“நமச்சிவாய வாழ்க!
நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க!!
மூங்கில்கள் போல தோள்களை உடைய உமையவளுக்கு தனது இடப்பாகத்தை தந்தருளி வேயுறுதோளிபங்கன் என்ற திருநாமத்தைப் பெற்றார் பரமேஸ்வரன்.. அவரது பெருமைகளைப் பற்றி நான் படித்த அளவு பகிர்ந்து கொள்ளத்தான் இந்த தொடர்.

சிவன் என்ற பெருமான் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர்.இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களென்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்படுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார்.சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள் என்று திருமாலின் அவதாரங்களில் ஒருவரான வேதவியாசர் கூறுகின்றார். பிரம்மன் தன்னால் படைக்கப்பெற்ற உயிர்களை அழிக்க ஈசனிடம் வேண்டிநிற்க பிரம்மரின் மகனாக மும்மூர்த்திகளில் அழிக்கும் கடவுளான ருத்திரன் உதித்தார் என்று வாயு புராணம் கூறுகின்றது. சிந்து சமவெளி நாகரீகத்தின் மொகஞ்சதாரோ ஹரப்பா பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பெற்ற, தியானத்திலுள்ள, பசுபதி முத்திரையே, சிவவழிபாட்டின் மூலம் என்று சொல்லப்படுகின்றது. மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி, மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை “பசுபதி முத்திரை” என்று அழைக்கப்பெறுகிறது.
இந்து மதத்தில் ருத்ரன், சிவன் இருவருமே ஒரே கடவுளாகக் கருதப்பெறுகிறார்கள். இந்து மதத்தின் பழமையான ரிக் வேதத்தில் ருத்ரன் கடவுளாகக் கூறப்பெறுகிறார். இவர் வில் அம்பினை ஆயுதமாக உடைய வில்லாளனாகச் சித்தரிக்கப்பெறுகிறார். மேலும் பிரம்மாவிலிருந்து தோன்றியவராகவும், புயல்களின் கடவுளான மருத்துக்களின் தந்தையாகவும் அறியப்பெறுகிறார். அக்னி தேவன், வாயு தேவன், இந்திரன், பிரஜாபதி போன்ற வேதக்கடவுள்களே, பிற்காலத்தில் சிவனாக வளர்ந்ததாகச் சொல்லப்படுகிறது
சிவனை “சிவம்” என்றும், “சிவப்பரம்பொருள்” என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள். சிவன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று, ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களை(ஆணவம்,கன்மம்,மாயை)யும் போக்கி வீடுபேறு அருளுகிறார். தன்வயத்தனாதல், தூய வுடம்பினனாதல், இயற்கையுணர் வினனாதல், முற்றுமுணர்தல், இயல்பாகவே கட்டுகளின் (பாசங்களின்) நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பி லின்பமுடைமை என எட்டுவகை குணங்களையும் சிவன் கொண்டுள்ளார். என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர் என்றெல்லாம் சித்தாந்தம் சிவனை வரையறுக்கின்றது.
சிவபெருமான் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் உள்ளார். அருவத்திருமேனி” சத்தர்” என்றும், அருவுருவத்திருமேனி “பரம்பொருள்” என்றும், உருவத்திருமேனி “பிரவிருத்தர்“என்றும் அழைக்கப்படுகிறது. அருவுருவமாக இலிங்கமும், மகேசுவரமூர்த்தங்கள் மற்றும் சிவஉருவத்திருமேனிகள் ஆகியவை, உருவத்திருமேனியாகவும் சைவர்களால் வழிபடப்படுகின்றன.
தடத்தநிலையில் ஈசன் கொள்ளும், அறுபத்து நான்கு வடிவங்கள் ஆகமங்களில் விளக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிறப்பான இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் “மகேசுவர மூர்த்தங்கள்” என்று அழைக்கப்படுகின்றன.
சிவபெருமானை மூலவராகக் கொண்டு உலகம் முழுவதும் கோயில்கள் இருக்கின்றன. குறிப்பாகக் ” கம்போடியா, நேபாளம், இலங்கை, இந்தியா” எனப் பல நாடுகளைக் கூறலாம். இவற்றினைவிடவும் “பாரத கண்டம் “என்றும் அழைக்கப்படுகின்ற இந்தியாவில் அநேக சிவாலயங்கள் உள்ளன. அவை எண்ணிக்கை அடிப்படையில்” பஞ்சபூதத் தலங்கள், பஞ்ச கேதார தலங்கள், பஞ்ச தாண்டவ தலங்கள், பஞ்ச குரோச தலங்கள், ஆறு ஆதார தலங்கள், சப்த விடங்க தலங்கள்,சப்த கரை சிவ தலங்கள்,சப்த கைலாய தலங்கள், அட்டவீரட்டானத் தலங்கள், நவலிங்கபுரம், நவ கைலாயங்கள் “எனவும், சைவ அடியார்களால் பாடல் பெற்றதைக் கொண்டு தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள், “தேவார வைப்புத் தலங்கள், திருச்சிற்றம்பலக் கோவையார் திருத்தலங்கள், திருவிசைப்பாத் திருத்தலங்கள்” எனவும், வன விசேச தலங்கள், முக்தி தரவல்ல சிவத்தலங்கள், சோதிர்லிங்க தலங்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.
இவற்றில் தேவாரம் பாடல் பெற்ற தலமானது காவிரி தென்கரைத் தலங்கள், காவிரி வடகரைத் தலங்கள், பாண்டிய நாட்டு தலங்கள், கொங்கு நாட்டுத் தலங்கள், நடுநாட்டுத் தலங்கள், தொண்டை நாட்டு தலங்கள் எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன..
தொடரும்