பல வளங்கள் செறிந்த சோழவள நாட்டிலே திருத்தலையூர் என்று ஒரு ஊர் இருந்தது..அந்த ஊர் தற்போது பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. அந்த ஊரில் எந்த நேரமும் அந்தணர்களின் வேத பாராயணம் ஒலித்த வண்ணமாகவே இருக்கும்.. இவர்கள் வளர்க்கும் யாக தீயானது தவறாமல் மாதம் மும்மாரி பொழிய வழி செய்யும்.. அந்த அளவிற்கு அருள் உடைமையும் பொருளுடைமையும் நிறையப் பெற்று அன்பும் அறனும் பண்பும் குன்றாது குறையாது நிலைபெற்று விளங்கின..
இந்த ஊரில் பசுபதியார் என்னும் ஓர் அந்தணர் வாழ்ந்து வந்தார்..இவர் தனது குல வழக்கப்படி வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் சிறந்த புலமை பெற்றிருந்தார்.. அவர் ருத்ரம் என்னும் திருமந்திரத்தை இடைவிடாது பக்தியுடனும் அன்புடன் சொல்லிக்கொண்டே இருப்பார்.. “ருத்” என்றால் துன்பம் என்றும்”திரன்”என்றால் தீர்ப்பவன் என்றும் பொருள் கொள்ளப்படுவதால் எம்பெருமான் ருத்திரன் என்றும் திருநாமம் பெற்றார்.. அவருக்குரிய திருமந்திரம் தான் ருத்ரம் ஆகும்.. சிவபெருமானுக்கு ருத்ரம் கண்ணாகவும் பஞ்சாட்சரம் கண்மணியாகவும் விளங்கின.. இந்த திருமந்திரத்தினையே பசுபதியார் தமது மூச்சாகவும் பேச்சாகவும் கொண்டு வாழ்ந்து வந்தார்.. இவர் மனத்தாலும், வாக்காலும், மெய்யாலும்,சிவத்தொண்டு புரிந்து வந்தார்..
இவர் தினந்தோறும் தாமரைப் பொய்கையில் நீராடி, கழுத்தளவு நீரில் நின்று கொண்டு, தலைக்கு மேல் கை குவித்து, உருத்திர மந்திரத்தை ஓதுவார்..

இரவென்றும், பகலென்றும் பாராமல் எந்த நேரமும், ருத்திரத்தை பாராயணம் செய்வதிலேயே தம் பொழுதெல்லாம் கழித்தார்.. இதன் காரணமாக இவருக்கு “உருத்திர பசுபதியார் “என்ற பெயர் ஏற்பட்டது.. இவரது ஊர்மக்கள் இவரது பக்தியினைப் புகழ்ந்து பெருமையாக பேசிய வண்ணமாகவே இருப்பார்கள்.. இவரது பக்தியின் பெருமை, சிவபெருமானின் உள்ளத்திற்கு மகிழ்ச்சியை உண்டாக்கியது.. அதன் காரணமாக இவர் “ருத்ர பசுபதி நாயனார்” என்ற திருநாமம் பெற்று இறைவனின் திருவடி அருகில் திருவடி அருகில் வாழும் பேற்றைப் பெற்றார்..
இவரது குருபூஜை புரட்டாசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது..
இவர் அவதரித்த திருத்தலம் “திருத்தலையூர்” என்ற ஊராகும்.. இங்கு கோவில் கொண்டுள்ள இறைவனின் பெயர் “சப்தரிஷீஸ்வரர்”. இறைவியின் பெயர் “குங்குமவல்லி..” இந்த கோயிலை வழிபட்டோர்” புரூரவ சக்கரவர்த்தி” என்று கூறப்படுகிறது..
இந்த தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும்.. நாகப்பட்டினம் மாவட்டத்தில் காரைக்கால் செல்லும் வழியிலும் திருத்தலையூர் என்ற ஒரு ஊரும் உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆயினும் இங்கே குறிப்பிடுவது பெரம்பலூர் அருகே உள்ள திருத்தலையூர் ஆகும்..