச்சி முடிவு..
“கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்”என்று கூறுகிறது திருத்தொண்டத்தொகை..