இந்து சமயத்தைச் சேர்ந்த நாம் அனைவரும் ஒரு நல்ல செயல் செய்வதென்றால் நாள் மற்றும் நட்சத்திரம் பார்த்துதான் செய்கின்றோம்.. சில நாட்களுக்கு நல்ல பயன் உண்டு.. ஜோதிட சாஸ்திரங்களில் அடிப்படையை நேரம் குறித்து செய்யக்கூடிய செயல்கள் பல தன்மையில் முடிந்துள்ளன..
சுப காரியங்களுக்கு நட்சத்திரத்தையும் அசுப காரியங்களுக்கு திதிகளையும் நாம் கணக்கில் வைத்துக் கொள்கிறோம்.. உதாரணமாக ஒருவர் பிறந்த நாளை நட்சத்திரத்தை வைத்து கொண்டாடுவதும், ஒருவரின் இறந்த நாளை திதியை வைத்து அனுசரிப்பதும் நம்மில் வழக்கமான நடைமுறையாகும்.. ஆனால் இறைவனுக்கு இதில் விதிவிலக்கு உண்டு.. ஸ்ரீராமர் பிறந்ததை ராமநவமி யிலும் கிருஷ்ணர் பிறந்ததை கோகுலாஷ்டமியிலும் கொண்டாடுகிறோம்..
ராசி சக்கரம் என்பது 12 ராசி மண்டலங்கள் நவக்கிரகங்கள் பன்னிரு வீடுகள் 27 நட்சத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஜோதிட பொறியாகும்.. இந்த இராசிச் சக்கரம் 12 ஆக பிரிக்கப்படுகிறது.. இதற்கு வீடுகள் என்று பெயர்..மேற்கத்திய நாடுகளில் வட்ட வடிவில் இந்த ராசி சக்கரம் அமைக்கப்படுகிறது.. ஆனால் இந்து ஜோதிட முறையில் இவை கட்டங்களாக அமைக்கப்பட்டுள்ளன..
குறிப்பிட்ட நட்சத்திரம் என்பது ராசி சக்கரத்தை 27 சம பங்குகளாக பிரிக்கப்பட்ட பிரிவுகளை குறிக்கும்.. ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் ஓரை என்பர்..ஒரு நட்சத்திரம் என்பது பஞ்சாங்கத்தின் ஒரு உறுப்பாக வரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் நிற்கும் நாள் நட்சத்திர பிரிவை இப்பெயர் குறிக்கின்றது..உதாரணமாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் ராசி சக்கரத்தில் ரேவதி நட்சத்திர பிரிவில் இருந்தால் அந்த நேரத்தை கூறிய நட்சத்திரம் ரேவதி ஆகும் எனவே வானத்தில் சந்திரன் நிற்கும் நட்சத்திரக் கூட்டம் உள்ள நேரம் அந்த நட்சத்திரமாக அமைகிறது..
முழு ராசி சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாக பிரிக்கப்பட்டு ஒரு நட்சத்திர பிரிவு 13.33 பாகை அளவு உள்ளது..13.33 பாகை என்பது 13 டிகிரி 20 பாகைத் துளி(நிமிட வளைவுகள்)..
பூமியின் 360 டிகிரி சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை.. ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்களைக் கொண்டவை.. ஒவ்வொரு பாதமும் 3 பாகை 20 பாகை துளிகள் கொண்டவை..
அதேபோன்று திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்.. அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள்.. அதாவது ஒரே நேர்கோட்டில் இருப்பார்கள்.. அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகிச் செல்வார்.. திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.. இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன.. இவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும்..
அமாவாசை நாளன்று முன்னரே சொன்னது போல சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் அதாவது ஜீரோ டிகிரியில் காணப்படுவார்கள்.. அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது.. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும்.. பதினைந்தாம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருக்கும்.. அப்போது சூரியனின் முழு பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது.. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும்.. இந்நிலை 15 நாட்கள் தொடரும்..பௌர்ணமிக்குப் பிறகு இதேபோன்று தினமும் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து அருகில் சென்று ஒரே நேர்கோட்டில் அமையும்.. அந்த நாள் அமாவாசை என்று கருதப்படும்..
இனி வராக புராணத்தில் திதிகளைப் பற்றி சொல்லி இருப்பது என்ன என்று பார்ப்போம்..
சத்ய யுகத்தில் இந்த கதை இடம்பெற்றது.. அரசன் சுப்ரதிகாவிற்கும் , வித்யத்பிரபாவிற்கும் மகனாகப் பிறந்தவன் துர்ஜயா.. இவன் துர்வாசரிடமிருந்து வரமும் சாபமும் பெற்றவன்.. அவர் கொடுத்த வரத்தின் படி இவன் யாராலும் வெல்ல முடியாதவன்.. அவர் கொடுத்த சாபத்தின் படி இவன் கல் போன்ற மனதை உடையவன்.. ஒரு சமயம் ஸ்வயம்பு மனுவின் மகன்களான ஹத்தி,சுஹத்ரி இருவரும் பெரும் படையுடன் சென்று தேவர்களை அழிக்க ஆரம்பித்தனர்.. அச்சமயம் விஷ்ணு எண்ணிலடங்காத உருவம் எடுத்து அவர்களை சுமேரு மலையில் சண்டையிட்டு வென்றார்.. போரின் இறுதியில் ஹத்ரி, சுஹத்ரி ஆகிய இருவர் மட்டுமே மீதம் இருந்தனர்.. அவர்களும் மந்திரமலைக்கு ஓடி விட்டனர்.. அங்கு ஹத்ரியின் மகள் சுகேசியும், சுஹத்ரியின் மகள் மிஸ்ரகேசியும் இருந்தனர்.. மந்தர மலைக்கு வந்த துர்ஜயன் அந்த இருவரையும் கண்டு மயங்கி அவர்களை திருமணம் செய்து கொண்டான்.. அவனுக்கு இரு மக்கள் தோன்றினர்..
இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்ப்போம்…
மீண்டும் சந்திப்போம்