கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி அன்று மகாராஷ்டிரத்தில் உள்ள எட்டு விநாயகர் கோயில்கள் பற்றி ஒவ்வொரு சதுர்த்தி அன்றும் வாசகர்களுக்கு விவரங்கள் பதிவு விடுவதாக சொல்லி இருந்தேன்..

அந்த வகையில் இதுவரை மகாராஷ்டிராவில் மோர்கோன் என்ற இடத்தில் உள்ள மோரேஷ்வரர் என்ற கணபதி கோயில் பற்றி சொல்லியிருந்தேன்.. அதற்கு அடுத்த பதிவில் மகராஷ்டிராவில் உள்ள அகமது நகர் மாவட்டம் சித்தேடெக் எனும இடத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில் பற்றி சொல்லியிருந்தேன்.. அதற்கு அடுத்த பதிவில் மகாராஷ்டிராவில் ராய்கெட் மாவட்டத்தைச் சேர்ந்த பாலி நகரத்தில் உள்ள ஸ்ரீ பல்லாலேஷ்வர் திருக்கோயில் பற்றி பதிவு செய்திருந்தேன்.. அந்த வரிசையில் தற்போது நாம் காணவிருப்பது அஷ்ட விநாயகர்களில் ஒருவரான வரத விநாயகர் திருக்கோயில் ஆகும்..இக்கோயிலை 1725 ஆம் ஆண்டில் மராட்டிய பேஷ்வா படைத்தலைவர் சுபேதார் ராம்ஜி மகாதேவ பிவால்கர் என்பவரால் சீரமைக்கப்பட்டது.. பூனாவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் ராய்கட் மாவட்டத்தில் மஹத் கிராமத்தில் இந்த திருக்கோவில் அமைந்துள்ளது..

இந்த ஆலயத்தில் 1892 முதல் நந்தா தீபம் அகண்டமாக ஒளிவிட்டு பிரகாசித்து வருகிறது.. இங்கு இடம்சுழி விநாயகரான சுவாமியை பக்தர்கள் தொட்டு வழிபட முடியும்.. சன்னதி கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது..
ஆலயத்தின் நான்கு புறங்களிலும் 4 யானைச் சிலைகள் உள்ளன.. முகமண்டபம் 8 அடிக்கு 8 அடி கொண்டது.. விமானம் நாகத்தின் வடிவில் 25 அடி உயரத்தில் தங்க கலசத்தோடு ஒளிர்கிறது.. “க்ருத் சமதன்” என்ற பக்தனின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் இந்த பூங்கா வனத்தில் கோயில் கொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து அருள் பாலிக்கிறார்..இங்கு நீராடி தான தர்மம் செய்பவரின் கோரிக்கைகள் நிறைவேறுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.. ஆலயம் வெளியே இருந்து பார்த்தால் ஒரு வீடு போல் தான் காணப்படுகிறது.. ஆனால் உள்ளே கலைக்கோயில் ஆக விரிகிறது.. இங்கு இரண்டு விநாயக மூர்த்திகள் உள்ளனர்.. ஒன்று சலவைக் கல்லால் ஆனது.. மற்றொன்று சிம்மாசனத்தில் அமர்ந்து செந்தூரம் பூசிய ஸ்ரீவரத விநாயகர்.. சங்கடஹர சதுர்த்தியின் போது விசேஷ அலங்காரங்களோடு உற்சவம் நிகழ்கிறது..

ஸ்ரீ வரத விநாயகர் 1690 இல் கோயிலை ஒட்டி பின்புறம் உள்ள ஏரியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.. 1725 இல் ராம்ஜி மகாதேவ் பிவால்கர் என்ற கல்யாண் மாவட்ட சுபேதார் தற்போதைய விநாயகர் ஆலயத்தை “மஹத்” கிராமத்தில் நிர்மாணித்தார்..
பக்தர்கள் புத்திர பாக்கியம் கிடைக்க இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர்.. விநாயகருக்கு அருகம்புல் தேங்காய் மாலை சாற்றி அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
புராண காலத்தில் கவுண்டின்யபுரம் என்ற நகரை தலைநகராகக் கொண்டு பீமா என்ற அரசன் ஆண்டு வந்தான்.. புத்திர பாக்கியம் இல்லாததால் ராஜகுருவின் ஆலோசனைப்படி அரசியுடன் வனம் சென்று தவம் செய்யத் தொடங்கினான்.. வனத்தில் அவர் மகரிஷி விஸ்வாமித்திரரை சந்திக்க நேர்ந்தது..அவர் அரசனுக்கு ஏகாட்சர கணபதி மந்திரத்தை உபதேசித்து அருகிலிருந்த ஆலயத்தில் தங்கி தவம் இருக்கச் சொன்னார்.. இறையருளால் அவர்களுக்கு அழகிய ஆண் மகவு பிறந்தது..அந்த குழந்தைக்கு ருக்மாங்கதன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.. ருக்மாங்கதன் இருக்கு விநாயகரின் அருளும் கூடியிருந்தது..ஒருநாள் ருக்மாங்கதன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றபோது பசியும் தாகமும் காக்க அருகிலிருந்த வாசக்னவீ என்ற மகரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றான்.. அவனை வரவேற்ற முனிவர் அவனை ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறும் படி சொல்லிவிட்டு நீராடச் சென்றார்..ஆசிரமத்தில் நிறைந்த இளவரசனின் தோற்றமும் இளமையும் கம்பீரமும் ரிஷி பத்தினி முகுந்தாவை நிலை மறக்கச் செய்தது.. அவள் அவனிடன் ஆசை கொண்டாள்.. இயல்பிலேயே நற்குணங்கள் நிறைந்த ருக்மாங்கதன் அவளது ஆசையை ஏற்க மறுத்தான்.. அதனால் கோபம் கொண்ட முகுந்தா அவனை பெருநோய் பீடிக்குமாறு சபித்தாள்.. உருமாறிகுரூபியான ருக்மாங்கதன் அப்போதும் கலங்காமல் விநாயகரை வேண்டி தவமிருந்தான்..
அது சமயம் நாரதர் ருக்மாங்கதனை சந்தித்து சிந்தாமணி என்னும் ஏரியில் நீராடி தவத்தை மேலும் தொடர பணித்தார்.. அவனும் அவ்வாறே செய்ய அவரது பழைய உருவம் திரும்பியது.. ரிஷி பத்தினி முகுந்தாவால் ருக்மாங்கதனை மறக்க இயலவில்லை.. அவனது மனநிலையை அறிந்த இந்திரன் ருக்மாங்கதன் இன் உருவம் கொண்டு அவளது ஆசையைத் தணித்தான்.. அதன் பலனாக அவள் ஒரு ஆண் மகவைப் பெற்றெடுத்தாள்.. அந்த குழந்தைக்கு வாசக்னவீ முனிவர் ”க்ரித் சமதா” என்று பெயரிட்டு அதற்கு வேத மந்திரங்களை முறைப்படி உபதேசித்தார்.. பல முனிவர்களின் ஆசியும் சேர்ந்து கிரித் சமதாவின் வேத அஅறிவும் வாக்குத்திறமையும் பெருகிக்கொண்டே போனது..
ஒரு சமயம் மகத நாட்டில் ரிஷிகள் அத்திரியும் விசுவாமித்திரரும் பங்கேற்ற வாதப் பிரதி வாதத்தில் கிரித் சமதாவும் பங்கேற்க நேரிட்டது.. அவன் தனது வாதத்தை முழுவீச்சில் எடுத்த வைத்த சமயத்தில் ரிஷி அத்திரிக்கு கோபம் ஏற்பட்டது.. அவர்” நீ வாசக்னவியின் புதல்வன் அல்ல!எனவே இந்த போட்டியில் பங்கேற்ற உனக்கு தகுதி இல்லை” என்று ஏளனம் செய்தார்.. அவமானத்தை தாங்க இயலாமல் தன் தாயிடம் சென்று முறையிட அவர் உண்மையை சொன்னாள்..அவன் தன் தாயிடம் சினம் கொண்டு “அடக்க இயலாமல் நீங்கள் எவருமே தீண்ட முடியாத ஒரு முள் மரமாக மாறக்கடவீர்களாக” என்று சாபமிடவும், முகுந்தாவும் பதிலுக்கு” நான் உன் தாய் என்பதையும் மறந்தாய்! என் சாபத்தை நீ பெற்றுக் கொள்! இரக்கமில்லாத ஒரு அரக்கனை நீ மகனாக பெறுவாய்!” என்று சபித்துவிட்டு முள் மரமாக மாறினாள்…அப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி ஒலித்தது..
“கிரித் சமதா! இந்திரனின் மகன் என்ற உண்மையை அது வெளிப்படுத்த, வெட்கம் மேலிட, புஷ்பக் என்ற வனத்திற்குச் சென்று தனிமையில் கடுந்தவம் புரியத் தொடங்கினான்.. இலைகளின் தழைகளை மட்டுமே உண்டு பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருந்தான்.. இறுதியில் விநாயகர் அவனுக்கு காட்சி தந்து அவள் வேண்டிய வரத் தை அளித்தார்..” க்ரித் சமதா! வேதம் உணர்ந்து மேன்மையைக் அடைந்த ரிஷி முனிவர்களும் நீயும் ஒருவனாக கருதப்படுவாய்.. காணாபத்ய சம்பிரதாயத்தை தோற்றுவித்தவனாகவும் நீயே புகழ் அடைவாய்! கலியுகத்தில் இந்த புஷ்பக் வனம் பத்ரக் என்ற நாமத்தை அடையும்.. இங்க வந்து நீராடி அம்மனை தரிசித்து தான தருமங்கள் செய்பவர்களுக்கு வேண்டிய யாவும் கிட்டும்!” என்று சொல்லி மறைந்தார்..
க்ருத் சமதாதான் தவம் செய்த இடத்திலேயே ஒரு ஆலயத்தை நிறுவி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தான் என்று கூறுகிறது இந்த திருக்கோயில் தல வரலாறு..
வாசகர்கள் வாய்ப்பு கிடைக்கும்போது சென்று தரிசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..