இந்த தொடரில் நாம் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வந்த குறிப்புகளை நான் தங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.. இவற்றில் நான் புலவர் கீரன் பற்றி பகிர்ந்து கொண்ட பதிவு சுமார் 20,000 அன்பர்களைத் தாண்டி சென்றிருக்கிறது..இது எனக்கு மிகவும் பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்தது.. இந்த தொடரில் இன்று நாம் தெரிந்து கொள்ள இருப்பது இந்த ஆண்டு 2-2- 2020ல்இறைவனடி சேர்ந்த சேலம் செல்வி. இரா. ருக்மணி அம்மாள் அவர்களைப் பற்றி..

சேலம் செல்வி.இரா. ருக்மணி அம்மாள் படித்துள்ள படிப்பு M.A.,M.A.,M.A.,B.Ed.. அவர் தமிழ் மொழியின் மீதான காதலால் வேறு எவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் கன்னியாகவே தமிழ் தொண்டு செய்து வந்தார்.. ஆசிரியப்பணியே அறப்பணியாக தன் வாழ்வில் ஓராசிரியர் பள்ளியில் தொடங்கினார்..
படிப்படியாக உயர்ந்து உதவித் தலைமை ஆசிரியராய் நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்றார்.. தனது 22வது வயதில் சமய பேச்சாளராக அறிமுகம் ஆகி தன் பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தார்.. கம்ப ராமாயணம் மற்றும் மகாபாரதம் இவை இரண்டிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்..
குறிப்பு எதுவும் இன்றி காப்பிய பாடல்களை மழை பொழிபவள் என்று தமிழ் இலக்கிய ஜாம்பவான்களான கி.வா.ஜ., சா.கணேசன், திருமுருக கிருபானந்த வாரியார் மற்றும் பல தலைசிறந்த பேச்சாளர்களால் பாராட்டப் பெற்றவர்..உயர்ந்த கல்வியாளர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரையும் தன் கம்பீர தமிழால் கட்டிப்போட்டவர்..
செஞ்சொற் கொண்டல், பாரத மணி, சொல்லின் செல்வி போன்ற பட்டங்களும் பொற்றாமரை,மெகா மகளிர் போன்ற விருதுகளையும் தாய்தமிழ் தொண்டின் பயனாக அடைந்து பெருமை பெற்றவர்..
நாடுகளிலும் சமயம் மற்றும் இலக்கியத் தொண்டு ஆற்றிய தமிழ் கடல்..இவரது பூதவுடல் மறைந்தாலும் இவரது புகழ் உடலோடு தமிழ் கூறும் நல்லுலகில் நிலைத்து இருப்பார்..