இந்தத் தொடரில் பரம்பொருளான பரந்தாமனின் திவ்ய நாமங்களின் பெருமைகளை பற்றி பதிவு செய்து வருகின்றேன்.. இன்றைய பதிவில் நான் பதிவு செய்ய இருப்பது பத்மநாபன் என்கின்ற திருநாமத்தின் பெருமையைப் பற்றி..
இந்து சமயத்தில் “பத்மநாபன்” என்ற பெயர் காத்தல் கடவுளான விஷ்ணுவின் பன்னிரு திரு நாமங்களில் 11வது திருநாமமாக வழங்கி வரும் ஒரு சொல்..பாரதப் போருக்குப் பின் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்து கொண்டு விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைக் பட்டியலிட்டு ஸ்தோத்தரித்த “விஷ்ணு சஹஸ்ரநாமம்” என்கின்ற ஸ்தோத்திரத்தில் 48,196 மற்றும் 346 ஆகிய மூன்று முறை இந்தச் சொல் வருகிறது..” பத்ம” என்றால் “தாமரை” என்றும் “நாபி” என்றால் “தொப்புள்” என்றும் அழைக்கப்படுகிறது..
“பத்மநாபன்” என்றால் உந்தித் தாமரையன் எனப் பொருள்.. உலகில் நாம் அறிந்த உந்தி, தாயுடன் பிணைந்து இருந்தமையை அடையாளம் காட்டும்..இதற்கு மாறாக ஓர் அற்புத உலகம் தோற்றமாக இந்து சமய புராணங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.. இறைவன் தன் உந்தியிலிருந்து தாமரையை பொறுத்தி அந்த தாமரையை தன்னிடமிருந்து ஊட்டம் பெற செய்கிறார்..உலகம் மூலப்பொருளாக இருந்த நிலையில் இயக்க மிகுதியால் நீண்ட வட்ட வடிவில் கூம்பிய தாமரை மலராக காட்சி தந்தது..உந்தியிலிருந்து கிளம்பிய கொடியில் காணும் தாமரை.. அதுவே காலச்சூழலில் விரிவடைய இருக்கும் உலகம்..

தாமரையின் நடுவில் பிரம்மாவாக வீற்றிருப்பவர் பகவத் கீதையில் “பிராம்மணம் ஈஸம் கமலாஸனஸ்தம்”என்ற தொடருக்கு, ஆதிசங்கரரும் “பூமியாகிற தாமரையின் மொட்டு போன்று உள்ள மேருவின் மேல் வீற்றிருக்கும் நான்முகனாய் இருப்பவர்” என்று உரை எழுதி இருக்கின்றார்..
பத்மம் என்றால் லட்சம் கோடி.. பிரம்மாவின் ஒரு பகல் 432 கோடி மனித ஆண்டுகள்.. ஒவ்வொரு பகலிலும் அவர் படைப்பு தொடங்கி அவருடைய இரவு நெருங்கும் போதுஎல்லா படைப்புகளும் அவரிடம் ஒடுங்குகின்றன.. ஆகவே அப்படிப்பட்ட கால தோற்றத்திற்கு பத்மநாபன் காரணமாகிறார்..
இந்த பத்மநாபன் ஆதிசேஷன் மேல் சயன திருக்கோலம் கொண்டு திருவனந்தபுரத்தில் “அனந்த பத்மநாபன்” என்ற திருப்பெயரில் காட்சி தருகிறார்