வட வெள்ளாற்றின் தென்கரையில் இருக்கு வேளூர் என்னும்தலம் உள்ளது.. அந்த தலத்தில் பெருங்குடி மக்களின் ஒப்பற்ற தலைவராய் ஒரு சிவநெறிச் செல்வர் வாழ்ந்தார்..அவரது பெயர் கணம் புல்லர்..இவர் இறைவனுக்கு நெய் விளக்கு ஏற்றும் பணியை நாள்தோறும் தவறாமல் செய்து வந்தார்..
கோயில்களுக்கு நெய் விளக்கு ஏற்றுவதனால், இருளடைந்த இந்த மானிடப் பிறவி என்னும் அஞ்ஞான இருள் நீங்கி, அருளுடைய ஞான இன்ப வீட்டை அடைய வழி பிறக்கும் என்று எண்ணி, இதனை செய்து வந்தார்.. நாளடைவில் அவரது செல்வம் யாவும் குறைந்து வறுமை ஏற்பட்டது.. அந்த நிலையிலும் அவர் தனது தொண்டினை தவறாமல் செய்து வந்தார்.. அப்போது இந்த நிலையில் அவர் இருக்கு வேளூரில் ஏழையாக இருக்க விரும்பவில்லை.. எனவே தன்னிடமுள்ள நிலபுலன்களை விற்று, ஓரளவு பணத்தோடு, சிவ யாத்திரை மேற்கொண்டு, ஊர் ஊராகச் சென்று, எல்லா கோயில்களிலும் நெய் விளக்கு ஏற்றி, இறுதியில் சிதம்பரத்தை வந்தடைந்தார்.. எம்பெருமானைக் கண்டு இன்புற்றார்.. அந்த ஊரை விட்டு செல்ல மனமில்லாமல் அந்த ஊரிலேயே தனியாக ஒரு வீடு எடுத்து வசிக்கலானார்.. தில்லையில் உள்ள சிவபெருமானுக்கு விளக்கேற்றும் பணியை மேற்கொண்ட இந்த அடியார், மீண்டும் வறுமைக்கு தள்ளப்பட்டார்.. தனது நிலையில் மேற்கொண்டு ஏதும் பொருள் இல்லையே என்ற நிலை ஏற்பட்டதும், ஊர் மக்களிடம் பிச்சை கேட்க அஞ்சி, உடல் உழைப்பினால் செல்வம் சேர்க்க் கருதினார்.. அதற்காக கணம் புல்லை அரிந்து வந்து, அதை விற்று காசாக்கி அதன்மூலம் நெய் வாங்கி கோயிலுக்கு விளக்கு ஏற்றி வந்தார்..எம்பெருமான் செய்த திருவிளையாடலால் அந்த கணம் புல்லும் விற்பனையாகவில்லை.. இதனால் அந்த புல்லையே திரித்து விளக்காக எரித்தார்..பொதுவாக ஆலயங்களில் திருவிளக்கு ஜாமம் வரை எரியும்.. ஆனால் இந்த கணம் புல் ஜாமம் வரைக்கும் எரியாமல் சீக்கிரமே அணைந்துவிட்டது..
மிகவும் வருத்தப்பட்ட இவர், தனது திருமுடியை திருவிளக்கில் வைத்து, இன்பம் பெருக நமசிவாய நாமம் என்று சொல்லி விளக்கை எரிக்க தொடங்கினார்.. இதனைக் கண்ணுற்ற பெருமான் அதற்குமேல் அவரை சோதிக்க விரும்பவில்லை.. அவருக்கு சக்தி சமேதராக ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அவருக்கு சிவலோக பதவிக்கு அளித்து அருளினார்..

இவர் பின்னர் “கணம்புல்ல நாயனார்” என்ற திருப்பெயருடன் 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்ந்தார்.. இவரது குருபூஜை கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரம்..