சோழவள நாட்டிலே, கமலாபுரம் என்று சொல்லக்கூடிய திருவாரூரிலே கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியார் என்பவர்.. அவருக்கு திருமகளாக அவதரித்தவர் இசைஞானியார்.. சிறுவயது முதல், சிறந்த சிவபக்தராக திகழ்ந்தார்..
உடலை வருத்தி தவம் செய்யாமல், கோவில்குளம் என்று கட்டாமல், சிவனடியாருக்கு தொண்டு ஏதும் செய்யாமல், நாயன்மார் வரிசையில் இசைஞானியார் சேர்ந்தார்.. அது எவ்வாறு என்று நாம் பார்ப்போம்..
தமிழன்னையின் வடிவங்களான இயல், இசை, நாடகம் என்ற முப்பிரிவுகளில், ஒன்றான இசை கேட்டு, புல், பூண்டு முதல் இறைவன் வரை, மயங்காதவர் யாரும் இல்லை.. அமிர்தவர்ஷினி ராகத்திற்கு, மழையை கொண்டுவரும் சக்தி உண்டு என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும்.. பெயரிலேயே இசை இருந்ததனால்,இவரின் இசை ஞானம் வெகுவாக இருந்தது..
மணப்பருவம் எய்தியதும், இவரை திருநாவலூரில்,ஆதி சைவ மரபில் வந்த சிறந்த சிவபக்தரான சடையனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.. கற்புநெறி வழுவாமல் இல்லறத்தை நடத்திய இவர்களுக்கு,சுந்தர மூர்த்தி என்பவர் மகனாய் பிறந்தார்.. சில காலம் போன பின் இத் தம்பதிகளின் மகனான சுந்தர மூர்த்தியை, அந்நாட்டு மன்னன் நரசிங்க முனையர் தம்மோடு அழைத்துப் போக எண்ணிய போது, சடையனார், மன்னரது அன்பிற்குக் கட்டுப்பட்டு, குழந்தையை மறு மொழி பேசாது அனுப்பி வைத்தார்..
இவர்களின் மகன் சுந்தரமூர்த்தி, அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் உட்பட்ட நால்வரின் வரிசையில் சேர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் என்று பெயர் பெற்றார்..சுந்தரமூர்த்தி சுவாமிகள், தாம் பாடியருளிய திருத்தொண்டத் தொகையில், பல இடங்களில், தம் பெற்றோர்களைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளார்..
சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றெடுத்த பெருமைக்காக, அவரது தாயார் இசைஞானியார், தந்தையார் சடைய நாயனார் மற்றும் தத்தெடுத்து வளர்த்த வளர்ப்பு தந்தை நரசிங்க முனையரையர் ஆகியோரும் 63 நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழாரால் சேர்க்கப்பட்டனர்.. திரு மகனை பெற்றெடுத்தால், பெருமைக்கும் பெருமை உண்டு அல்லவா?..
இவரது குடும்பமே நாயன்மார்கள் குடும்பமாக கருதப்பட்டது..

இறைத்தொண்டு ஆற்றி, பின்னர்இசைஞானியாரும் சடையனாரும் இறைவனடி சேர்ந்தார்கள்..