தூய தமிழ் வளர்ச்சிக்கும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒருவர் பாடுபட்டார்.. அவர்தான் புலவர் கீரன் அவர்கள்..1935 ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாயவரம் என்கின்ற மயிலாடுதுறையில் இவர் பிறந்தார்..
புலவர் கீரன் சொற்பொழிவுகள் நடத்தி வந்தார். இந்த வகை சொற்பொழிவுகளில் திருமுருக கிருபானந்த வாரியார் போலவே அவரது புகழ் பெற்று விளங்கினார்.. இசைச் சொற்பொழிவு என்பது இசையும் கலந்து வழங்கப்படுவது.. ஆரம்ப காலத்தில் ஹரிகதை எனவும் பின்னர் கதாகாலட்சேபம் எனவும் அழைக்கப்பட்டு வந்தது.. இதிலே ராமாயணம் மகாபாரதம் மற்றும் இவை போன்ற இதிகாசங்களை கதைகளாக கூறுவார்கள்.. பொருத்தமான இடங்களில் பாடல்களும் பாடுவார்கள்…கதை நிகழ்த்துபவருக்கு உதவியாக சங்கீதம் நன்றாக தெரிந்த ஒருவரும் இசைக்கருவிகளை மீட்டுவோரும் சேர்ந்த நிகழ்ச்சியைக் அளிப்பார்கள்.. தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சிகள் 5, 6 மணி நேரம் வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது..கதை சொல்பவர் அந்த சமயங்களில் அவ்வளவு நேரமும் நின்றுகொண்டே கதை சொல்லுவார்..சில சமயங்களில் கால்களில் சலங்கை கட்டிக்கொண்டு நடனமாடும் செய்வார்.. கதை சொல்லும்போது நாடக பாணியில் ஆவின் ஐயங்களும் காட்டுவார்..தஞ்சாவூர் கிருஷ்ண பாகவதர் என்பவரே இந்த வகையான நிகழ்ச்சியின் முன்னோடியாக கருதப்படுகிறது.. பின்னர் சூலமங்கலம் சௌந்தரராஜ பாகவதர், எம்பார் விஜயராகவாச்சாரியார், எம்பார் ஸ்ரீரங்கச்சாரியார் பாண்டவர்கள் அதை நடத்தி வந்தார்கள்.. இந்த நிகழ்ச்சியை கால அளவு பின்னர் குறைக்கப்பட்டு சங்கீத உபன்யாசம் என்று சொல்லப்பட்டது.. தமிழில் இசைச் சொற்பொழிவு என கூறப்பட்டது..
புலவர் கீரன் இந்த நடைமுறையைத் தான் கையாண்டார்..

இவரது குரல் எவரையும் கட்டிப்போடும் கணீரென்ற குரல்.. ஒரு கண்டிப்பான பள்ளி ஆசிரியர் தன் மாணாக்கர்களை அதட்டி பாடம் நடத்துவது போன்ற ஒரு தொனியாகும் இவருக்கு.. இவரது சொற்பொழிவின் போது “இன்டராக்சன் “என்று சொல்லப்படுகின்ற “இடை கேள்விகள் “என்ற வாய்ப்பே இருக்காது.. ஏனெனில் அவரது பேச்சு பாணியின் பலம் நான் குறிப்பிட்டு கேள்வியை கேட்க வேண்டிய அவசியமே எழாது.. ஒவ்வொரு விஷயத்தையும் அத்தனை தெளிவாக உதாரணங்களுடன் புட்டு புட்டு வைத்து விடுகிறார்..
இவர் கம்பராமாயணத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பாடலையும் அழகாக பிரித்து சொல்கின்றபோது அது கம்பராமாயணமா அல்லது கண்ணதாசன் எழுதிய சினிமா பாட்டா என்ற ஆச்சரியம் நமக்கு வரும்.. அத்தனை அக்கறையுடன் பாடல்களை பதம் பிரித்து கடின சொற்களுக்கு எவரும் புரியும்படியாக எளிமையான விளக்கங்களைச் சொல்லி அதற்கு இணையான பாடல்களை எங்கிருந்து எடுத்து வந்து உதாரணங்களைக் காட்டி சொல்வார்..
அவரது சொற்பொழிவின் நயத்திற்கு கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியை அவர் சொன்னது..
ராமாயணத்தில் வருகின்ற வாலியை மூன்றாக பிரிக்கிறார் கீரன்..
அதாவது 1) குரங்கு வாலி 2) மனித வாலி 3) தெய்வ வாலி.. வாலியின் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.. தம்பியான சுக்ரீவனை தவறாக நினைத்து அவனை உலகம் முழுக்க துரத்தி கொல்லப் பார்த்தவன்.. சுக்ரீவனுக்கு ராமனுடைய நட்பு கிடைக்கிறது..அந்த நட்பு கிடைத்த உடன் சுக்ரீவன் வாலியை போருக்கு அழைக்கிறான்..
உடனே வாலி ஆவேசமாக எழுகிறான்.. தம்பியை கொல்ல ஓடுகிறான்.. வழியில் வாலியின் மனைவி தாரை அவனை தடுத்து போகவேண்டாம் என்று சொல்கிறாள்.. அது முடியாது அவரை நான் கொன்று விட்டுதான் வருவேன் என்று சொல்கிறான் வாலி.. இவனைத் தான் குரங்கு வாலி என்று கீரன் சொல்கிறார்.. அதாவது சொந்தத் தம்பியை ஆனாலும் அவனையும் கொல்ல துடிக்கும் மிருக குணம்..
அவனது மனைவி தாரை அவருக்கு புத்தி சொல்லும் போது “நேற்றுவரை உனக்கு பயந்து ஒளிந்து இருந்தவன் என்று தைரியமாக உன்னோடு மோத வருகிறான் என்றால் ஏதோ காரணம் இருக்கும் அல்லவா?” என்று சொல்கிறாள்..
“என்ன பெரிய காரணம்?அவனுக்கு துணையாக ராமன் இருக்கிறான் என்று நீ சொல்ல வருகிறாய் இல்லையா? பைத்தியக்காரி! ராமன் எப்பேர்பட்டவன் தெரியுமா?அவன் எங்களுடைய சண்டைக்கு நடுவே வருவான் என்று நினைக்கின்றாயே உனக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது”என்கிறான் வாலி.. இந்த கணத்தில் அவன் “மனித வாலி” ஆகிவிடுகிறான்” என்கிறார் கீரன்.. ராமன் மீது அவனுக்கு அத்தனை நம்பிக்கை..
பின்னர் அதே இராமன் வாலியை மறைந்திருந்து கொல்கிறான்.. தான் மறைந்திருந்து கொன்றதற்கு பல்வேறு நியாயங்களை தோழியிடம் பேசுகிறான்.. வாலி வாதாடுகிறான்.. இவையெல்லாம் மனித குணங்கள்.. கடைசியாக, ராமனிடம் வாலி ஒரு வரம் கேட்கிறான்” என் தம்பி சுக்ரீவன் ரொம்ப நல்லவன்..!அவ்வப்போது மது உண்டு விட்டு புத்தி மாறி விடுவான்..அப்போது அவன் தன்னையும் அறியாமல் ஏதாவது பிழை செய்து விடுவான்.. அந்த நேரத்தில் நீ அவன் மேலே கோபப்படாதே! என்னை கொன்ற அம்பால் நீ அவனைக் கொன்று விடாதே!” என்று கேட்கிறான்..
ஆக, சற்றுமுன் தம்பியை கொல்லத் துடித்த வாலி, போது அவன் உயிரைக் காப்பாற்றுவதற்காக ராமரிடம் மன்றாடுகிறான்.. வரமும் கேட்கிறான்.. இதைத்தான் “தெய்வ வாலி” என்று குறிப்பிடுகிறார் கீரன்..
பொதுவாக அவரது சொற்பொழிவுகள் முற்றிலும் இலக்கியமாக இல்லாமல் வழக்கு மொழியிலும் இருக்கும்.. அதை விளக்க ஒரு சிறு உதாரணம்.. தற்போது சொல்லிக்கொண்டிருந்த வாலியின் கதையில், சுக்ரீவனுடன் சண்டையிட தயாராக இருந்த வாலியிடம் அவரது மனைவி தாரை அடுத்து தான் ஒரு சொப்பனம் கண்டதாகவும் அதனால் வாலிக்கு ஏதும் தீங்கு ஏற்படும் என்றும் பயந்து சொன்னாள்.. இது இலக்கிய நடை.. இதையே கீரன் தன் பாணியில், வாலியிடம் தாரை சொன்னாள்”போகாதே போகாதே என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்.. சுக்ரீவனுடன் ராமனும் வந்திருக்கிறார்.. அதனால் தீங்கு ஏற்படும்..” என்று சொன்னாள்.. அதற்கு வாலி..”அதனால் என்ன? ராமன் அப்படிப்பட்டவன் அல்ல.. அவன் நேர்மைக்கு துணை நிற்பவன்” இது இலக்கிய நடை.. இதை கீரன் அவர்கள் பாணியில்” சொப்பனம் ஆவது? கிப்பன மாவது! ராமன் வந்தால் என்ன? பீமன் வந்தால் என்ன? நான் சுக்ரீவனை கசக்கிப் பிழிந்து தூளாக்கி ஃபூ என்று ஊதி விடுவேன்” என்று சொன்னான்.. இப்படி சொல்வார்.. அதாவது இலக்கிய பாணியில் சொன்னால் அடிமட்ட வர்க்கத்தினருக்கும் சென்றடையாது என்ற எண்ணத்தில் சரளமான வழக்கில் அவர் சொல்வார்.. அதாவது இதனை ஆங்கிலத்தில் “கலோக்கியல் ஸ்லாங்” என்று சொல்வார்கள்..
இந்த மூன்று வகை வாலிகளையும் கம்பன் பாடல்களில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்களுடன் அவர் விளக்கியது..ஒரு சிறு நூலாக வெளியாகியுள்ளது.. புலவர் கீரன்,செல்வமணி கீரன் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை ஏற்படுத்தி அதன் மூலம் தனது உரைகளை நூல் வடிவிலும் சிடி வடிவில் வெளியிட்டு வந்தார்.
அவரது நூல்கள் தற்போது பரவலாக விற்பனையில் இல்லை..அது மட்டுமல்லாமல் அவரது பேச்சுக்கள் கூட பரவலாக விற்பனையில் இல்லை..
இவர் 1990 இல் தனது 55-வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.. இவர் மறைந்தாலும் அவரது உரைகள் ஒருசில கிடைக்கப்பெற்றால் வாசகர்கள் அதனை தயவுசெய்து கேட்டு அவரது சொல் நயத்தினையும் சொற்பொழிவின் பாங்கையும் கேட்டு மகிழலாம்…முயற்சி செய்யுங்கள்..