இந்த கலியுகத்தில் இறைவனை அடைய சிறந்த வழி நாம சங்கீர்த்தனம் என்று ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.. அந்த நாமசங்கீர்த்தனத்தையும் உபன்யாசம் செய்து பலரை நல்வழிப்படுத்த முயற்சி மேற்கொண்டு இருக்கும் ஒரு ஆன்றோரைப் பற்றி இந்த பதிவில் தெரிவிக்க விரும்புகிறேன்..
காவிரிக்கரையின் ஓரத்தில் அமைதியான சூழ்நிலையில் உள்ள ஒரு கிராமம் செங்கனூர்..அந்த கிராமத்தில் ஸ்ரீ வெங்கடராம சாஸ்திரிகள் மற்றும் பார்வதி அம்மாள் ஆகியோருக்கு 1934 இல் மகனாக பிறந்தார் ராமகிருஷ்ணன்.. இவரது வம்சாவழி வைணவ ஆச்சாரியரான பெரியவாச்சான் பிள்ளை வழியாகும்.. சிறுவயதில் பல விளையாட்டுகளில் ஈடுபட்டு எல்லோராலும் அம்பி என்று அழைக்கப்பட்டு வந்தார்.. தனது எட்டாவது வயதில் ஸ்ரீ கிருஷ்ணர் மீது தானாகவே பஜனைகளையும் செய்யுள்களையும் இயற்றி பாடி வந்தார்.. அதன் பின்னர் தியானத்திலும் யோக முறைகளையும் தீவிர கவனம் செலுத்தி வந்தார்.. தனது பன்னிரெண்டாவது வயதில் ஒரு சிறந்த யோகியானார்.. ஆன்மீக வழியில் வழி நடத்திச் சென்றார்கள்..
இவர் ஸ்ரீமத் பாகவதத்தை தனது முக்கிய நூலாக கொண்டு அதன் வழியில் தன் வாழ்க்கையை நடத்தினார்.. பரனூர் கிராமத்தில் ஸ்ரீ பக்த கோலாகலன் என்ற உபாசனை மூர்த்தியை தனது தெய்வமாகக் கொண்டார்.. அதன்பிறகு அவரது பெயர் கிருஷ்ண பிரேமி என்று மாறியது.. எல்லோரும் அவரை மரியாதையுடனும் அன்பினாலும் ஸ்ரீ அண்ணா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.. “பிரேமிக சம்பிரதாயா”என்கிற சம்பிரதாயத்தினை தோற்றுவித்தார்..

ஸ்ரீ அண்ணா அவர்களே தனது பிரியத்திற்கு உகந்த உபாசன மூர்த்தியான ஸ்ரீ கோலாகலனுக்குசுப்ரபாத சேவையில் இருந்து அர்த்த ஜாம பூஜை வரை எல்லாவற்றையும் அவரே செய்து வந்தார்..மாலை வேளைகளில் டோலோத்சவம் என்று அழைக்கப்படும் ஊஞ்சல் சேவையும் அவர் நடத்தி வந்தார்..இவர் தனது பஜனைகளில் ஸ்ரீ தியாகராஜரின் ராமர் மீது பாடப்பட்ட உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகளை உபயோகப்படுத்திக் கொண்டார்.. இவர் தானாகவே கோலாஹலன் சேவைக்கு கீர்த்தனைகள் இயற்றினார்..
இவர் பக்தி மார்க்கத்தின் வழியே சென்றாலும் ஸ்ரீ வாஸுதேவ பிரம்மம் அறிவுரையின் படி திருமதி மதுராம்பாள் என்கின்ற பெண்ணின் கரம் பிடித்தார்.. இருவருமாகச் சேர்ந்து கோலாஹலனின் கைங்கரிய சேவைகளில் ஈடுபட்டனர்..இவர் ஹரி நாமத்தை இமயம் முதல் குமரி வரை தனது நாம சங்கீர்த்தனங்களின் மூலமாகவும் உபன்யாசங்களின் மூலமாகவும் பரப்பி வந்தார்.. இவர் தனது சொற்பொழிவுகளை பாகவதம், பகவத் கீதை, ராமாயணம் மகாபாரதம் ஆகியவை குறித்து நிகழ்த்தி வந்தார்.. இவர் கையாளாத தலைப்புகளே ஏதும் இல்லை என்று சொல்லலாம்..
இவர்” அகில பாரத சாது சங்கம்” என்ற ஒரு சத்சங்கத்தை நிறுவி அதன் மூலம் நாம பிரச்சாரம்,உபன்யாசம், பஜனைகள், அகண்ட நாமம், ராதா/சீதா கல்யாணம் ஆகியவற்றை செய்து கொண்டு, மேலும் திவ்ய தேசங்களில் உள்ள கோயில்களில்புனரமைப்பும் செய்துவருகிறார்.. இவரது முக்கிய நிகழ்வு “நாம சங்கீர்த்தனம் “ஆகும்.. இவரது ஆன்மீக சேவை இன்றளவிலும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..