இந்த தொடரில் ப்ரக்ருதி தேவியின் அம்சங்களைப் பற்றியும் அது தவிர அவருடைய அம்சங்களான மற்றவர்களைப் பற்றியும் அவர்கள் யாருக்கு மனைவிகள் என்பதைப் பற்றியும் பார்த்து வருகிறோம்.. அந்த வகையில் மற்ற பத்தினிகளைப் பற்றி இங்கு பதிவு செய்கிறேன்..
பசியும் தாகமும் லோப பத்தினிகளாக இருந்து அனைவரிடத்திலும் வியாபித்து கவலைப்படச் செய்து கௌரவித்து போற்றப்படுவார்கள்.. பிரபையும்(வெளிச்சம்) தாஹிகையும்(தகிப்பு) தேஜஸின் பத்தினிகள்.. இவர்கள் இல்லையென்றால் பிரம்மாவும் கூட சிருஷ்டிக்கும் திறமையற்று விடுவார்.. கால கன்னி என்ற ம்ருத்தி தேவியும் ஜரையும் ஜுரத்திற்கு பத்தினிகளாக இருக்கிறார்கள்..இவர்கள் இல்லை என்றால் பிரம்ம தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட உலகங்கள் யாவும் நெருக்கடியில் சிக்கி அழிந்து விடும்.. நித்திரா புத்திரிகளான தந்த்ரையும் (சோம்பல்) ப்ரீத்தியும் சுகத்தின் பத்தினிகளாக உலகம் முழுதும் வியாபித்து இருக்கிறார்கள்.. சிரத்தையும் பக்தியும் வைராக்கிய த்திற்கு பத்தினிகளாக இருந்து ஜீவன்முக்தரிடம் நிறைந்து இருப்பார்கள்..

தேவ மாதாவான அதிதி, பசுக்களுக்கு எல்லாம் தாயான காமதேனு, அசுர மாதாவான திதி, கர்த்துரு, வினதை, தநு என்பவர்களும் சந்திரனின் பத்தினியான ரோகிணி, சூரியனின் பத்தினியான ஸம்க்ஞா, மநுவின் பத்தினியான சதரூபை, இந்திரனின் பத்தினியாக சசி, குரு பிரகஸ்பதியின் பத்தினியான தாரை, வசிஷ்டரின் பத்தினியான அருந்ததி, கௌதமரின் பத்தினியான அகலிகை, அத்திரி முனிவரின் பத்தினியான அனுசூயை, கர்தம பிரஜாபதியின் பத்தினியான தேவஹுதி,தக்ஷனின் பத்தினியான பிரசூதி,பித்ருக்களின் மானசீக புத்திரியான மேனகை அகஸ்தியரின் பத்தினியான லோபமுத்திரை குபேரனின் பத்தினியான குந்தி,வருணனின் பத்தினியான பிரசித்தி வாயுவின் பத்தினியான விந்தியா தேவி மற்றும் தமயந்தி, யசோதை, தேவகி, காந்தாரி, திரௌபதி, ஸௌப்பியா, சத்யவதி வ்ருஷபனுக்கு புதல்வி யாகவும் ராதைக்கு தாயாகவும் விளங்கும் குலோத்வஹா, மண்டோதரி, கௌசல்யா, சுபத்திரை, கௌரவி, ரேவதி சத்யபாமா காளிந்தி லக்ஷமணை ஜாம்பவதி அக்னிஜிதி மித்திரவிந்தை ருக்மணி சீதை காளி பரிமளகந்திரோகினி கிருஷ்ணருக்கு சகோதரியான ஏகதந்தை மற்றும் துர்க்கை முதலான தேவிகளும் ப்ரக்ருதிதேவியின் கலையாக இருக்கிறார்கள்..
மேலும் கிராம தேவதைகள் அனைவருமே இந்த தேவியின் அம்சங்களாகும்.. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பெண்களும் தேவியின் அம்சங்களாகும்.. எனவே பெண்களை அவமானம் செய்தால் அது தேவிக்கு செய்த அவமானத்திற்கு ஒப்பாகும்.. நல்ல குணமும் நடத்தையும் உள்ள கற்புக்கரசிகள் உத்தம ஸ்திரீகளாவர்.. இவர்கள் பிரக்ருதி தேவியின் சத்வாம்சம் உள்ளவர்கள்..
மத்திம ஸ்திரீகள் என்பவர்களோ ரஜோ குணம் படைத்தவர்கள்..இவர்கள் பயங்கரமான முகமும் குலத்தை நாசம் செய்யும் துர்க்குணம் யாருக்கும் அடங்காமல் வம்பு கலகங்களிலும் ஆவலுடன் இருப்பார்கள்.. இவர்கள் தாமஸ குணத்தில் பிறந்தவர்கள்.. ப்ரக்ருதிதேவியின் அம்சங்கள் யாவும் பரத கண்டத்தில் பூஜிக்கப்படுகிறார்கள்..
இனி அடுத்து வரும் பதிவுகளில் சக்திபீடங்கள் பற்றி பதிவு செய்கிறேன்..
மீண்டும் சந்திப்போம்…