சென்ற பதிவில் வரும் பதிவுகளில் சக்தி பீடங்கள் பற்றி பதிவு செய்வதாக தெரிவித்திருந்தேன்..
சக்தி பீடங்கள் என்பவை ஆதி சக்தியின் ரூபமான சதி தேவியின் அதாவது தாட்சாயணியின் உடல் பாகங்கள் விழுந்த இடங்களில் எழுப்பப்பட்ட கோயில்கள் ஆகும்.. சக்தி பீடம் என்பதற்கு “சக்தியின் அமர்விடம்”என்று பொருளாகும்..இவற்றில் 51 சக்தி பீடங்கள், அட்சர சக்தி பீடங்கள் என்றும், 18 சக்தி பீடங்கள் மகாசக்தி பீடங்கள் என்றும்,நான்கு சக்தி பீடங்கள் ஆதி சக்தி பீடங்கள் என்றும் அறியப்படுகின்றன..சக்தி பீடங்கள் அனைத்தையும் தரிசிக்க இயலவில்லை என்றாலும் ஆதி சக்தி பீடங்கள் நான்கையாவது தரிசிக்க வேண்டும் என்பது நியதி. அந்த நான்கு ஆதி சக்தி பீடங்கள் எவை எவை என்றால்:-
அசாம் மாநிலத்தில் கவுகாத்தியில் உள்ள காமாக்யா கோவில், கல்கத்தாவின் காளிகாட் காளி கோயில், ஒரிசாவின் பெர்ஹாம்பூரில் உள்ள தாராதாரிணி சக்தி பீடக் கோவில் மற்றும் ஒரிசாவின் பூரி ஜெகநாதர் கோவில் வளாகத்தில் உள்ள விமலாதேவி சன்னதி ஆகிய நான்கு சக்தி பீடங்கள் ஆகும்..எந்த சக்தி பீடத்திற்கு சென்றாலும் அங்குள்ள பைரவரையும் வணங்க வேண்டும் என்பது ஒரு நியதியாகும்..
தேவி பாகவதத்தில், அம்பாளுக்கு 108 சக்தி பீடங்கள் உள்ளதாகவும், அதில் 64 சக்தி பீடங்களில் மிக முக்கியமானது என்றும் கூறப்பட்டுள்ளது.. ஆனால், தந்திர சூடாமணி என்ற நூலில் 51 சக்தி பீடங்கள் மட்டுமே தெளிவாக உள்ளது..அதனால் இந்த நூலைப் பின்பற்றியே பெரும்பாலான சக்தி பீடங்கள் கண்டறியப்பட்டுள்ளன..
இந்த சக்தி பீடங்கள் பற்றிய வரலாறு என்னவென்றால்
தாட்சாயணியின் தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தேவி, அந்த யாகம் அழியுமாறு சபித்துவிட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாம் என, தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள்.. சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார்.. மனைவி இறந்த வருத்தத்தில் சிவன் தன் மனைவி தாட்சாயணியின் உடலை எடுத்துக் கொண்டு ஊழித் தாண்டவம் ஆடினார்.. ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்கராயுதத்தால் தாட்சாயணி உடலை 51 துண்டுகளாக வெட்டி வீசினார்.. பிறகு சிவன் சாந்தமானார்.. தாட்சாயணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள், சக்தி பீடங்கள் ஆகின.. பிறகு, தாட்சாயணி பர்வதராஜன் மகள் பார்வதியாக பிறந்து ஈசனை மணந்தாள்..
பிரம்ம புத்திரர்கள் ஆகிய சனத்குமாரர்கள், சதச்ருங்க மலையில் சதா சிவனை நோக்கி தவம் செய்தனர்.. அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவன், ரிஷபத்தின் மேல் ஏறி தோன்றினார்.. ஆனாலும், ஆழ்ந்த தியானத்தில் இருந்த சனத்குமாரர்கள் கண்விழித்து பார்க்கவில்லை..அவர்களை எழுப்ப சிவன் தன் கையில் உள்ள உடுக்கையை வேகமாக ஆட்டினார்.. சனத்குமாரர்கள் கண்விழித்து சிவனடி பணிந்தார்கள்..இதனை சிவமகா புராணம் சொல்கிறது.. அந்த உடுக்கை இல் இருந்து “டம் டம்” என்று எழுந்த நாதமே சமஸ்கிருதத்தின் ஐம்பத்தொரு எழுத்துக்களாயின என்றும், இவை பாரத தேசத்தின் 51 இடங்களில் எரி நட்சத்திரம் போல் தெறித்து விழுந்தன என்றும், பக்தர்களால் நம்பப்படுகிறது.. அவையே ‘அ’முதல்’க்ஷ’ வரையிலான 51 எழுத்துக்கள் ஆகும்.. சமஸ்கிருதத்தின் 51 அட்சரங்கள் தோன்றிய இடங்களிலேயே பிறகு தேவியின் முக்கியமான உடல் பகுதிகள் விழுந்தன.. ஆகவே அவற்றை “51 அட்சர சக்தி பீடங்கள”என்பர்.. இந்த அட்சர சக்தி பீடங்கள் பற்றிய விரிவான தகவல்களை மேரு தந்திரம் என்னும் நூல் கூறுகிறது..
இனி ஆதி சக்தி பீடங்கள், நவ சக்தி பீடங்கள், மகாசக்தி பீடங்கள் ஆகியவற்றைப் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்..