பரமாத்மா “ஹரி” என்ற திருநாமத்தின்மற்றொரு பெயராக மாதவன் என்கின்ற பெயருக்கு உண்டான பெருமைகளைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கின்றோம்..

விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 73வது பெயராக வந்த மாதவன் என்ற திருநாமத்தில் பெருமையை பற்றி சென்ற பதிவில் கூறியிருந்தேன்..அதனைத் தொடர்ந்து அதே 73-வது பெயரின் பெருமைகளை இப்போது பார்ப்போம்..
மகாலட்சுமியின் ஸ்வரூபம், தோஷம் அற்றதாகவும், ஞானம் மற்றும் ஆனந்த மயமாகவும் உள்ளது.. அவளது ஐஸ்வர்யங்கள், உயர்ந்ததாகவும், எல்லையற்றதாகவும் உள்ளது.. இவளே அனைத்து உலகிற்கும் தாயாக உள்ளாள்.. இவளுக்கு பரமாத்மாவுடன் உள்ள சம்பந்தம் எல்லையற்ற காலமாகவே உள்ளது.. அது அழியாத சம்பந்தமாகும்.. இவை அனைத்தும் வேதங்கள் ஸ்ரீ ஸுக்தம்,ச்ரத்தாஸுக்தம், மேதா ஸூக்தம், உத்தர நாராயணம், கௌஷீதகீ ப்ரம்மணம் போன்ற பலவற்றிலும் ஓதப்பட்டுள்ளன.. விஷ்ணு புராணத்தில், அமிர்தம் பெறும் பொருட்டு, திருப்பாற்கடலை கடைந்த நிகழ்வை கூறும் பகுதியில், இந்திரன் மகாலட்சுமியை துதிக்கும் வரியானது பின்வருமாறு தொடங்குகிறது (1-8-17):
“ நித்தியைவ ஏஷா ஜகந்மாதா விஷ்ணோ: ஸ்ரீ: அநபாயிநீ யதா ஸர்வகதோ விஷ்ணு: ததைவ இயம் த்விஜோத்தம-“ அந்தணரே! உலகின் தாயான இந்த மகாலட்சுமி நித்தியமாக இருப்பவள்.. ஒரு நொடி கூட மகாவிஷ்ணுவை பிரியாமல் உள்ளவள்.. மகாவிஷ்ணு எவ்விதம் வியாபித்து உள்ளாரோ அதுபோன்று இவளும் எங்கும் வியாபித்து உள்ளாள்- என்று உள்ளது..
பிரம்ம புராணம் கீழே உள்ள வரிகளை கூறுகிறது:
“தச்சக்தி: துர்ஜயா பீமா விஷ்ணு சக்தி: இதி ஸ்ம்ருதா
ஸர்வபூத ஹ்ருதப்ஜஸ்தா நாநாரூப தரா பரா
ப்ராணக்யா மந்த்ரமாயா ச விச்வசஸ்யஜநநீ த்ருவா
தேவி பிந்நாஞஜன ச்யாமா நிர்குணா வ்யோம ஏவ ஹி”
இதன் பொருள்:- மகாலட்சுமியின் சக்தியை யாராலும் வெல்ல இயலாது.. அது அனைவரையும் நடுங்கச் செய்யும் தன்மை கொண்டது.. மகாவிஷ்ணுவின் சக்தி என்றே மகாலட்சுமியை சாஸ்திரங்கள் கொண்டாடுகின்றன..

அனைத்து உயிர்களின் இதயங்களில் அவளும் எம்பெருமான் போன்று வீற்றுள்ளாள்.. உலகில் உள்ள பல பொருள்களின் ரூபங்களை தரித்துள்ளாள்.. இதனால் அவை அனைத்தையும் விட மேம்பட்டவளாக உள்ளாள்.. இந்த உலகை வாழ வைப்பதால் ப்ராணன் என்று பெயர் பெற்றாள்.. அனைத்து மந்திரங்களையும் பெற்று எடுத்த தாய் அவளே ஆவாள்.. அனைத்து உலகிற்கும் அவளேத் தாயாக உள்ளாள்.. அவள் குழைக்கப்பட்ட மை போன்ற நிறம் கொண்டவள்.. அனைத்து இடங்களிலும் வியாபித்துள்ள போதிலும் எந்தவிதமான தோஷமும் இல்லாத காரணத்தால் ஆகாயம் போன்று நிர்மலமாக உள்ளாள்..
“ததைவ ஏகா பராசக்தி: ஸ்ரீ: தச்ய கருணாச்ரயா
ஜ்ஞாநாதி ஷாட்குண்யமயீ யா ப்ரோக்தா ப்ரக்ருதி: பரா
ஏகைவ சக்தி: ஸ்ரீ: திவ்ய த்விதீயா பரிவர்த்ததே
பராவரேண ரூபேண ஸர்வாகாரா ஸநாதநீ
அவங்க நாமதேயா ச சக்தி சக்ரஸ்ய நாஸிகா
ஜகத் சராசரம் இதம் ஸர்வம் வ்யாப்ய வ்யபஸ்திதா”
இதன் பொருள்:-. அவளே உயர்ந்த சக்தியாக உள்ளாள்.. எம்பெருமானாரின் கருணைக்கு இருப்பிடமாக உள்ள ஒப்பற்ற சக்தி ரூபமாக உள்ளாள்.. ஞானம், சக்தி முதலான ஆறு குணங்களுடன் கூடியவளாக உள்ளாள்.. அவளே அனைத்திற்கும் முழு முதல் காரணமாக உள்ளதால் பராப்ரக்ருதி எனப்படுகிறாள்.. சற்றும் மாறுபாடு அடையாத ஒரு சக்தி சொரூபமாக உள்ளாள்.. இவளது மற்றோர் அம்சமான இரண்டாவது சக்தியானது ஜகத்ரூபமாக பரிணாமம் பெறும்போது மாற்றமடைகிறது.. பரம், அபரம்(உயர்ந்தவை, தாழ்ந்தவை) என்று பலவிதமாக உள்ளாள்.. எல்லையற்ற திருநாமங்களை கொண்டவளாகவும் உள்ளாள்.. அசையும் மற்றும் அசையா பொருட்கள் என்று சேதனம்மற்றும் அசேதனம் என்றும் அனைத்திலும் வியாபித்து உள்ளபோதும் எந்தவிதமான தோஷமும் இன்றி உள்ளாள்..

லட்சுமி சகஸ்ரநாமம் கீழே உள்ளபடி உரைக்கிறது..
“ மஹாவிபூதே: ஸம்பூர்ண ஷாட் குண்ய வபுஷே ப்ரபோ:
பகவத் வாஸுதேவஸ்ய நித்யேவ ஏஷா அநபாயிநீ
ஏகைவ வர்த்ததே சிந்தா ஜ்யோத்ஸ்தேவ ஹிமதீதிதே:
ஸர்வ சக்த்யாத்மிகா சைவ விச்வம் வியாப்ய வ்யவஸ்திதா
ஸர்வைச்வர்ய குணோபேதா நித்யம் தத்தர்ம தர்மிணீ
ப்ராணசக்தி: பரா ஹி ஏஷா ஸர்வேஷாம் ப்ராணிநாம் புவி
சக்தீநாம் சைவ ஸர்வாஸாம் யோநிபூதா பரா கலா
யஸ்மாத் லக்ஷ்ம்யம்ச ஸம்பூதா: சக்த்யோ விச்வகா: ஸதா
காரணத்வேந நிஷ்டந்தி பக்தி அஸ்மிந் ததாஜ்ஞாயா
தஸ்மாத் ப்ரீதாஜகந்மாதா ஸ்ரீ: யஸ்ய அச்யுதவல்லபா
ஸுப்ரிதா: சக்த்ய: தஸ்ய ஸித்திம் கல்யாணம் நிசந்தி”
இதன் பொருள்:- நித்ய விபூதி, லீலா விபூதி என்னும் இரண்டு பெரிய செல்வம் உடையவனும், பூரணமாக உள்ள ஆறு குணங்களை எப்போதும் ஸ்வபாவமாக உள்ளவனும் ஆகிய வாசுதேவனை எப்போதும் பிரியாமல் நித்தியமாக உள்ளவள் மகாலட்சுமி ஆவாள்.. அவனுடன் உள்ளபோது சந்திரன் போன்று வேறாக உள்ளாள்.. அனைத்து உலகங்களையும் வியாபித்து, அனைத்து சக்திகளையும் கொண்ட சொரூபிணியாகவும் உள்ளாள்.. எம்பெருமானைப் போன்றே இவளும் ஐஸ்வர்யம் போன்ற குணங்களுடன் கூடியவள் ஆவாள்.. அவனது தர்மத்தையே தனது தர்மமாகவும் கொண்டவள் ஆவாள்.. இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களின் ப்ரா சக்தியாகவும், அந்த சக்திகளில் உயர்ந்த சக்தியாக இவளே உள்ளாள்..இந்த உலகத்தில் உள்ள அனைத்து சக்திகளும் இவ்வளவு அம்சமே.. இந்த உலகத்தில் நடக்கும் செயல்கள் அனைத்திற்கும் அந்த சக்திகளை அவளது ஆணைக்குக் கட்டுப்பட்டு காரணமாக உள்ளன.. இப்படிப்பட்ட காரணத்தினால் மகாலட்சுமி யார் ஒருவனிடம் அன்புடன் உள்ளாளோ அந்த ஒருவனிடம் இவ்வளவு அம்சங்களாகவே உள்ள அனைத்து சக்திகளும் பிரியத்துடன் உள்ளன.. அவன் விரும்பும் பயனை அவனுக்கு அவை அளித்து விடுகின்றன..
வைஷ்ணவ ஸ்ம்ருதி மற்றும் பல தர்ம சாஸ்திரங்களில் மகாலட்சுமியின் மேன்மைகளை பரிபூரணமாகக் காண இயலும்.. ராமாயண முழுவதிலும் இவ்விதமே கூறப்படுகிறது என்பதற்கு பால காண்டம் (4-7)-“காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயா: சரிதம் மஹத்”-ராமாயணம் என்னும் காவிய முழுவதும் மேன்மையுடைய சீதையின் சரிதமே கூறப் படுகிறது என்ற வரியே சான்றாகும்..
விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 169ஆவது பெயராக வரும் மாதவ: என்ற திருநாமத்தில் பரமாத்மா பற்றிய ஞானத்தை எங்கும் பரப்புபவன் தன்னைப் பற்றிய விஷயமான பரமாத்ம ஞானத்தை பரப்புவதால் மாதவன் என அழைக்கப்படுகிறான்.. “மாவித்யா ச ஹரே: ப்ரோக்தா தஸ்யா ஈசோ யதோ: சவால் தஸ்மாத் மாதவ நாமா அஸி தவ: ஸ்வாமி இதி சப்தித:”
ஸ்ரீஹரியின் வித்யை என்பது “மா” எனப்படுகிறது.”தவ” என்றால ஸ்வாமி என்று பொருள் தரும்.. வித்யைக்கு ஈஸ்வரன் என்பதால் மாதவன் எனப்படுகிறாய்-மகாபாரதம் உத்யோக பருவம் (69-4)- மௌநாத் தியாநாத் ச யோகாச்ச விக்கி பாரத மாதவம்- பரத வம்சத்தில் உதித்தவனே! மௌனம் தியானம் யோகம் போன்றவற்றால் எம்பெருமானே மாதவன் என்கின்றனர் என்று அறிவாயாக”என்று இந்த பகுதியில் சொல்லப்பட்டுள்ளது..
அடுத்து விஷ்ணு சகஸ்ரநாமத்தில் 741 திருநாமம் ஆக மாதவ: என்று சொல்லும்போது லோகத்திற்கு பந்துவாகும்போது மாதாபிதா லக்ஷ்மிஸஹிதனாய் இருப்பதைக் கூறுகிறது..மது என்னும் பெயர் கொண்ட யாதவ குலத்தில் வந்தவன் என்றும் கொள்ளலாம்..
ஆகவே மாதவன் என்ற திருநாமத்திற்கு லட்சுமியுடன் கூடிய நாராயணன் என்ற திருப்பெயர் ஒரு பெரும் பெருமையாக கருதப்படுகிறது..லக்ஷ்மிக்கு உண்டான அத்தனை கல்யாண குணங்களும் உரியவன் மாதவன் என்று அழைக்கப்படும் ஸ்ரீ ஹரியே ஆகும்..
இனி அடுத்த திருநாமம் ஆன ரிஷிகேசன் என்கிற திருநாமம் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்..
மீண்டும் சந்திப்போம்..