ஹரி என்ற திருநாமத்திற்கு உண்டான பல பெயர்களின் சிறப்புகளையும் பெருமைகளையும் நாம் பார்த்து வருகிறோம்.. இதுவரை மேற்கொண்ட பதிவுகளில் ஹரியின் திருநாமங்களான கோவிந்தன், கேசவன், வாசுதேவன், தாமோதரன், மதுசூதனன், அச்சுதன், மாதவன் ஆகிய திருநாமங்களைப் பற்றிப் பார்த்தோம்.. இன்றைய பதிவில் நான் ருஷீகேசன் என்ற திருநாமத்தின் மேன்மைகளைப் பற்றி பதிய விரும்புகிறேன்..
இந்து சமயத்தில் ருஷீகேசன் என்ற பெயர் ஸ்ரீ மஹா விஷ்ணுவின் 12 திருநாமங்களில் பத்தாவது திருநாமம் ஆக வழங்கி வருகிறது..பாரதப் போருக்குப் பின் பீஷ்மர் அம்பு படுக்கையில் இருந்து கொண்டு அரசன் யுதிஷ்டிரனுக்காக பற்பல நீதிகளையும், சாஸ்திரங்களையும் சொல்லி முடித்து இறுதியாக இறைவனின் ஆயிரம் பெயர்களை பட்டியலிடும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற ஸ்தோத்திரத்தினை உபதேசம் செய்தார்.. அந்த விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ருஷீகேசன் என்கிற திருநாமமும் 47வது பெயராக வரும் சொல்லாக அமைந்துள்ளது.. இந்தப் பெயர் வடமொழியில் “ஹ்ருஷீகேசன்” என்று சொல்லப்படும்..
ஹ்ருஷீகா என்ற வடமொழிச் சொல் மகிழ்வூட்டும் எதையும் குறிக்கும்.. மகிழ்ச்சி என்ற பொருள் தரும் ஹர்ஷ என்ற சொல்லில் இருந்து வந்தது.. குறிப்பாக இங்கு அச்சொல் மகிழ்வூட்டும் செவி, வாய், கண், காது முதலிய ஐம்பொறிகளையும் குறிக்கிறது.. அவற்றின் உரிமையாளரும் அவற்றை ஆட்டுவிப்பவரும் ஜீவ வடிவில் உள்ள ஆண்டவனே.. அவரது வசத்தில் பொறிகள் அனைத்தும் இயங்குகின்றன.. பண்களில் சூரியனாக, மனதில் சந்திரனாக,இப்படி பலப்பல தேவதைகளாக இருந்து இயக்குபவர் ஆண்டவனே என்று மகாபாரதத்தில் வரும் மோட்ச தருமத்தில் அதில் சொல்லப்பட்டிருக்கிறது..
சூரியன், சந்திரன் முதலிய வழி மண்டலங்களில் இருந்து வரும் ஒளிக்கதிர்கள் அவரது விளக்கங்களே.. இவைகளே உலகத்திற்கு ஒளி அளிக்கின்றன.. இவைகளால் மகிழும் உலகு தன்னை மறந்து தூக்கத்தில் ஆழ்ந்து போவதும் இவைகளால் தான்.. இப்படி மகிழ்விக்கும் (ஹ்ருஷீ) ஒளிக் கதிர்களை (கேச) தன்னுரிமை பொருளாக கொண்டவர் ஆண்டவர்.. இந்த பொருள் வேதத்தில் இருந்தே கிடைக்கிறது.. இந்த பொருள் கேசவன் என்ற சொல்லுக்கும் பொருந்தும்..
பகவத் கீதையில் இந்தச் சொல் ஆறு முறை பகவான் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது..
ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 47வது சொல்லாக வரும்” ஹ்ருஷீகேச:” என்ற சொல்லுக்கு பகவத் குண தர்ப்பணத்தில் பராசரபட்டர் கூறும் முறை கூறும் உரையில்:
இந்திரியங்களை நியமிப்பவன்.. இவன் தேவர்களின் புலன்களையும் நியமிப்பதால் ஹ்ருஷிகேசன் எனப்படுகிறான்..
1) ஹரிவம்சம்:- ஹ்ருஷீகாணி இந்த்ரியாண்யாஹு: தேடலாம் ஈசோ யதோ பவாநஹ்ருஷீகேச: ததோ விஷ்ணு: க்யாதோ தேவேஷு கேசவ: – ஹ்ருஷிகா என்றால் புலன்கள் என்று கூறுகின்றனர்.. அவற்றை நீ நியமிப்பதால் ஹ்ருஷீகேசன் எனப்படுகிறாய்.. தெய்வங்களில் விஷ்ணுவே கேசவன் என்று அழைக்கப்படுகிறார்..
2) ஹர்ஷாத் ஸௌக்யாத் ஸுக ஐச்வர்யாத்ஹ்ருஷீகேசத்வம் அச்நுதே—மகிழ்வும், நிறைவும், சுகமும், ஐஸ்வர்யமும், உள்ளதால் ஹ்ருஷிகேசன் என்ற திருநாமம் கொண்டான்..
இந்த விதமாக ரிஷிகேசன் என்ற திருநாமத்திற்கு மேன்மையை ஹரிவம்சத்திலும், விஷ்ணு சகஸ்ரநாமத்தில் சொல்லப்பட்டுள்ளது.. ஜீவாத்மாவிற்கு முக்கியமானவை அதன் இந்திரியங்கள்.. அதன் மூலமாகத்தான் அதன் செயல்பாடுகள் யாவும் நிறைவேறுகின்றது..அப்படிப்பட்ட இந்திரியங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் ரிஷிகேசன் என்று சொல்லப்படுகின்ற திருமால் ஆவார்.. அவனது திருநாமங் களுக்கு உள்ள மேன்மையை எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டே போகலாம்..
அடுத்த பதிவில் ஹரி என்னும் திருநாமத்திற்கு அடுத்துவரும் பெயராக ஜனார்த்தனன் என்ற திருநாமத்தின் மகிமையை பற்றி பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்…